You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயதை தமிழக அரசு ஓராண்டு உயர்த்தியது ஏன்? தாக்கம் என்ன?
- எழுதியவர், அ.தா.பாலசுப்ரமணியன்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழக அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயதை 58ல் இருந்து ஓராண்டு உயர்த்தி 59 ஆக அறிவித்துள்ளது தமிழக அரசு.
நடப்பு மே மாதம் 31ம் தேதியுடன் ஓய்வு பெறும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றுவோர், அரசு நிறுவனங்கள், சங்கங்கள் போன்றவற்றில் பணியாற்றுகிறவர்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என்று தலைமைச் செயலாளர் சண்முகம் வியாழக்கிழமை வெளியிட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னரே நிலவிய பொருளாதார மந்த நிலையாலும், கொரோனா முடக்க நிலையாலும் சுமார் 50 சதவீத வேலையின்மை நிலவும் தமிழ்நாட்டில் வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கான வாய்ப்பை இந்த உத்தரவு பறித்துவிடும் என்று பரவலான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இதைக் கண்டித்து நாளை வெள்ளிக்கிழமையே போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளது தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்.
பிபிசி தமிழிடம் பேசிய சங்கத்தின் மாநிலத் தலைவர் அன்பரசு, இந்த உத்தரவின் மூலம் இந்த ஆண்டு ஓய்வு பெறவிருந்த சுமார் 30 ஆயிரம் அரசு ஊழியர்களுக்கு 6 ஆயிரம் கோடி மதிப்பில் ஓய்வுகாலப் பலன்களை வழங்கும் பொறுப்பை தட்டிக்கழிப்பதாக குறிப்பிட்டார். ஏராளமான ஊழியர்களின் பதவி உயர்வு வாய்ப்பைப் பறித்ததுடன் வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் இளைஞர்களின் வாய்ப்பையும் இந்த உத்தரவு பறிப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.
35 வயதில் அரசு ஊழியர் ஆவதற்கான வயது வரம்பு கடந்துவிடும் என்ற நிலையில் இந்த ஓராண்டில் எப்படியாவது தேர்வாணையத் தேர்வில் வெற்றி பெற்று வேலை வாங்கிவிடவேண்டும் என்ற நம்பிக்கையில் தங்கள் 34வது வயதில் உள்ள பலரின் கனவை இது கலைத்துள்ளதாகவும் கூறினார் அன்பரசு.
சங்கத்தின் முன்னாள் தலைவர் ஆர்.தமிழ்ச்செல்வி வேறுவிதமான அச்சங்களை வெளியிடுகிறார். பல பத்தாண்டுகளாக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும்போது ஏற்படும் காலிப்பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்படாமல் இருந்து இருந்து 4 லட்சம் அரசு ஊழியர் பணியிடங்கள் நிரப்பப்படாமலே விடப்பட்டு வருகின்றன. ஆனால் இந்தப் பணியிடங்களுக்கு வழங்கவேண்டிய ஊதியம் உள்ளிட்டப் பலன்களையும் சேர்த்துக் கணக்கிட்டே அரசு ஊழியர்களுக்குச் செலவிடும் தொகையாக கணக்கு காட்டப்படுகிறது என்கிறார் தமிழ்ச்செல்வி.
இந்த ஆண்டு பெருமளவிலான ஊழியர்கள் ஓய்வு பெறும் நிலையில், இப்படி ஓய்வை ஓராண்டு தள்ளிப் போடுவதால், வெறும் ஒரே ஒரு ஊதிய உயர்வு மட்டும் தந்து இன்னும் ஓராண்டுக்கு இவர்களின் பணியையே நீட்டித்துக்கொள்ள விரும்புகிறது. அதற்குள், இந்தப் பணியிடங்களை தொகுப்பூதியப் பணியாளர்களைக் கொண்டும், அவுட்சோர்சிங் முறையில் விட்டும் இந்தப் பணியிடங்களை நிரப்பாமல் பார்த்துக்கொள்ள முயல்வார்கள் என்றும் தெரிவித்தார்.
சென்னைப் பல்கலைக்கழக பொருளியல் துறையின் முன்னாள் தலைவரும், தமிழ்நாடு அரசு திட்டக் குழுவின் முன்னாள் துணைத் தலைவருமான பேராசிரியர் மு.நாகநாதன் இதனை கொரோனா உலகளாவிய தொற்று ஏற்படுத்தியிருக்கும் அசாதாரண நிலையுடன் இணைத்துப் புரிந்துகொள்கிறார்.
ஜப்பான், சீனா, ஜெர்மனி போன்ற நாடுகளின் தலைமைகள் இந்த கொரோனா உலகத் தொற்றைக் கையாண்டது போல அறிவார்ந்த முறையில் இந்திய நடுவண் அரசோ, தமிழ்நாடு கையாளவில்லை. இந்நிலையில், மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் போன்ற பணிகளில் பல ஆண்டுகள் பணியாற்றி அனுபவம் பெற்றவர்களும் இந்த அசாதாரண காலத்தில் ஓய்வு பெற்றுச் சென்றுவிட்டால் நிலைமை இன்னும் மோசமாகும் என்கிறார் பேராசிரியர் நாகநாதன்.
“இந்த தொற்றுக்காலத்தில் அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஆளெடுக்க புதிய தேர்வுகளை நடத்த முடியாது. இந்த கொரோனா சிக்கல் இன்னும் 3 மாதம், 6 மாதம் கூட நீடிக்கலாம். அப்படி இருக்கும்போது ஓராண்டுக்குள் தேர்வுகளை நடத்தி புதிய பணியாளர்களை பணியமர்த்தி இந்த வேலையில் ஈடுபடுத்தி வேலை செய்ய வைப்பது கடினம். எனவே, இந்த ஓய்வூதிய வயதை அதிகரிக்கும் திட்டத்தை எதிர்க்கவேண்டியதில்லை” என்கிறார் நாகநாதன்.
தமிழகத்தில் வேலையின்மை கடுமையாக இருக்கும் நிலையில் புதிய வேலை வாய்ப்புகளை இது பறிக்கும் என்று அச்சம் வெளியிடப்படுவதைப் பற்றி கேட்டபோது, பல ஆண்டுகளாகவே ஊழியர்கள் ஓய்வு பெறும்போது அந்தப் பணியிடங்கள் முழுவதையும் அரசு நிரப்புவதில்லை. எனவே சில ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகளே இதனால் ஏற்பட்டிருக்கும். தமிழகத்தின் மிகப்பெரிய வேலையின்மை சூழ்நிலையில் இது பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிடாது என்பதால், இதனை வேலையின்மையோடு இணைத்துப் பார்க்கத் தேவையில்லை என்றார் நாகநாதன்.
இந்த சூழ்நிலையில் அனுபவம் வாய்ந்த ஊழியர்களை ஓய்வு பெற அனுமதிப்பது நன்மை செய்யாது என்கிறார் அவர்.
ஆனால், 2025ம் ஆண்டு வரை மாதம் 3 ஆயிரம் ஊழியர்கள் ஓய்வு பெறுவார்கள் என்று கூறும் அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் அன்பரசு, ஏற்கெனவே கிராக்கிப் படி (டி.ஏ.) தராமல் தவிர்த்தது மூலம் 1,500 கோடியும், விடுப்பு சரண்டர் மறுத்தது மூலம் ரூ.2,500 கோடியும் மிச்சம் பிடித்த அரசு, தற்போது ஓய்வுப் பலன் ரூ.6,000 கோடியையும் சேர்த்து அரசு ஊழியர்கள் மூலம் மட்டுமே 10 ஆயிரம் கோடி மிச்சம் பிடித்ததாக குறிப்பிட்டார்.
வேலையின்மையை அதிகரிக்கும்...
“வேலையின்மையை அதிகரிக்கும் வேலை” என்று இதனை வருணிக்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளரும், விழுப்புரம் நடாளுமன்ற உறுப்பினருமான டி.ரவிக்குமார்.
இது தொடர்பான தமது கருத்து தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள ரவிக்குமார்,
“அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 59 ஆக உயர்த்தியிருப்பது வேலையின்மை அதிகரித்துவரும் இந்த நேரத்தில் தேவையானதுதானா? இதனால் பலனடைபவர்கள் சில ஆயிரம் பேர் மட்டும்தான். அரசு ஊழியர்களின் அகவிலைப் படியை மறுத்துள்ளதால் லட்சக் கணக்கான அரசு ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஈட்டிய விடுப்பை சரண்டர் செய்து ஒவ்வொரு ஆண்டும் தமது பிள்ளைகளின் கல்விச் செலவு உள்ளிட்ட அத்தியாவசிய செலவுகளை அரசு ஊழியர்கள் சமாளித்து வந்தனர். அதை இந்த அரசு பறித்துவிட்டது. இந்த இரண்டு உரிமைகளையும் முதலில் தமிழக அரசு வழங்கவேண்டும்.
வேலை வேண்டிப் பதிவு செய்து காத்திருக்கும் லட்சக் கணக்கான இளைஞர்களுக்கு இந்த அரசு என்ன வழி சொல்லப்போகிறது? இந்தியாவிலேயே வேலையின்மை சதவீதம் அதிகமாக இருக்கும் மாநிலம் தமிழ்நாடுதான். அதை எப்படி இந்த அரசு சரிசெய்யப் போகிறது?” என்று கேட்டுள்ளார் அவர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: