கொரோனா வைரஸ்: 'வந்தே பாரத்' நடவடிக்கையில் தரையிறங்கிய முதல் விமானம்; தாயகம் திரும்பும் இந்தியர்கள்

Air India

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியாவின் பொதுத்துறை விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியா வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை திரும்ப அழைத்து வரும் பணியில் ஈடுபட்டுள்ளது. (கோப்புப்படம்)

கொரோனா வைரஸ் தடுப்பு முடக்கநிலைக்கு நடுவில் வெளிநாடுகளில் தங்கியிருக்கும் இந்தியர்களை மீட்கும் பணியை இந்திய அரசு தொடங்கியிருக்கிறது.

முதல்கட்டமாக துபாயில் சிக்கி இருந்து 300க்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு இரண்டு விமானங்கள் இயக்கப்பட்டன. அவர்கள் வியாழக்கிழமையன்று கேரளாவில் உள்ள கோழிக்கோடு விமான நிலையம் வந்திறங்கினர்.

வெளிநாடுகளில் இருந்து திரும்புபவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.

கோவிட்-19 தொற்றை கட்டுப்படுத்த அனைத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகளையும் மார்ச் மாதம் இந்தியா ரத்து செய்தது.

வரும் வாரத்தில் மட்டும் 12 நாடுகளில் இருந்து 15,000 இந்தியர்கள் தாயகம் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சிறப்பு விமானங்களில் பயணிக்கும் பயணிகள் அவர்கள் சொந்த செலவில்தான் பயணச்சீட்டு பெற வேண்டும். சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே அவர்கள் விமானத்தில் ஏற அனுமதிக்கப்படுவார்கள்.

India coronavirus: Massive repatriation operation

பட மூலாதாரம், Manoj mundackal

அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளில் இருந்து நேற்று இந்தியா வந்திருக்க வேண்டிய விமானங்கள் தாமதமாகியுள்ளன.

விமானத்தில் பயணிக்க இருப்பவர்களுக்கு சரியான நேரத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்படாததால் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

'வந்தே பாரத்'

இவ்வாறு வெளிநாடுகளில் இருந்து இந்தியர்களை மீட்டும் இத்திட்டத்திற்கு 'வந்தே பாரத்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

இதுவரை வரலாற்றில் இல்லாத அளவிற்கு ஒருங்கிணைந்த முயற்சிகளை கொண்ட முதல் மீட்புத்திட்டம் இதுவாகும். இத்திட்டத்தின் கீழ் சுமார் 2 லட்சம் இந்தியர்கள் தாயகம் திரும்ப உள்ளதாக உள்ளூர் ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த முயற்சி வெற்றிகரமாக நிறைவேறினால் வரலாற்றிலேயே அதிகபட்ச எண்ணிக்கையிலான வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களை இந்திய அரசு திரும்ப அழைத்து வருவது இதுவே ஆகும்.

இதற்கு முன்னதாக வளைகுடா போர் நடந்தபோது குவைத்திலிருந்து தங்கள் நாட்டுக் குடிமக்களில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் பேரை இந்தியா சொந்த நாட்டுக்குத் திரும்ப அழைத்து வந்ததே 1990 முதல் அதிகபட்ச எண்ணிக்கையாக விளங்குகிறது.

Banner image reading 'more about coronavirus'
Banner image reading 'more about coronavirus'

ஐக்கிய அரபு அமீகரத்தில் இருந்து மட்டும் 1,97,000 விண்ணப்பங்கள்

தற்போது இந்த வந்தே பாரத் திட்டத்தின் கீழ் அமெரிக்கா, பிரிட்டன், செளதி அரேபியா, சிங்கப்பூர், கத்தார் மற்றும் மலேசியா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து இந்திய விமான சேவையான ஏர் இந்தியா மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

இந்தியா திரும்புவதற்காக ஐக்கிய அரபு அமீகரத்தில் இருந்து மட்டும் இதுவரை 1,97,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

இதில் பெரும்பாலான விமானங்கள் கேரள மாநிலத்தில் தரையிறங்கும்.

கோவிட்-19 தொற்று இல்லை என்று உறுதிபடுத்தப்படும் பட்சத்தில்தான் அவர்கள் இந்த விமானத்தில் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

ஒரு விமானத்தில் 200ல் இருந்து 250 பயணிகள் பயணிப்பார்கள் என்று அரசு தெரிவித்துள்ளது. விமானப் பணியாளர்களுக்கு பாதுகாப்புக்கவசம் வழங்கப்படும்.

பயணிகள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் சமூக விலகல் கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ்

விமானத்தில் பயணிக்கும்போது யாருக்கேனும் கொரோனா வைரஸ் அறிகுறிகள் தென்பட்டால் அவர்கள் விமானத்தில் இருக்கும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு அனுப்பப்படுவார்கள்.

முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், மருத்துவ உதவி தேவைப்படுபவர்கள் மற்றும் மோசமான சூழலில் இருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த மீட்புத்திட்டத்தில் நாட்டின் போர்க்கப்பல்களும் பயன்படுத்தப்படுகின்றன. மாலத்தீவில் சிக்கியுள்ள 1000 இந்தியர்களை மீட்க இரு கடற்படை கப்பல்கள் சென்றுள்ளன.

வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்கள் அந்தந்த நாட்டு தூதரங்களோடு தொடர்பில் இருக்குமாறு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர் அறிவுறுத்தியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: