You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
விசாகப்பட்டினம் வாயுக் கசிவு: நடந்தது என்ன? பாதிக்கப்பட்டவரின் நேரடி அனுபவம்
- எழுதியவர், விஜய் கஜம்
- பதவி, பிபிசி தெலுங்குக்காக
(ஆந்திரப்பிரதேச மாநிலம் விசாகப்பட்டினம் வாயுக் கசிவில் பலியானவர்களின் எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், இந்த விபத்தால் நேரடியாக பாதிக்கப்பட்ட ஒருவர் தனது அனுபவத்தை பிபிசியிடம் கொண்டார்.)
இன்று (வியாழக்கிழமை) அதிகாலை விபத்து நடந்த ஆலை அமைந்துள்ள ஆந்திரப்பிரதேச மாநிலம், விசாகப்பட்டினம் அருகே உள்ள பத்மநாபபுரம் கிராமத்தில் நான் கடந்த ஓராண்டாக வசித்து வருகிறேன்.
முடக்க நிலையின் காரணமாக நானும், எனது குடும்பத்தினரும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வீட்டிலேயே முடங்கி கிடந்தோம். இந்த நிலையில், தனிப்பட்ட வேலையின் காரணமாக, நான் நேற்று (புதன்கிழமை) மாலை நகர்புறத்துக்கு செல்லும் வழியில், இன்று விபத்து நடந்த ஆலையை தற்செயலாக பார்த்தேன். நேற்று வரை குறைந்த ஊழியர்களுடன் காலை நேரத்தில் மட்டுமே அந்த ஆலை இயங்கி வந்ததால், நான் கடந்து சென்ற மாலை நேரத்தில் ஆலை அமைந்துள்ள பகுதி மிகவும் அமைதியாகவே காட்சியளித்தது. பிறகு, இரவுநேரத்தில் வீடு திரும்பிய நான், எனது மகனுக்கு கதை சொல்லிக்கொண்டே அனைவரும் தூங்கிவிட்டோம்.
இன்று (வியாழக்கிழமை) அதிகாலை சுமார் 3:30 மணி இருக்கும். அப்போது, நாங்கள் அனைவரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தபோது, யாரோ எங்களது வீட்டின் கதவை வேகமாக தட்டியதையடுத்து, என் மனைவி எழுந்து போய் கதவை திறக்க, நானும் வெளியே சென்று பார்த்தேன். அப்போது, எங்கள் பக்கத்து வீட்டுக்காரரான நாகமணி மூச்சு விடமுடியாமல் திணறியபடி நின்று கொண்டிருந்தார்.
“நான் எவ்வளவு நேரம் கதவை தட்டுவது? பாலிமர் ஆலை வெடிக்கப்போகிறது. இங்கிருந்து ஓடுங்கள்” என்று அவர் எங்களை நோக்கி கத்தினார்.
அந்த பெண்ணின் மகன் விபத்து நடந்தேறிய ஆலையில்தான் பணிபுரிந்து வந்தார்.
அதிகாலை நேரத்தில், தூக்க கலக்கத்தில் இருந்ததால், அவர் கூறியதை என்னால் உடனடியாக புரிந்து கொள்ள முடியவில்லை. அதே சமயத்தில், தெருவில் மக்கள் பதறியடித்துக்கொண்டு ஓடுவதை பார்க்க முடிந்தது.
“வீட்டில் இருக்கும் அனைவரையும் அழைத்துக்கொண்டு ஓடு” என்று பக்கத்து வீட்டுக்காரர்கள் அனைவரும் எங்களை நோக்கி கூறிக்கொண்டே ஓடியபடி இருந்தனர்.
“அடுத்த சில நிமிடங்களில் அந்த வாயுவை நான் உணரத் தொடங்கினேன். கண்கள் எரிச்சலடைய ஆரம்பித்தன. சீரான வேகத்தில் காற்றில் வாயுவின் துர்நாற்றம் அதிகரிக்க ஆரம்பித்தது. எனக்கு ஏற்கனவே மூச்சு சார்ந்த பிரச்சனை இருப்பதால் நான் செய்வதறியாது திகைத்துப் போனேன்.”
என் மனைவி நாம் எங்கே எப்போது செல்லப்போகிறோம் என்று கேட்டார். இப்போது எதுவும் யோசிக்க வேண்டாம், உடனடியாக இங்கிருந்து நகர்வது தான் நல்லது என்று நான் கூறினேன்.
உடையை மாற்றிக் கொண்ட நாங்கள், எந்த பொருளையும் எடுக்காமல் வீட்டிலிருந்து வெளியேறினோம். நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் மூலம் மக்கள் ஊரைவிட்டு வெளியே செல்வதை பார்க்க முடிந்தது. பல பெண்கள் நைட்டியுடன் சென்றுகொண்டிருந்தனர்.
சாலை முழுவதும் மக்கள் கூட்டம் நிரம்பி இருந்ததால், என்னால் இருசக்கர வாகனத்தை இயக்க முடியவில்லை. எனவே நான் என் மனைவியை குழந்தையை அழைத்துக் கொண்டு சிறிது தூரத்திற்கு நடந்து செல்லுமாறு கேட்டுக் கொண்டேன். பிறகு எப்படியோ அந்த கூட்டத்திலிருந்து எனது இரு சக்கர வாகனத்தை வெளியே கொண்டு வந்துவிட்டேன்.
மிகுந்த சிரமத்திற்குப் பிறகு நாங்கள் சிம்மச்சலம் என்ற பகுதியை அடைந்தோம். பிறகு உடனடியாக இதுகுறித்த தகவலை அரசு அதிகாரிக்கு தெரிவித்ததுடன் சில புகைப்படங்களையும் அனுப்பி வைத்தேன்.
சிறிது நேரத்தில் எங்களுடன் நூற்றுக்கணக்கான மக்கள் இணைந்து கொண்டார்கள். ஆனால், அதிர்ச்சியளிக்கும் வகையில், அடுத்த சில நிமிடங்களிலேயே நாங்கள் இருந்த பகுதியிலும் வாயு கசிவின் தாக்கம் பரவத் தொடங்கியதை அடுத்து, ஹனுமந்தா என்ற பகுதிக்கு சென்றோம். அங்கேயும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. எனவே இன்னும் சிறிது தூரம் சென்று கடற்கரையை அடைந்தோம்.
வழக்கம்போல் கடற்கரைப்பகுதி ரம்மியமாக காட்சியளித்தது. அங்கு வாயுக் கசிவின் தாக்கம் துளிகூட இல்லை. இருப்பினும், தற்போது முடக்க நிலை அமலில் உள்ள நிலையில், நாங்கள் இனி எங்கு போய் வாழ்வோம்? எங்களுக்கு யார் இடம் கொடுப்பார்? உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் என் மனதை துளைத்தன.
“பாட்டி தாத்தா வீட்டிற்கு சென்று விடலாம் என்று என் மகன் சொன்னான். அப்போது காலை 6 மணி. அதிகாலை நேரத்தில் அவர்களை தொந்தரவு செய்து தங்குவதற்கு இடம் கேட்பதற்கு எங்களுக்கு மிகவும் தயக்கமாக இருந்தது. இருப்பினும் அவர்களை தொடர்புகொண்டு சூழ்நிலையை விவரித்தேன். உடனே எங்களை அவர்களது இல்லத்திற்கு வருமாறு அழைத்தனர். பிறகு நிம்மதிப் பெருமூச்சு விட்டபடி, நாங்கள் அவர்களது வீட்டை அடைந்தோம்.”
பிறகு நான் உடனடியாக வாட்ஸ் அப்பை திறந்து பார்த்தபோது, பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. வாயுக் கசிவில் இருந்து உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மக்கள் செய்வதறியாது பதறியடித்துக்கொண்டு ஓடும் காணொளிகளை பார்த்தேன். சொந்த ஊரை விட்டு அருகிலுள்ள பகுதிகளுக்கு சென்றவர்கள் பலரும் சாலைகளில் வசித்து வருவதை பார்த்து வேதனை அடைந்தேன்.