அயோத்தியில் ராமர் கோயில்: கட்டுமான பணி தொடங்கியது

பட மூலாதாரம், Getty Images
தமிழக நாளிதழ்களில் இன்று வெளியான சில முக்கிய செய்திகளை இங்கே தொகுத்தளிக்கிறோம்.
தினத்தந்தி: அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணி தொடங்கியது
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணி சிறப்பு பூஜையுடன் தொடங்கியதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.
"அயோத்தியில், சர்ச்சைக்குரியதாக இருந்த நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சட்ட அமர்வு ராமர் கோயில் கட்ட அனுமதி அளித்து தீர்ப்பு அளித்தது.
மேலும், கட்டுமான பணியை கண்காணிக்க ஒரு அறக்கட்டளை அமைக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி, ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ர டிரஸ்ட் என்ற அறக்கட்டளையை மத்திய அரசு அமைத்தது. அதன் தலைவராக மகந்த் நிருத்ய கோபால் தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
ராமர் கோயில் கட்டுமானத்துக்கான பூமி பூஜை கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. உத்தரப் பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டார். சிலைகள், தற்காலிகமாக வேறு இடத்துக்கு மாற்றப்பட்டன.
இந்நிலையில், நேற்று (புதன்கிழமை) அயோத்தியில் உள்ள ராமஜென்மபூமி இடத்தில் பிரமாண்டமான ராமர் கோயில் கட்டுமான பணி தொடங்கியது. முதலில், காலையில், ருத்ராபிஷேம் என்ற சிறப்பு பூஜை நடைபெற்றது.

ராமஜென்மபூமியில் உள்ள குபேர் திலா என்ற பழங்கால சிவன் கோவிலில் இந்த சடங்குகள் நடந்தன. அறக்கட்டளையை சேர்ந்த மகந்த் கமல் நயன்தாஸ் தலைமையிலான சாதுக்களும், துறவிகளும் பங்கேற்றனர்.
கருப்பு பசுவின் 11 லிட்டர் பால், சிவலிங்கத்தின் மீது அபிஷேகம் செய்யப்பட்டது. எவ்வித இடையூறும் இல்லாமல் கட்டுமான பணி நடக்க வேண்டும் என்று துறவிகள் வேண்டிக்கொண்டனர்.
பின்னர், கோயில் கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. அதன் அடையாளமாக முதல் செங்கல் எடுத்து வைத்து கட்டுமான பணி தொடங்கியது" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டைம்ஸ் ஆஃப் இந்தியா: "மத்தியப் பிரதேசத்தை போல ராஜஸ்தானிலும் ஆட்சியை குலைக்க முயற்சி"

பட மூலாதாரம், Getty Images
வரும் ஜூன் 19-ஆம் தேதி, ராஜஸ்தானில் மாநிலங்களவை தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், தனது கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆதரவு எம்எல்ஏக்களை ஜெய்பூருக்கு அருகேயுள்ள ரிசார்ட் ஒன்றுக்கு ஆளும் காங்கிரஸ் மாற்றியுள்ளதாக 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' நாளேட்டில் வெளிவந்த செய்தி தெரிவித்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தெடுக்கப்பட்ட தங்களின் அரசை கவிழ்க்க திட்டம் நடக்கிறதோ என்ற எண்ணமும், அச்சமும் தங்களுக்கு உள்ளதாக காங்கிரஸ் தலைவர்கள் குறிப்பிட்டதாக அந்த செய்தி மேலும் விவரிக்கிறது.
மாநிலங்களைவை தேர்தலில் கட்சியின் கட்டளையை மீறி செயல்படவும், ஆட்சியை குலைக்கும் முயற்சிகளில் உதவவும், தங்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு லாபம் அளிக்கும் பல வாய்ப்புகள் மற்றும் வெகுமதிகள் தரப்படும் என்று உத்தரவாதம் தரப்பட்டதாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிலர் தெரிவித்துள்ளனர்.
ஜூன் 19-ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடக்கவுள்ளதால், இந்த எம்எல்ஏக்கள் அனைவரும் அதே ரிசார்ட்டில் ஜூன் 18-ஆம் தேதி வரை தங்க வைக்கப்படுவர்.
மேலும், தங்கள் கட்சி மற்றும் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களை காப்பாற்ற, காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரான ரந்தீப் சிங் சுர்ஜீவாலா உள்ளிட்ட மத்திய காங்கிரஸ் தலைவர்கள் ஜெய்பூருக்கு சென்றுள்ளனர்.
கடந்த மார்ச் மாதத்தில், மத்தியப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகியதால், கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி அந்த மாநிலத்தில் கவிழ்ந்தது.
இது போன்ற ஒரு முயற்சி ராஜஸ்தானிலும் அரங்கேற்றப்பபடலாம் என்ற எச்சரிக்கையுடன், மாநிலங்களவை தேர்தலை காங்கிரஸ் கட்சி அணுகுவதாக அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி: 6.74 கோடி குடும்ப உறுப்பினா்களுக்கு முகக்கவசங்கள்

பட மூலாதாரம், Getty Images
தமிழகத்தில் நியாய விலைக் கடைகள் மூலம் 2.08 கோடி குடும்ப அட்டைதாரா்களைக் கொண்ட 6.74 கோடி குடும்ப உறுப்பினா்களுக்கு ஒரு ஜோடி முகக் கவசங்கள் வழங்கப்பட உள்ளன. இதற்கான விலைகளை நிா்ணயிக்க தனிக் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள நியாய விலைக் கடைகள் மூலமாக குடும்ப அட்டைதாரா்களுக்கு முகக்கவசங்கள் விலையில்லாமல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. துணியாலான ஒரு ஜோடி முகக் கவசங்கள், குடும்ப அட்டையில் பெயா் இடம் பெற்றிருக்கும் ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட உள்ளன.
தமிழகத்தில் 2.08 கோடி குடும்ப அட்டைகள் உள்ளன. இந்தக் குடும்ப அட்டைகளில் 6 கோடியே 74 லட்சத்து 15 ஆயிரத்து 899 குடும்ப உறுப்பினா்கள் உள்ளனா். அவா்களுக்கு ஒரு ஜோடி முகக்கவசங்கள் என்ற அடிப்படையில் 13 கோடியே 48 லட்சத்து 31 ஆயிரத்து 798 முகக்கவசங்கள் வாங்கி வழங்கப்பட உள்ளன.
இந்த முகக்கவசங்களுக்கான விலைகளை நிா்ணயிப்பதற்கான தனிக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழு விலைகளை நிா்ணயித்து தோ்வு செய்து தரும் தகுதி வாய்ந்த ஒப்பந்ததாரா்களுக்கு முகக்கவசங்களை அளிப்பதற்கான பணிகள் வழங்கப்படும் என்று தலைமைச் செயலாளா் க.சண்முகம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளாா்" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












