திமுகவின் ஆர்.எஸ்.பாரதிக்கு இடைக்கால ஜாமீன்: 'திராவிடர் இயக்கம் போட்ட பிச்சை' பேச்சு எதிரொலி

ஆர்.எஸ். பாரதி

பட மூலாதாரம், DMK official Facebook page

இன்று அதிகாலை கைது செய்யப்பட்ட திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிபதி செல்வகுமார் உத்தரவிட்டுள்ளார்.

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை கைது செய்யப்பட்டார்.

கடந்த பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி சென்னை அன்பகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தாழ்த்தப்பட்டவர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது. அதன் அடிப்படையில் தற்போது கைது செய்யப்பட்டிருக்கிறார்.

ஆதித்தமிழர் மக்கள் கட்சித் தலைவர் கல்யாண்குமார் என்பவர் ஆர்.எஸ்.பாரதி மீது காவல்துறையிடம் இந்தப் புகாரை அளித்திருந்தார்.

திமுக சார்பில் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக உள்ள அவர், "ஆதிதிராவிடர்களுக்கு நீதிமன்றப் பதவி கிடைத்தது திராவிட இயக்கம் போட்ட பிச்சை" என பிப்ரவரி மாதம் நடந்த அந்த நிகழ்ச்சியில் பேசியிருந்தார்.

"சீப்பை மறைத்து வைத்து விட்டால் கல்யாணம் நிற்காது. கொரோனா விவகார ஊழல் பற்றி புகாரளிக்கப்படும் யாரையோ திருப்திப்படுத்த என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது."

"பிப்.15 ஆம் தேதி சென்னையில் நான் பேசியது சமூக ஊடகங்களில் திரிக்கப்பட்டு வெளியானது," என்று கைதின்போது ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.

கைதானபின் அவர் நங்கநல்லூரில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்துவரப்பட்டார்.

அவரது சர்ச்சை பேச்சு குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணை நிறைவு பெற்றதை அடுத்து, அவர் எழும்பூர் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார்.

ஆர்.எஸ். பாரதி பேச்சும் அதற்கான வருத்தமும்

சென்னை அன்பகத்தில் பிப்ரவரி 14ஆம் தேதியன்று நடந்த கலைஞர் வாசகர் வட்ட விழாவில் பேசிய ஆர்.எஸ். பாரதி, "தி.மு.க. ஒழிந்தால்தான் தமிழ்நாட்டுக்கு விமோசனம் என எச். ராஜா பேசுவதற்கு அந்த தைரியத்தைத் தந்தது யார்? நாமெல்லாம் கோழைகளாகிவிட்டோம். இந்தியாவிலேயே தமிழகம் தலைசிறந்த மாநிலமாக இருக்கிறதென்று சொன்னால் அதற்கு திராவிட இயக்கம்தான் காரணம். வட மாநிலத்துல இருக்குறவனுக்கு அறிவே கிடையாது. ஓப்பனா சொல்றேன். ஒரு ஹரிஜன்கூட மத்தியப் பிரதேசத்தில ஹைகோர்ட் ஜட்ஜ் கிடையாது. தமிழ்நாட்டில் கலைஞர் ஆட்சிக்கு வந்த பிறகு வரதராஜனை உட்கார வைத்தார். அதற்குப் பிறகு ஏழெட்டு ஆதிதிராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள் ஜட்ஜாக இருந்தார்கள் என்றால், அது திராவிட இயக்கம் போட்ட பிச்சை" என்று பேசினார்.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உடன் ஆர்.எஸ். பாரதி

பட மூலாதாரம், RS BHARATHI/FACEBOOK

படக்குறிப்பு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உடன் ஆர்.எஸ். பாரதி

தொடர்ந்து பேசிய அவர், தொலைக்காட்சியினர் குறித்தும் கடுமையாக விமர்சித்தார். "இந்த டிவிகாரனுக இருக்கானுக பாருங்க.. அவனுக மாதிரி அயோக்கியனுக உலகத்திலேயே எவனும் கிடையாது. பம்பாயில இருக்க ரெட் லைட் ஏரியா மாதிரி நடத்துறானுக கம்பனிய..காசு வருதுங்கிற காரணத்துக்காக எதை வேணா கிளப்பிவிடுறது" என்று குறிப்பிட்டார்.

ஊடகங்களைப் பற்றி அவர் பேசிய கருத்துக்களுக்காக சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனங்களைத் தெரிவித்திருந்தது. "தி.மு.கவின் அமைப்புச் செயலாளர் பொறுப்பு வகிக்கும் மூத்த அரசியல்வாதியான ஆர்.எஸ். பாரதி நிதானம் தவறி, தரம்தாழ்ந்து இப்படி கீழ்த்தரமாக பேசியிருப்பதை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது. ஆர்.எஸ் பாரதி அவர்கள் தனது தரக்குறைவான பேச்சுக்கு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்துவதுடன் , இது போன்ற செயல்களை திமுக தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் கண்டிக்க வேண்டும்" என அந்த அமைப்பு தெரிவித்தது.

ஆர்.எஸ். பாரதி பேசிய இந்தப் பேச்சின் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி கடும் கண்டனத்திற்குள்ளானது.

இந்த கண்டனங்களை அடுத்து தனது பேச்சிற்கு ஆர்.எஸ். பாரதி வருத்தம் தெரிவித்திருக்கிறார். தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து எழுதியிருக்கும் அவர், "பிப்ரவரி 14ம் தேதி சென்னை அன்பகத்தில், கலைஞர் வாசகர் வட்டம் சார்பாக நடந்த நிகழ்ச்சியில் நான் பேசிய சில வார்த்தைகள் தாழ்த்தப்பட்ட மக்கள் மனதை புண்படுத்தியதாக அறிகிறேன். அதற்காக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். என்னுடைய நோக்கம் தாழ்த்தப்பட்ட மக்கள் மனதை புண்படுத்துவது அல்ல. கலைஞர் அம்மக்களுக்காக செய்த நலத்திட்டங்களை எடுத்து கூறுவதே ஆகும்" என்று சொல்லியிந்தார்.

ஆர்.எஸ் பாரதி கைது: திமுகவினர் போராட்டம்

இதற்கிடையில், கைது செய்யப்பட்ட ஆர் எஸ் பாரதியை பார்க்க அனுமதிக்க வேண்டும் எனக் கோரி திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், வழக்கறிஞர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலு உள்ளிட்டவர்கள் போராட்டம் நடத்தினர்.

செய்தியாளர்களிடம் பேசிய டி.ஆர் பாலு, திமுகவினர் கொரோனா தடுப்பு பணிகளில் தீவிரமாக செயல்படுவதை தவிர்ப்பதற்காக அதிமுக அரசு கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது என்றார். மேலும் ஆர்.எஸ். பாரதி கைது தேவையற்றது என்றும் அநியாயமானது என்றும் குறிப்பிட்டார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: