You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
Boys Locker Room - இன்ஸ்டாகிராமில் சிறுமிகளை பாலியல் வல்லுறவு செய்ய திட்டமிட்ட சிறுவர்கள் - நடந்தது என்ன?
- எழுதியவர், சுஷீலா சிங்
- பதவி, பிபிசி செய்தியாளர்
கடந்த இரண்டு நாட்களாக இந்தியாவில் சமூக ஊடகங்களில் பிரபலமாகி வருகிறது #BoysLockerRoom.
புகைப்பட பகிர்வு சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் உள்ள இந்த குழுவில், சிறுமிகளின் புகைப்படங்களை சிறுவர்கள் பதிவிடுகிறார்கள், அநாகரீகமான கருத்துகளைக் கூறுகிறார்கள், பாலியல் வல்லுறவு செய்வது பற்றி பேசுகிறார்கள்.
இன்ஸ்டாகிராம் நெட்வொர்க் மற்றும் டெல்லி போலீசாருக்கு ட்வீட்டர் மூலம் நோட்டீஸ் அனுப்பிய டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் சுவாதி மாலிவால், சம்பந்தப்பட்ட சிறுவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில் 'பாய்ஸ் லாக்கர் ரூம்' என்ற குழுவை சில சிறுவர்கள் உருவாக்கியுள்ளனர், அதில் அவர்கள் சிறுமிகளின் ஆட்சேபத்திற்குரிய புகைப்படங்களை பகிர்ந்துகொள்கிறார்கள். அதுமட்டுமல்ல, சிறுமிகளை பாலியல் வல்லுறவு செய்வதற்கான திட்டங்களைப் பற்றியும் இங்கு விவாதிக்கிறார்கள்.
சில பெண்கள் இந்த குழுவில் பகிர்ந்துக் கொள்ளப்பட்ட தகவல் பரிமாற்றங்களின் சில ஸ்கிரீன் ஷாட்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டனர், அதன் பிறகுதான் இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது.
அந்த ஸ்கிரீன் ஷாட்களைப் பகிர்ந்த சுவாதி மாலிவால், காவல்துறை மற்றும் இன்ஸ்டாகிராமிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார், உடனடியாக எஃப்.ஐ.ஆர் (முதல் தகவல் அறிக்கை) பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளார்.
சுவாதி மாலிவாலின் ட்வீட்டுக்குப் பிறகு, டெல்லி போலீசாரும் உடனடியாக நடவடிக்கை எடுத்திருப்பதாகத் தெரிகிறது. சைபர் கிரைம் பிரிவு, இந்த வழக்கு தொடர்பான விசாரணையை தொடங்கியுள்ளதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகைக்கு டெல்லி காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு டி.சி.பி அளித்த அறிக்கையில், "இந்த விவகாரம் குறித்து விசாரிக்க முடிவு செய்துள்ளோம், எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளோம்" என்று தெரிவித்தார்.
BoysLockerRoom குழுவில் உள்ள நபர்களின் உண்மையான அடையாளம் காவல்துறையினரிடம் இல்லை என்றும் அவர் கூறுகிறார்.
15 வயது சிறுவன் ஒருவன் இந்த வழக்கு தொடர்பாக காவலில் எடுக்கப்பட்டுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸில் வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"மனநிலை மாற வேண்டும்"
@Tripathiharsh02 என்ற பயனர் ட்விட்டரில் இவ்வாறு எழுதுகிறார்: "சட்டம் கடுமையானதாக இருக்க வேண்டும், ஆனால் மக்களின் மனநிலையை மாற்றுவது அதைவிட முக்கியம். பெண்களை ஒரு பொருளாகப் பார்ப்பதை நிறுத்த வேண்டும், இதை இளைஞர்களுக்கு புரிய வைத்தால் மட்டுமே அவர்களுக்கு சிந்தனையை மாற்ற முடியும்.
"இந்தியாவில் #BoysLockerRoom குறித்த கதை எனக்கு அச்சமூட்டுகிறது. 16 வயது சிறுவர்கள் பெண்களை பாலியல் வல்லுறவு செய்வதாக அச்சுறுத்துகிறார்கள். அவர்கள் என்ன கற்றுக்கொள்கிறார்கள்? பெண்களை இழிவுபடுத்துபவர்களையும், அவர்களை தாழ்வாக நினைப்பவர்களையும், பெண்களை ஒரு பொருளாகவும் நினைப்பவர்களையும் ஏதாவது செய்யுங்கள்" என்று @MarketerAditi எழுதுகிறார்.
சட்டம் என்ன சொல்கிறது?
முடக்கநிலையின்போது, குழந்தைகள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறவோ அல்லது பெற்றோருடன் அதிகம் பேசவோ முடியாது, இதுபோன்ற சூழ்நிலையில் கடந்த 40 நாட்களாக இணையதளம் மட்டுமே அவர்களுக்கு ஒரேயொரு வழியாக இருக்கிறது. அதில் பெரும்பாலான குழந்தைகள் தவறான வலைத்தளங்களை பயன்படுத்துகின்றனர் என்று சைபர் நிபுணர் பவன் துக்கல் கூறுகிறார்.
"BoysLockerRoom உடன் தொடர்புடையவர்கள் சிறார்களாகத் தோன்றுகிறார்கள். ஆனால் அவர்களில் பெரியவர்களும் இருக்கலாம். அப்படியிருந்தால் சட்டப் பிரச்சனை பெரிதாக இருக்காது. இணையதளத்தில் சிறுமிகள் அல்லது பெண்களின் புகைப்படங்களை வைத்து ஆபாசமாக எழுதினாலும், இப்படிப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்துக் கொண்டாலும், பாலியல் பலாத்கார அச்சுறுத்தலை விடுத்தாலும், அவை ஐ.டி சட்டத்தின் பிரிவு 67 ன் கீழ் தண்டனைக்குரியவை. இந்தச் சட்டத்தின்படி வழக்கு பதிவு செய்து, மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ஐந்து லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கலாம்."
"இந்த விவகாரத்தில் மைனர் சிறுமிகளின் புகைப்படங்களை மார்ஃபிங் செய்திருப்பதை பார்க்க முடிகிறது. இது, சைல்டு போர்னோகிராஃபி தடுப்பு சட்டத்தின் கீழ் வரும். `சைல்டு போர்னோகிராஃபி' என்பது, புகைப்படங்கள், வீடியோ, டிஜிட்டல் படம் அல்லது கணினியில் உருவாக்கிய படம் என எந்த வடிவில் குழந்தைகள் ஆபாசமாக சித்திரிக்கப்பட்டிருந்தாலும், அது குழந்தைகளை வைத்து நேரடியாக உருவாக்கப்பட்டிருந்தாலும் அல்லது குழந்தைகளின் புகைப்படத்தை எடிட் செய்து சேர்த்திருந்தாலும் சட்ட விரோதமானது. அதுமட்டுமல்ல, சிறியவர்களைப் போல பெரியவர்கள் நடித்திருந்தாலும் அது `சைல்டு போர்னோகிராஃபி' எனும் வகைப்பாட்டில்தான் வரும். சைல்டு போர்னோகிராஃபி என்பது அருவருப்பான குற்றமாகும். இதற்கு ஐடி சட்டப்பிரிவு 67 பி-இன் கீழ் ஐந்தாண்டு சிறைத் தண்டனையும் பத்து லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கத்தக்கது" என்று சைபர் நிபுணர் பவன் துக்கல் கூறுகிறார்.
இந்திய தண்டனைச் சட்டத்தின்படி, இதுபோன்ற குற்றத்தைச் செய்பவருக்கு 354 ஏ மற்றும் 292 சட்டங்களின் கீழும் தண்டனை விதிக்கப்படலாம்.
இந்த வழக்கு ஒரு ஆழமான குற்றவியல் சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்றும் இந்திய தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் விதிகள் இந்த விவகாரத்திற்கு பொருந்தலாம் என்றும் பவன் துக்கலின் கருதுகிறார்.
இந்த விவகாரமானது, சிறுமிகளின் புகைப்படங்களை உருவாக்கி, தவறான மின்னணு பதிவுகளை உருவாக்குவது பற்றியும் உள்ளது.
"இதற்குப் பின்னால் இரண்டு நோக்கங்கள் இருக்கலாம், ஒன்று மக்களை ஏமாற்றுவது, மற்றொன்று ஒரு பெண்ணின் மதிப்பு-மரியாதை மற்றும் நல்லெண்ணத்தையும் கெடுப்பதாக இருக்கலாம்" என்று பவன் துக்கல் கூறுகிறார்.
இந்த குற்றங்கள் இந்திய தண்டனைச் சட்டத்தின் 468 மற்றும் 469 பிரிவுகளின் கீழ் வருவதாக அவர் கூறுகிறார்.
தவறான பதிவுகளை வெளியிடுவது அல்லது பரிமாற்றம் செய்வது போன்றவை சட்டப்பிரிவு 468 இன் கீழ் வரும். இதற்கு ஏழாண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம். அதேபோல, சட்டப்பிரிவு 469இன் கீழ் ஒருவரின் நம்பகத்தன்மையை பாதிக்கும் வகையில் தவறான பதிவுகளை வெளியிடுவது, எதிர்மறையான கருத்துக்களை உருவாக்குவது போன்றவை அடங்கும்.
பவன் துக்கலின் கூற்றுப்படி, இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் 18 வயதிற்குட்பட்டவர்கள் என்றால், அவர்கள் சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படலாம்.
தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ், நெட்வொர்க் சேவை வழங்குநர்கள் அரசு கேட்கும்போது தேவையான தகவல் கொடுக்க வேண்டியது அவசியம். எனவே இந்த விஷயத்தில் போலீசார் இன்ஸ்டாகிராமிடம் இருந்து தகவல்களை பெறவேண்டும்.
#BoysLockerRoom பயனர்கள் இன்ஸ்ட்ராகிராமில் லாக்-இன் (உள்நுழைந்த) செய்த இடத்திலிருந்து காவல்துறையினருக்கு ஐ,பி முகவரிகள் கிடைத்தால், அவர்கள் பல்வேறு சேவை வழங்குநர்கள் மூலமாகவும் தனிநபர்களை அடையாளம் காணலாம்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: