மருத்துவமனையில் இடமில்லை: ஆம்புலன்சிலேயே இறந்த கர்ப்பிணி பெண்

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தி இந்து (ஆங்கிலம்) - 13 மணிநேர போராட்டம்: ஆம்புலன்சிலேயே இறந்த கர்ப்பிணி பெண்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 13 மணி நேரமாக மருத்துவ உதவி கிடைக்காமல் எட்டு மாத கர்ப்பிணி பெண் ஆம்புலன்ஸிலேயே உயிரிழந்தார் என தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

உயிரிழந்த நீலமும் அவரது கணவர் விஜேந்தர் சிங்கும் உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவை சேர்ந்தவர்கள். 30 வயதாகும் நீலம் எட்டு மாத கர்ப்பிணி. இவர் அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஆலோசனை கேட்டு வந்துள்ளார்.

வெள்ளிகிழமையன்று நீலமுக்கு வலி ஏற்பட்டதும் மருத்துவமனைக்கு கூட்டி சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்ததால் ஆம்புலன்ஸில் ஏற்றி, அரசு மருத்துவமனை உட்பட எட்டு மருத்துவமனைக்கு சென்று பார்த்துள்ளனர். ஆனால் எந்த மருத்துவமனையிலும் படுக்கை இல்லாத காரணத்தினால் அவர் ஆம்புலன்ஸிலேயே உயிரிழந்துள்ளார்.

"முதலில் ஈஎஸ்ஐ மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம். பின்னர் ஷார்தா மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம். பின்னர் கிரேட்டர் நொய்டாவில் இருக்கும் அரசு மருத்துவமனையான ஜிஐஎம்எஸ் மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம் ஆனால் எங்கேயும் அவரை அனுமதிக்கவில்லை", என நீலமின் கணவர் தெரிவித்துள்ளார்.

கடைசியில் ஜிஐஎம்எஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வென்டிலேட்டரில் வைக்கப்பட்டபோது, அவரது உயிர் ஏற்கனவே பிரிந்திருந்தது.

இது குறித்து விசாரணை நடத்த கௌதம் புத் நகர் மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நடுவர் உத்தரவிட்டுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினத்தந்தி: உணவில் வெடி மருந்து வைத்து கர்ப்பிணி பசுவுக்கு தந்த கொடூரம்

இமாச்சல பிரதேசத்தில், கர்ப்பிணி பசுவுக்கு கோதுமை மாவு உருண்டைக்குள் வெடிமருந்து வைத்து கொடுத்ததில் அதன் வாய் சிதைந்து காயம் அடைந்ததாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

சமீபத்தில் கேரளாவில் உள்ள பாலக்காடு பகுதியில் கர்ப்பிணி யானைக்கு சிலர் அன்னாசி பழத்துக்குள் வெடி மருந்துகளை சாப்பிட கொடுத்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியிருந்தது.

இந்நிலையில் தற்போது இமாச்சல பிரதேசத்திலும் இது போல ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது. பிலாஸ்பூர் மாவட்டம் ஜன்துட்டா பகுதியில், கர்ப்பிணி பசுவுக்கு, கோதுமை மாவு உருண்டைக்குள், வெடி வைத்து கொடுக்கப்பட்டுள்ளது. அதனை கடித்த பசுவின் வாய் சிதைந்து படுகாயமடைந்தது. இந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பசுவின் உரிமையாளர் குர்தயால் சிங் காயமடைந்த கர்ப்பிணி பசுவின் வீடியோவை சமூக ஊடகங்களில் பதிவேற்றினார்.

இச்சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் மே 26-ம் தேதி நடைபெற்றதாக கூறப்படுகிறது.

பசுவின் உரிமையாளர் இந்த கொடூரமான செயலுக்கு தனது அண்டை வீட்டார் தான் காரணம் என குற்றம்சாட்டி உள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி: தமிழ்நாட்டில் உணவகங்கள் திறப்பதற்கான விதிமுறைகள் என்னென்ன?

தமிழகத்தில் ஜூன் 8 முதல் உணவகங்கள் திறக்கவுள்ள நிலையில் தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளதாக என தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி,

  • உணவகங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு கண்டிப்பாக உடல் வெப்ப பரிசோதனை செய்ய வேண்டும்.
  • உணவங்களில் 50% இருக்கைகளில் மட்டுமே வாடிக்கையாளர் அமர்ந்து உண்ண அனுமதி.
  • உணவகங்களில் சாப்பிடும் டேபிள்களுக்கு இடையே 1 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும்
  • உணவகங்களில் ஏசி பயன்படுத்தக் கூடாது; ஜன்னல்கள் திறக்கப்பட்டு காற்றோட்டமாக இருக்க வேண்டும்.
  • உணவங்களில் உள்ள கழிவறைகளை நாள்தோறும் 5 முறை கிருமி நாசினியால் சுத்தப்படுத்த வேண்டும்.
  • ஊழியர்கள் அனைவரும் முககவசம், கையுறை கட்டாயம் அணிந்திருக்க வேண்டும்
  • கொரோனா தொற்று அறிகுறி, உடல்நல பாதிப்பு உள்ள வாடிக்கையாளர்கள் உணவகம் செல்வதை தவிர்க்க வேண்டும்.
  • கை கழுவும் இடத்தில் கிருமி நாசினி, சோப்பு இருக்க வேண்டும் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: