கொரோனா போராளிகள்: கோவையில் ட்ரோன் மூலம் மருத்துவர்களுக்கு மலர் தூவப்பட்டதாக பரவிவரும் தகவல் உண்மையா?

    • எழுதியவர், மு. ஹரிஹரன்
    • பதவி, பிபிசி தமிழுக்கக

கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடந்தது.

இதற்காக, தமிழகத்தில் சென்னை மற்றும் கோவையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நேற்று காலை தகவல்கள் வந்தன.

கோவை மாவட்டத்தில் உள்ள சூலூர் விமானப்படை தளம் அல்லது கேரளாவின் திருவனந்தபுரம் விமானப்படை தளத்திலிருந்து கோவை சிங்காநல்லூர் ஈ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்படும் என கூறப்பட்டது. ஆனால், இது குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

இந்நிலையில், சென்னையில் ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டது. அதேபோல், கோவையிலும் மலர் தூவப்படும் என்ற எதிர்பார்ப்பில் மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவர்களும், செவிலியர்களும் நேற்று மாலை 5 மணி முதல் காத்திருந்தனர்.

45 நிமிடங்களுக்கு மேல் ஆகியும் விமானப்படையினரின் ஹெலிகாப்படர்கள் வரவில்லை. இதனால், மருத்துவ குழுவினர் கைதட்டி உற்சாகம் செய்து கொண்டு மீண்டும் பணிக்குத் திரும்பினர்.

சமூக ஊடகங்களில் பரவும் புகைப்படம்

இந்த நிலையில், விமானம் வராததால் சிறிய வகை ட்ரோன்களை பயன்படுத்தி மலர் தூவப்பட்டதாக சமூக ஊடகங்களில் தகவல் பரவி வருகிறது.

மருத்துவர்கள் ஏமாற்றப்பட்டதாகவும், அவமானப்படுத்தப்பட்டதாகவும் அந்த பதிவுகளில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், இது உண்மை அல்ல என்கின்றனர் மருத்துவர்கள்.

ஹெலிகாப்டரில் மலர் தூவுவதைப் படம் எடுக்க வந்த ட்ரோன் கேமராக்கள் அவை என்று கூறும் மருத்துவர்கள், ஹெலிகாப்டர் வராததால் மருத்துவர்கள் கைதட்டுவதை மட்டும் ட்ரோன் கேமிரா மூலம் படம் பிடித்துக் கொண்டதாகவும் தெரிவிக்கிறார்கள்.

சூலூர் விமானப்படை

இதுகுறித்து கருத்து பெற சூலூர் விமானப்படை அதிகாரிகளை தொடர்பு கொண்டோம்.

அவர், "ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் மலர் தூவும் நிகழ்வு உறுதி செய்யப்படாமல் இருந்தது. மேலும், வானிலை மோசமாக இருந்ததால் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது" என தெரிவித்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: