பத்தாம் வகுப்புத் தேர்வு வழக்கு: ஜூன் 11ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

பட மூலாதாரம், Getty Images
பத்தாம் வகுப்புக்கான பொதுத் தேர்வை ஒத்திவைக்க வேண்டுமெனக் கோரி நடந்துவந்த வழக்கு ஜூன் 11ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வுகளை ஜூன் 15ஆம் தேதி நடத்த மாநில பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் கொரோனா பரவலின் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ஜூன் 1ஆம் தேதி நடக்குமென அறிவிக்கப்பட்டது. அதற்குப் பிறகு, ஜூன் 10ஆம் தேதிக்கு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.
இந்த நிலையில், தமிழ்நாடு உயர்நிலை - மேல் நிலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை ஒத்திவைக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தது.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் வினீத் கோத்தாரி - சுரேஷ் குமார் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணை வீடியோ கான்ஃபரன்சிங் முறையில் நடைபெற்றது.
தமிழக அரசின் சார்பில் ஆஜரான அரசு கூடுதல் வழக்கறிஞர் முனுசாமி, மாணவர்களின் பாதுகாப்பிற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதாகவும் ஏற்கனவே தேர்வுகளை இரண்டு முறை ஒத்திவைத்துவிட்டதால், மறுபடியும் ஒத்திவைக்க முடியாது எனக் கூறினார்.


பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், சென்னையில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில், தேர்வை மேலும் ஒரு மாதத்திற்கு ஒத்திவைக்க வேண்டுமெனக் கோரினர்.
இதைக் கேட்ட நீதிபதிகள் மாணவர்களின் எதிர்காலத்தைவிட, அவர்களது உயிர் முக்கியமானது என்றும் தற்போதைய சூழலில் அவர்களின் தலைக்கு மேல் கத்தி தொங்குவதைப் போல இருக்கிறது என்றும் கருத்து தெரிவித்தனர். தேர்வை ஏன் ஒத்திவைக்கக்கூடாது என்றும் கேள்வி எழுப்பினர்.
தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் இன்று ஆஜராகாததால், தேர்வை ஒத்திவைக்க முடியுமா எனக் கேட்டு, பிற்பகல் 2.30 மணிக்குள் தெரிவிக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
மதியம் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயாணன் நீதிமன்றத்தில் ஆஜரானார். அவர் வாதிடும்போது, "தற்போதுதான் தமிழ்நாட்டில் தேர்வை நடத்துவதற்கு சரியான நேரம். நாட்கள் செல்லச் செல்ல கொரோனாவின் பாதிப்பு அதிகரிக்கும். அடுத்த சில நாட்களில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சமாக உயர்வதற்கான வாய்ப்பு இருப்பதாக நிபுணர் குழுவின் அறிக்கை தெரிவிக்கிறது. தமிழ்நாட்டில் கொரோனாவின் உச்சகட்டமாக அக்டோபர் - நவம்பர் மாதங்கள் இருக்கலாம். ஆகவே தற்போதுதான் தேர்வை நடத்த சரியான தருணம். மாணவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாகச் செய்யப்பட்டுள்ளன. தேர்வை நடத்த மத்திய அரசும் அனுமதி அளித்துள்ளது. தேர்வை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் முழுமையாகக் கடைப்பிடிக்கப்படும்" என்று வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், சுமார் 9 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதுகிறார்கள். ஆசிரியர்கள் உட்பட 3 லட்சம் பணியாளர்கள் தேர்வுப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். அவர்களுக்கு ஏதாவது நேரிட்டால் யார் பொறுப்பு எனக் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த அரசு வழக்கறிஞர் விஜய் நாராயணன், இது தொடர்பாக தாங்கள் ஒரு விரிவான திட்டத்தை வைத்திருப்பதாகவும் எவ்வித பாதிப்புமின்றி தேர்வு நடைபெறுமென்றும் தற்போதுதான் தேர்வை நடத்த சரியான தருணமென்றும் இது தொடர்பாக விரிவான அறிக்கையை தாக்கல்செய்வதாகவும் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
மேலும் இது தொடர்பாக மேலும் பல வழக்குகள் ஜூன் 11ஆம் தேதி விசாரணைக்கு வரவிருப்பதால் அன்று விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்வதாக தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து இந்த வழக்கை ஜூன் 11ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அப்போது இந்த விவகாரம் தொடர்பாக விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்யும்படி நீதிமன்றம் தமிழக அரசிடம் கூறியுள்ளது.
இதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத் தலைவர் மாயவன், இன்று தேர்வுக்கான ஹால் டிக்கெட் வழங்கும்போது சில பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் கூட்டம் கூட்டமாக இருந்ததாகச் சுட்டிக்காட்டினார். ஆகவே தேர்வை ஒத்திப்போடுவதுதான் சரியாக இருக்குமெனத் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் சுமார் 9 லட்சம் மாணவர்கள் பத்தாம் வகுப்புத் தேர்வை எழுத உள்ளனர்.
கொரோனா பரவல் அதிகம் உள்ளதால், பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வை ஒத்திவைக்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிற செய்திகள்:
- கொரோனா பாதிப்பில் சீனாவை விஞ்சிய மகாராஷ்டிரா - சர்வதேச நிலவரம் என்ன?
- இந்தியாவில் இன்று முதல் திறக்கப்படும் வழிபாட்டுதலங்கள், ஷாப்பிங் மால்கள் - சில முக்கிய தகவல்கள்
- 'வந்தே பாரத்' விமானங்களின் கட்டணம் உயர்வு: வெளிநாடுகளில் தவிக்கும் இந்தியர்கள்
- ''அரசியலமைப்பு சட்டத்திலிருந்து திசைமாறிச் செல்கிறார் டிரம்ப்'' - குடியரசு கட்சிக்குள் எழுந்த எதிர்ப்பு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












