உள்நாட்டு விமான போக்குவரத்து: முதல்நாளில் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டதன் காரணம் என்ன?

இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான சில முக்கியச் செய்திகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

முதல்நாளில் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டதன் காரணம் என்ன?தி நியூ இந்தியன் எக்பிரஸ்

இந்தியாவில் நேற்று இரண்டு மாதங்களுக்கு பிறகு மீண்டும் உள்நாட்டு விமானப் போக்குவரத்து சேவை தொடங்கப்பட்ட நிலையில் 630 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு பயணிகளுக்கு அதுகுறித்து தகவல் ஏதும் அறிவிக்கப்படாததால் பலர் குழப்பத்தில் ஆழ்ந்தனர் என்கிறது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி.

டெல்லியில்தான் அதிகப்படியாக 80 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. டெல்லி விமான நிலையத்தில் திங்களன்று 125 விமானங்கள் புறப்படும் என்றும், 118 விமானங்களில் பல்வேறு நகரங்களிலிருந்தும் வந்து சேரும் என்றும் திட்டமிடப்பட்டிருந்தது.

மேற்கு வங்கம், ஆந்திர பிரதேசம் போன்ற மாநிலங்கள் விமானங்களை இயக்கும் தங்களின் முடிவிலிருந்து பின்வாங்கியதே இதற்கு காரணம் என்கின்றனர் அதிகாரிகள். ஆனால் குறைந்த அளவிலான பயணிகள் மட்டும் பயணம் செய்வதும் இதற்கு காரணம் என்றும் செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பல விமானங்களில் 80க்கும் குறைவான பயணிகளே இருந்தனர் என கூறப்படுகிறது. பயணிகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற மாநிலங்களின் முடிவுகளும் குறைவான பயணிகள் அதிகம் வராமல் இருப்பதற்கான காரணமாகவும் இருக்கலாம்.

இந்நிலையில் திங்களன்று 532 விமானங்கள் இயக்கப்பட்டு 39,231 பயணிகள் பயணம் செய்தனர் என விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்திக் சிங் பூரி டிவிட்டரில் தெரிவித்துள்ளார் என விவரிக்கிறது அச்செய்தி.

அதிகரித்த வெயிலின் தாக்கம் - தினத்தந்தி

தமிழகத்தில் ஏப்ரல், மே மாதங்கள் கோடை காலமாக கருதப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பருவமழை போதுமான அளவு பெய்யாத நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் முதலே வெயிலின் தாக்கம் சற்று அதிகரித்து காணப்பட்டது இதனால் பல நகரங்களில் வெயில் அளவு சற்று அதிகமாகவே காணப்பட்டது என்கிறது தினத்தந்தியின் செய்தி.

இதனால் பொதுமக்கள் எண்ணியப்படி அக்னி நட்சத்திரம் தொடங்கியதில் இருந்து வெப்பத்தின் தாக்கம் பல நகரங்களில் 100 டிகிரியை தாண்டி பதிவாகி வருகிறது.

மேலும் 'உம்பான்' புயல் காரணமாக தமிழகத்துக்கு மழை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதுவும் ஏமாற்றத்தில் தான் முடிந்தது.

மேலும், திசைமாறி சென்ற 'உம்பான்' புயல் நிலப்பரப்பில் இருந்து ஈரப்பதத்தை இழுத்து சென்றதால், வழக்கத்தை விட 2 அல்லது 3 டிகிரி வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டு விட்டது. இந்தநிலையில் கத்திரி வெயில் என்று அழைக்கப்படும் அக்னி நட்சத்திரம் வருகிற 28-ந்தேதியோடு நிறைவடைகிறது. இருந்தாலும் அதற்கு பிறகு ஒரு சில நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் இருக்கத்தான் செய்யும் என்று வானிலை துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர் என மேலும் விவரிக்கிறது அச்செய்தி.

தமிழகத்தில் இருந்து சிறப்பு ரயில்களில் சென்றவர்கள் எண்ணிக்கை என்ன? - தினமணி

தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் மூலம் ஒரு லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமான வெளிமாநில தொழிலாளர்கள் அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்கிறது தினமணியின் செய்தி.

அண்மையில் வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்ப மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்தது. தொடர்ந்து, தமிழகத்திலிருந்து கடந்த இரண்டு வாரமாக சிறப்பு ரயில்கள் மூலமாக வெளிமாநில தொழிலாளர்கள் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்திலிருந்து நாட்டின் வடக்கு, வடகிழக்கு மாநிலங்களுக்கு கடந்த இரண்டு வாரங்களில் (மே 20ஆம் தேதி நிலவரப்படி) சிறப்பு ரயில்கள் மூலமாக ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 42 பேர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை தற்போது ஒரு லட்சத்து 50 ஆயிரத்தை தாண்டிவிட்டதாகவும், 100க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: