நரேந்திர மோதி பேசியது என்ன - கொரோன வைரஸ் ஊரடங்கு, 20 லட்சம் கோடி ரூபாய் உதவித்தொகுப்பு

பிரதமர் மோதி

பட மூலாதாரம், DD

செவ்வாய் இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய இந்தியப் பிரதமர் நரேந்தி மோதி பொருளாதார உதவித் தொகுப்பு, கொரோனா வைரஸ் பரவல் தடுப்புக்கான நான்காம் கட்ட ஊரடங்கு உள்ளிட்டவை குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார்.

இது கொரோனா வைரஸ் ஊரடங்கு அமல்படுத்திய பின்பு நரேந்திர மோதி இந்திய மக்களுக்கு ஆற்றும் மூன்றாவது உரையாகும்.

மோதி ஆற்றிய உரையின் 10 முக்கியத் தகவலைகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

1. ஒரு வைரஸ் ஒட்டு மொத்த உலகத்தையே பாதித்துள்ளது என்றும் இந்த உலகமே நான்கு மாதகாலமாக கொரோனா வைரஸுக்கு எதிராகப் போராடி வருவதாகவும் நரேந்திர மோடி தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

2. கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் தொடங்கிய சமயத்தில் மருத்துவ ஊழியர்களுக்கான பாதுகாப்பு கவசங்கள் ஒன்று கூட இந்தியாவில் தயாரிக்கப்படவில்லை. அப்போது சில N-95 முகக் கவசங்கள் மட்டுமே இருந்தன. இப்பொழுது நாள்தோறும் இரண்டு லட்சம் மருத்துவப் பாதுகாப்பு உடைகள் மற்றும் இரண்டு லட்சம் N-95 முகக் கவசங்கள்ஆகியவை இந்தியாவில் தயாரிக்கப் படுகின்றன என்று தனது உரையில் நரேந்திர மோதி குறிப்பிட்டார்.

Banner image reading 'more about coronavirus'
Banner image reading 'more about coronavirus'

3. "உலகெங்கும் 42 லட்சம் பேர் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 லட்சத்து 45 ஆயிரம் பேருக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்தியர்களில் பலரும் தங்களது நேசத்துக்கு உரியவர்களை இழந்துள்ளனர். அவர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்," என்று நரேந்திர மோதி பேசினார்.

20 லட்சம் கோடி ரூபாய் பொருளாதார உதவி

4. தொழில்துறையை மேம்படுத்தவும், நடுத்தர மக்களுக்காகவும், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுகாகவும், 2020ஆம் ஆண்டில் 'ஆத்ம நிர்பார் பாரத் அபியான்' (தற்சார்பு இந்தியா திட்டம்) என்ற பொருளாதார உதவி தொகுப்பு இந்திய அரசால் வழங்கப்படும் என்று நரேந்திர மோதி தெரிவித்தார்.

5. "கோவிட்-19 பரவலால் உண்டாகியுள்ள பாதிப்புகளுக்கு நிவாரணமாக இந்திய அரசு ஏற்கனவே அறிவித்த உதவித்தொகுப்பு, இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்த உதவித் தொகுப்பு மற்றும் தற்போதைய உதவித் தொகுப்பு ஆகியவை ஒட்டுமொத்தமாக 20 லட்சம் கோடி ரூபாய். இது இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பில் 10%," என்று அவர் கூறினார்.

எதிர்வரும் நாட்களில் இந்திய நிதியமைச்சர் இதுகுறித்த விவரங்களை விரிவாக அறிவிப்பார் என்று மோதி தெரிவித்தார்

கொரோனா வைரஸ்

6. வாழ்வுக்கும் சாவுக்கும் இடையிலான உலகத்தின் போராட்டத்தில் இந்தியாவில் தயாரிக்கப்படும் மருந்துகள் புதிய நம்பிக்கை கொடுப்பதாகவும், இதன் காரணமாக இந்தியா உலகெங்கும் பாராட்டப்படுவதாகவும், அந்த பாராட்டால் ஒவ்வோர் இந்தியரும் பெருமை கொள்வதாகவும் பிரதமர் பேசினார்.

7. தற்போது இந்தியா எதிர்கொண்டுள்ள பிரச்சனை முன்னெப்போதும் சந்தித்திராத நெருக்கடி. ஆனாலும் நம்மால் அதை விட்டுவிட முடியாது என்று நரேந்திர மோதி பேசினார்.

8. இந்தியா தற்சார்பை வலியுறுத்தும் நாடாக இருப்பதாகவும், இந்தியா வலியுறுத்தும் தற்சார்பில் உலகத்தின் மகிழ்ச்சி ஒத்துழைப்பு மற்றும் அமைதி ஆகியவை குறித்த கவலை இருப்பதாகவும் நரேந்திர மோதி கூறினார்.

ஊரடங்கு

9. மே 17ஆம் தேதி தற்போதைய மூன்றாவது ஊரடங்கு முடிவடையவுள்ள நிலையில், மே 18க்குள் நான்காம் கட்ட ஊரடங்கு குறித்து அறிவிக்கப்படும் என்று கூறிய நரேந்திர மோதி அதில் மாற்றங்கள் இருக்கும் என்று கூறினார்.

10. மாநில அரசுகள் அளிக்கும் ஆலோசனைகளின் அடிப்படையில் நான்காம் கட்ட ஊரடங்கின் விதிகள் மே 18ஆம் தேதிக்குள் அறிவிக்கப்படும் என்றார் மோதி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: