புலம்பெயர் தொழிலாளர்கள் பிரச்சனை: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியது என்ன?

இந்தியாவில் சாலைகளில் புலம் பெயர் தொழிலாளர்கள் நடந்து சென்றால், நெடுஞ்சாலைத்துறையின் உதவியுடன் அவர்கள் அருகில் உள்ள ரயில் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு இன்று எழுத்துப்பூர்வமாகப் பதில் அளித்துள்ளது.

கொரோனா பொது முடக்கம் காரணமாக சொந்த ஊர்களுக்குத் திரும்ப முயலும் முயற்சிகளின் போது புலம்பெயர் தொழிலாளர்கள் விபத்து உள்ளிட்ட காரணங்களால் உயிரிழப்பது, உணவு, உறைவிடம் ஆகியவை இல்லாமல் தவிப்பது போன்றவை குறித்த ஊடகச் செய்திகளின் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

இந்த வழக்கு விசாரணையில் ஆஜராகி ஏற்கனவே பதில் அளித்துள்ள மத்திய அரசு, இன்று விவரமான எழுத்துப்பூர்வ பதில் ஒன்றை அளித்தது.

அதில்,புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அவர்களின் தேவைக்கு ஏற்ப இலவசமாக உணவு, குடிநீர், மருந்துகள், உடை, காலணி போன்றவை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அத்துடன், மாநில அரசுகளும், ரயில்வே துறையும் இலவச உணவு மற்றும் குடிநீரை வழங்கியுள்ளன. ஜூன் 1-ம் தேதி வரை ரயில்வே சார்பில் 1.63 கோடி உணவு பொட்டலங்களும், 2.10 கோடி தண்ணீர் பாட்டில்களும் வழங்கப்பட்டுள்ளது’’ எனக் கூறப்பட்டுள்ளது.

எதிர்பாராத கோவிட் 19 பெருந்தொற்று காலத்தில் ஒவ்வொரு உயிருக்கும் முக்கியத்துவம் அளித்து, மத்திய அரசும், மாநில அரசுகளும் உழைத்து வருகின்றன எனவும் அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில வாரங்களுக்கு முன்பு இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த உச்சநீதிமன்றம், புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய மத்திய அரசும் மாநில அரசுகளும் தவறிவிட்டதாகக் கூறியிருந்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: