தீபா, தீபக் ஆகியோர் ஜெயலலிதா சொத்துக்கு நேரடி வாரிசுகள்: சென்னை உயர் நீதிமன்றம்

பட மூலாதாரம், J.Deepa / FACEBOOK
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சொத்து தொடர்பான வழக்கின் தீர்ப்பில், ஜெயலலிதாவின் அண்ணன் மகன் மற்றும் மகளான தீபா மற்றும் தீபக் ஆகியோர் ஜெயலலிதாவின் "இரண்டாம் நிலை வாரிசுகள்" என குறிப்பிடப்பட்டதை 'நேரடி வாரிசு' என மாற்றி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் திருத்தம் செய்து தீர்ப்பளித்துள்ளனர்.
ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க தனி அதிகாரியை நியமிக்கக்கோரி அதிமுக நிர்வாகிகள் புகழேந்தி மற்றும் ஜானிகிராமன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.இந்த வழக்கில் எதிர்தரப்பினராக தீபா, தீபக் சேர்க்கப்பட்டிருந்தனர்.
இந்த வழக்கில், நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் அப்துல் குத்தூஸ் அடங்கிய அமர்வு, ஜெயலலிதாவுக்கு நேரடி வாரிசுகள் இல்லாததால், இந்திய வாரிசு உரிமைச் சட்டப்படி, தீபா மற்றும் தீபக் ஆகியோரை ஜெயலலிதாவின் இரண்டாம் நிலை வாரிசுகளாக அறிவித்திருந்தது. தற்போது அந்த தீர்ப்பில் திருத்தம் செய்து, அவர்கள் இருவரும் நேரடி வாரிசுகள் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற சமீபத்தில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கியுள்ளது என்றும் தீபா மற்றும் தீபக் அங்கு செல்வது சர்ச்சையை ஏற்படுத்தும் என அரசு தரப்பு தெரிவித்தது. இதனை அடுத்து, தீபா மற்றும் தீபக் ஆகியோர் அங்கு செல்வதை விடுத்து, சட்டரீதியாக பிரச்சனையை கையாளவேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images
முன்னதாக, தீபா மற்றும் தீபக் தொடர்ந்த வழக்கில், ஜெயலலிதாவுக்குத் தங்களைத் தவிர ரத்த உறவு யாருமில்லை என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டி, இந்து வாரிசுரிமை சட்டத்தின்படி தங்களை ஜெயலலிதாவின் வாரிசுகளாக அறிவிக்கும்படி கோரியிருந்தனர். ஆனால் இந்த வழக்கில் பதில் மனுவைத் தாக்கல் செய்த தமிழக அரசு, போயஸ் கார்டன் இல்லத்தை, ஜெயலலிதாவின் நினைவு இல்லமாக்க தமிழக அரசு முடிவுசெய்திருப்பதாகவும் கூறியிருந்தது. கடந்த வாரம் இதற்கான பணிகள் தொடங்கியுள்ளன.
கடந்த மே22ம்தேதி ஜெயலலிதாவின் வேதா நிலையம் வீட்டை நினைவில்லமாக மாற்றுவதற்கு நிலத்தை கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது என்றும் நினைவு இல்லம் அமைக்க அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் தமிழக அரசு அறிவித்தது.
நினைவு இல்லம் அமைப்பதற்காக அந்த அமைப்பின் தலைவராக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம், செய்தி மக்கள் தொடர்பு துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, அரசு அதிகாரிகள் உறுப்பினர்களாக செயல்படுவார்கள் என்றும் தெரிவித்தது.
வேதா நிலையத்தையும், அங்குள்ள பொருட்கள், நகைகள், புத்தகங்கள் உள்ளிட்டவற்றை பராமரிக்க இந்த அமைப்பு நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா நிலையம் வீடு மற்றும் அங்குள்ள பொருட்களை அரசுடைமையாக்க வழிவகை செய்யும் வகையில் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
தற்காலிகமாக அந்த பொருட்கள் அரசின் வசம் இருக்கும் என்றும் நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிந்தபின்னர், நினைவு இல்லத்தில் அவை வைக்கப்படும் என அறிவித்தது.
"தீர்ப்பை நாங்கள் எதிர்பார்க்கவில்லை"
உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு, செய்தியாளர்களை சந்தித்த தீபா, ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள் என நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தாங்களே எதிர்பார்க்கவில்லை என்றார்.
''ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள் என நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அதிமுகவினர் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள இந்ததீர்ப்பை முழுமையாக ஏற்கவேண்டும். எங்களுக்கு சாதகமான தீர்ப்பு வந்தால் இந்த அரசாங்கம் எங்களை ஓட ஓட துரத்தும் என முன்பே தெரிவித்திருதேன். எனது பாதுகாப்பு கருதி, ஆளுநரிடம் மனு கொடுக்கவுள்ளேன். போயஸ் இல்லத்திற்கு நான் வரக்கூடாது என யாரோ எண்ணுகிறார்கள். போயஸ் தோட்டத்திற்கு நான் வரக்கூடாது என ஏன் தடுக்கிறார்கள்,''என்றார்.
மேலும் உயர்நீதிமன்றம் நேரடி வாரிசு என்று அறிவித்துள்ளதால், போயஸ் தோட்ட இல்லம் மட்டுமின்றி ஜெயலலிதாவின் எல்லா சொத்துகளையும் பெறவேண்டியது தன்னுடைய கடமை என்று உணர்வதாகக் கூறினார்.
''ஜெயலலிதாவின் இறுதிச் சடங்கில் என்னை பங்கேற்கவிடவில்லை. எனக்கு நடந்த அநியாயத்தை மக்கள் பார்த்தார்கள். ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, நான் பார்ப்பதற்கு முயற்சித்தேன். என்னை அனுமதிக்கவில்லை. மெரினாவில் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளவும் விடவில்லை. என்னை விரட்டினார்கள். இறுதியாக அவர் முகத்தை ஒருமுறை பார்க்கவேண்டும் என்று கேட்டபோது கூட விரட்டினார்கள். எங்கள் மீது வீண்பழி சுமத்துகிறார்கள். அரசியல் ஆதாயம் எனக்கு முக்கியமில்லை,''என்றார்.
மேலும், உயர் நீதிமன்றம் தங்களை நேரடி வாரிசு என்று தீர்ப்பு வருவதற்கு முன்னர், போயஸ் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற அவசரச் சட்டம் கொண்டுவரப்பட்டது என்றும் தமிழக அரசின் முடிவை தீபா விமர்சித்தார்.
பிற செய்திகள்:
- மருத்துவக் கல்லூரிகளில் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு: தி.மு.க., பா.ம.க. வழக்கு
- கூகுள் வோடஃபோன் - ஐடியாவில் முதலீடு செய்கிறதா? உண்மை என்ன?
- பத்தே நிமிடத்தில் இலவசமாக இணைய வழியில் பான் எண் பெறலாம் - புதிய திட்டம் அறிமுகம்
- டிக்டாக்கால் 2 ஆண்டுகள் கழித்து குடும்பத்துடன் இணைந்த வாய் பேச முடியாத முதியவர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












