You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை 30,000த்தை கடந்தது
தமிழகத்தில் இன்று (ஜூன் 6) புதிதாக 1,458 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளதால், கோவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30,152-ஆக உயர்ந்துள்ளது.
இதில் சென்னையில் மட்டும் ஒரே நாளில் 1,146 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனாவால் இன்று 19 நபர்கள் இறந்துள்ள நிலையில், இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 251-ஆக உயர்ந்துள்ளது என மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இன்று இறந்த 19 நபர்களில் பெரும்பாலானவர்கள், நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் நாள்பட்ட வியாதிகளான உயர் ரத்தஅழுத்தம், சிறுநீரக கோளாறு, பல உறுப்புகள் செயலற்ற நிலை, மூச்சுதிணறல் மற்றும் சர்க்கரை நோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று பாதிப்புக்கு உள்ளான 1,458 நபர்களில் 35 நபர்கள் வெளிநாடு மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து திரும்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள், சௌதி அரேபியா, ஐக்கிய ராஜ்ஜியம், கர்நாடகா, டெல்லி, அந்தமான் மற்றும் நிக்கோபர், கேரளா, குஜராத், பிஹார், ஆந்திர பிரதேசம் உள்ளிட்ட இடங்களிலிருந்து தமிழகம் வந்தவர்கள் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அதிக பாதிப்புகளை கொண்டுள்ள சென்னை நகரத்தில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,993ஆக உயர்ந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், இன்று ஒரே நாளில் 1,146நபர்களுக்கு பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. சென்னை மாவட்டத்தை அடுத்து, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும் கொரோனா எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் செயல்படும் 74 கொரோனா சோதனை மையங்களில், இதுவரை 5, 76,643மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன என்றும் இன்று ஒரே நாளில் 16,002 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 633நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியதால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 16,395 ஆக உயர்ந்துள்ளது.
இத்தாலியை முந்திய இந்தியா
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்ச எண்ணிக்கையாகக் கடந்த 24 மணி நேரத்தில் 9887 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 294 பேர் இறந்துள்ளனர்.
இதன் மூலம் இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 236,657 ஆக உயர்ந்துள்ளது. 6642 பேர் இறந்துள்ளனர் என இந்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, குஜராத், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொற்று உள்ளது. இந்த மாநிலங்களில் 4300க்கும் மேற்பட்ட தொற்றுகள் உள்ளன.
சண்டிகர், கோவா, மணிப்பூர், புதுச்சேரி, லடாக், நாகாலாந்து, அருணாச்சல பிரதேசம் போன்ற மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் குறைந்த எண்ணிக்கையிலான தொற்று உள்ளது. இந்த பகுதிகளில் 1 முதல் 350 தொற்றுகள் உள்ளன.
அதே போல ஹரியானா, ஜம்மு காஷ்மீர், தெலங்கானா, ஒடிசா, பஞ்சாப், அசாம், கேரளா, ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் தொற்று மிதமான எண்ணிக்கையில் உள்ளது. இந்த மாநிலங்களில் 352 முதல் 4300 வரை தொற்று எண்ணிக்கை உள்ளது.
இந்திய அரசால் இதுவரை 45 லட்சத்து 24 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்குப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
உலக நிலவரம் என்ன?
ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகளின் படி உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இந்தியா 6-ம் இடத்தில் உள்ளது.
கிட்டதட்ட 19 லட்ச தொற்றுகளுடன் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அடுத்தடுத்த இடங்களில் பிரேசில், ரஷ்யா, பிரிட்டன், ஸ்பெயின் போன்ற நாடுகள் உள்ளன.
இறப்பு எண்ணிக்கையைப் பொருத்தவரை அமெரிக்காவில் 1 லட்சம் பேரும், பிரிட்டனில் 40 ஆயிரம் பேரும், பிரேசிலில் 34 ஆயிரம் பேரும், இத்தாலியில் 33 ஆயிரம் பேரும் இறந்துள்ளனர்.
அமெரிக்காவில் இறப்பு எண்ணிக்கை குறையாமல், ஒரே நிலையில் தொடர்வது மக்களை கவலையடைய வைத்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 922 பேர் இறந்துள்ளனர்.
2 மில்லியன் தடுப்பூசி
இந்தநிலையில் கோவிட் 19 வைரசைத் தடுக்க 2 மில்லியன் தடுப்பூசிகளை அமெரிக்கா தயார் நிலையில் வைத்துள்ளது என்றும், இதை அதிகளவிலான மக்களுக்கு செலுத்தி சோதிப்பதற்கு முன்பு விஞ்ஞானிகளின் அங்கீகாரத்தைப் பெறுவது முக்கியம் எனவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஆனாலும், இது எந்த மருந்து அல்லது எந்த நிறுவனம் தயாரித்துள்ள மருந்து என்பதை டிரம்ப் விளக்கவில்லை.
இது எப்போது மனிதர்களுக்கு செலுத்தி சோதிக்கப்படும் என்பதற்கான காலவரையறையையும் அவர் கூறவில்லை.
பொது இடங்களில் மாஸ்க் அணியுங்கள்
கொரோனா பெருந்தொற்று பரவாமல் தடுக்க, பொது இடங்களுக்கு செல்லும் போது மக்கள் மாஸ்க் அணிய வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
சில நாடுகள் ஏற்கனவே பொது இடங்களில் மாஸ்க் அணிவதைக் கட்டாயமாக்கியுள்ளன.
கொரோனா வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்குப் பரவுவதை மாஸ்க் குறைக்கும் என்றும், மாஸ்க் அணிவதால் முழு பாதுகாப்புடன் இருப்பதாக மக்கள் உணர வேண்டாம் என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
மலேசியாவில் சிகையலங்கார, அழகு நிலையங்களை திறக்க அனுமதி
மலேசியாவில் இன்று கோவிட்-19 நோயாளி ஒருவர் உயிரிழந்ததை அடுத்து மரண எண்ணிக்கை 117ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 37 பேருக்கு வைரஸ் தொற்றியதை அடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 8,304ஆக அதிகரித்துள்ளது.
இன்று 25 பேர் வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்ததை அடுத்து நோய் கண்டவர்களில் சுமார் 80 விழுக்காட்டினர் அதிலிருந்து முழுமையாக மீண்டிருப்பதாக மலேசிய சுகாதார அமைச்சின் பொது ஆணையர் டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் தற்போது அமலில் உள்ள நிபந்தனைகளுடன் கூடிய பொது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை வரும் 9ஆம் தேதியுடன் முடிவுக்கு வரவுள்ளது. இந்நிலையில் இந்த ஆணை நீட்டிக்கப்படுமா என்பது குறித்து பிரதமர் மொகிதின் யாசின் நாளை அறிவிக்க உள்ளார்.
இதற்கிடையே நாடு முழுவதும் உள்ள சிகையலங்கார கடைகள், அழகு நிலையங்கள் 10ஆம் தேதி முதல் இயங்கலாம் என மலேசிய அரசு அறிவித்துள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு என தனி நேரம் ஒதுக்கப்பட வேண்டும் என்றும், வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று சேவை வழங்குவது வரவேற்கப்படுவதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் பொது, காலை மற்றும் இரவு சந்தைகளும் இயங்கலாம் என தெரிவித்துள்ள அரசு, இதற்காக வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்றவில்லை எனில் கடும் நடவடிக்கை பாயும் என்றும் எச்சரித்துள்ளது.
சிங்கப்பூர் நிலவரம்
கொரோனா வைரசுக்கு எதிராக உலகளவில் நடைபெற்று வரும் போரில் சிங்கப்பூரும் தனக்குரிய பங்களிப்பை அளித்து வருவதாக பிரதமர் லீ தெரிவித்துள்ளார்.
நோய்த் தொற்றுக்கான தடுப்பூசியை கண்டுபிடிப்பதற்காக மேற்கொள்ளப்படும் ஆய்வு முயற்சிகளுக்கு சிங்கப்பூர் அரசு நிதி வழங்குவதாக அவர் கூறியுள்ளார்.
உலக சுகாதார நிறுவனத்துக்கு சிங்கப்பூர் சார்பில் பல்வேறு அத்தியாவசிய மருத்துவப் பொருட்கள், சாதனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், இதற்காக சிங்கப்பூர் இதுவரை 18 மில்லியன் டாலர்கள் நிதி வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்ப கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்படுவதும், பின்னர் தடுப்பூசி தயாரிப்பு மற்றும் விநியோகமும் மிக முக்கியமானவை என்று தெரிவித்துள்ள பிரதமர் லீ, இதற்காக உலகளாவிய அளவில் ஒருங்கிணைந்த நடவடிக்கை அவசியம் என வலியுறுத்தியுள்ளார்.
சிங்கப்பூரில் இன்று புதிதாக மேலும் 344 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அங்கு பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 37,527ஆக அதிகரித்துள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: