இந்தியாவின் பொருளாதாரம் கொரோனாவால் பாதிப்பு: 'உள்நாட்டு உற்பத்தி இந்தாண்டு சரியும்' - ரிசர்வ் வங்கி

இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த் தாஸ்

பட மூலாதாரம், Getty Images

இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 40 அடிப்படைப் புள்ளிகள் அளவுக்கு குறைத்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று காலை நடந்த செய்தியாளர் சந்திப்பில் இந்தத் தகவலை வெளியிட்டார்.

இதன் மூலம் ரெப்போ வட்டி விகிதம் 4.4%-இல் இருந்து 4% ஆகக் குறைந்துள்ளது.

ரிவர்ஸ் ரெப்போ விகிதமும் 3.75%-இல் இருந்து 3.35% ஆகக் குறைந்துள்ளது.

ரெப்போ (repo rate) விகிதம் என்பது ஒரு நாட்டின் மத்திய வங்கி, அந்நாட்டிலுள்ள வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டி விகிதமாகும். வங்கிகளிடம் இருந்து ஒரு நாட்டின் மத்திய வங்கி வாங்கும் கடனுக்கான வட்டி விகிதம் ரிவர்ஸ் ரெப்போ (reverse repo rate) எனப்படும்.

Banner image reading 'more about coronavirus'
Banner image reading 'more about coronavirus'

வங்கிகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்கள் அளித்த கடன்களுக்கான தவணைகளை செலுத்த அளிக்கபட்ட மூன்று மாத ஒத்திவைப்பு மே மாத இறுதியில் முடிவடையவுள்ள நிலையில், மேலும் மூன்று மாதங்களுக்கு அது நீட்டிக்கப்படுகிறது என்றும் அவர் அறிவித்துள்ளார்.

அதாவது ஆகஸ்ட் மாதம் வரை இந்த அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக்கான கடன்களுக்கும் தவணைக்காலம் 15 மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ்

செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறிய பிற முக்கியத் தகவல்களின் தொகுப்பு.

  • கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சர்வதேச வர்த்தகம் இந்த ஆண்டு 13% முதல் 32% வரை சரியும்.
  • 2020 மார்ச் முதல் இந்தியாவின் கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறம் ஆகிய இரு பகுதிகளிலும் ஏற்பட்டுள்ள பொருட்களுக்கான தேவை (demand) குறைந்துள்ளது, வருவாயில் பாதிப்பை உண்டாகியுள்ளது.
  • கோவிட்-19 காரணமாக தனிநபர் நுகர்வு 33% குறைந்துள்ளது.
  • ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை குறைந்துவந்த உணவுப்பொருட்களுக்கான பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 8.6% ஆக உயர்ந்துள்ளது.
  • 2020-21ஆம் நிதியாண்டில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி குறையும்.
  • இந்த நிதியாண்டின் இரண்டாம் பாதியில் பொருளாதார நடவடிக்கைகள் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்குத் திரும்பத் தொடங்கும்.
  • இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 9200 கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்து 487 பில்லியன் டாலராக உள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: