கொரோனா வைரஸ்: வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியர்கள் நாடு திரும்புவது எப்போது?

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான செய்திகள் சிலவற்றைத் தொகுத்து வழங்குகிறோம்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - இந்தியர்கள் நாடு திரும்புவது எப்போது?

கொரோனா வைரஸ் தடுப்பு ஊரடங்கால், வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள பல லட்சம் இந்தியர்களை நாட்டுக்கு திரும்ப அழைத்துவரும் பணிகள் வியாழனன்று தொடங்கும் என்று இந்திய அரசு தெரிவித்துள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

மே 7 அன்று தொடங்கும் இந்தப் பணிதான் வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு, இந்தியர்களைத் திரும்ப அழைத்து வரும் மிகப்பெரிய நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.

இந்தியாவுக்கு வெளியே வசிக்கும் இந்தியக் குடிமக்களில் சுமார் 70% பேர் வளைகுடா நாடுகளில் வசிக்கின்றனர்.

தங்கள் வேலைகளை இழந்த பல இந்தியர்கள் நாடு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளதால் வளைகுடா நாடுகளில் இருப்பவர்களை திரும்ப அழைத்து வர முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளதாக அந்தச் செய்தி தெரிவிக்கிறது.

அமெரிக்கா, பிரிட்டன், சிங்கப்பூர், பிலிப்பீன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இருக்கும் இந்தியர்களிடம் இருந்தும் நாடு திரும்ப உதவுமாறு கோரிக்கை வந்துள்ளதாக அந்தச் செய்தி தெரிவிக்கிறது.

தினமணி - அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்தது 1,000 டோஸ் "ரெம்டெசிவிர்' மருந்து

கொரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சைக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ள "ரெம்டெசிவிர்' மருந்து 1,000 டோஸ்கள் அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.

கொரோனா நோய்த்தொற்றுக்கான சிகிச்சையில் இந்த மருந்து தகுந்த பலனளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சைக்கு "ரெம்டெசிவிர்' மருந்தினை அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து ஆணையம் அங்கீகரித்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் (என்ஐஏஐடி) மேற்கொண்ட பரிசோதனையின்படி, "பிளாசிபோ' மருந்து கொடுக்கப்பட்ட கரோனா நோயாளிகளுடன் ஒப்பிடுகையில், "ரெம்டெசிவிர்' மருந்து கொடுக்கப்பட்ட கரோனா நோயாளிகள் விரைவில் குணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், ஹெபடைடிஸ் மற்றும் இபோலா நோய்த் தாக்கத்தின்போது பல நோயாளிகளுக்கு "ரெம்டெசிவிர்' மருந்து கொடுத்து பரிசோதித்தபோது, அது உரிய பலனளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்து தமிழ் திசை - மத்திய அரசுக்கு பிரியங்கா காந்தி கேள்வி

கடந்த பிப்ரவரி மாதம் குஜராத் வந்திருந்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புக்காக ரூ.100 கோடி செலவிட்ட அரசு, புலம்பெயர் தொழிலாளர்களுக்காகச் செலவிட முடியாதா என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

புலம்பெயர் தொழிலாளர்கள் ரயிலில் சொந்த மாநிலங்களுக்குச் செல்லும்போது கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அந்தக் கட்டணத்தை வசூலிக்கக்கூடாது என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வந்தது. இந்நிலையில் புலம்பெயர் தொழிலாளர்களின் போக்குவரத்துக் கட்டணத்தை காங்கிரஸ் கட்சி செலுத்தும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: