கொரோனா வைரஸ்: ஆந்திரப் பிரதேசத்தில் 56 பேருக்கு கொரோனா தொற்று பரவ காரணமான நபர்

கொரோனா

பட மூலாதாரம், Getty Images

ஆந்திரப்பிரதேசத்தில் முடக்க நிலை காலத்தில் பொழுது போக்குவதற்காக ஒரு நபர் செய்த சில செயல்களால் 56 பேருக்கு கொரோனா தொற்று பரவிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரப்பிரதேசத்தின் விஜயவாடா நகரில், தங்களுக்கு வைரஸ் பாதிப்பு உள்ளது தெரியாத ஒரு தம்பதி மூலம் 50க்கும் மேற்பட்டவர்களுக்கு கோவிட்-19 நோய்த்தொற்று பரவிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விஜயவாடாவில் உள்ள கிருஷ்ணலங்கா பகுதியில் கனரக வாகன ஓட்டுநர் ஒருவர் பொழுது போக்குக்காக தனது நண்பர்கள் மற்றும் அண்டை வீட்டுக்காரர்களுடன் சீட்டு விளையாடியுள்ளார்.

இது அந்த பகுதியில் கொரோனாவைரஸ் பரவ காரணமாக அமைந்துள்ளது. அதே நேரத்தில் அந்த ஓட்டுநரின் மனைவி அருகில் வசிக்கும் பெண்களையெல்லாம் கூப்பிட்டு பொழுதுபோக்குக்காக தம்போலா என்னும் ஒரு விளையாட்டை விளையாடியுள்ளார்.

இந்த இருவரும் அருகில் வசிப்பவர்களை இவ்வாறு அழைத்து அவர்களுடன் சேர்ந்து விளையாடி மகிழ்ச்சியாக இருந்துள்ளனர்.

ஆனால் சில நாட்கள் கழித்து வாகன ஓட்டுநருக்கு இருமலும் காய்ச்சலும் வந்துள்ளது. அதனால் உள்ளூர் மருத்துவ பணியாளர்கள் உதவியுடன் அவருக்கும், அவரது மனைவிக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் இருவருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

Banner image reading 'more about coronavirus'
Banner

இந்த செய்தி காலனியில் இருக்கும் அனைவருக்கும் மெல்ல மெல்ல பரவ, அவர்களுடன் விளையாடிய அனைவரும் அச்சம் கொண்டு கொரோனா பரிசோதனை சோதனை செய்துகொண்டனர்.

அதில் சிலருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டவுடன் இந்த தம்பதியினரை சந்தித்த அனைவருக்கும் சோதனை செய்யப்பட்டது. இதுவரை இவர்களுடன் விளையாடிய 56 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த தம்பதியுடன் தொடர்பில் இருந்த 200 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கனரக வாகன ஓட்டுநர் பொது முடக்கம் அறிவிக்கும் முன் பல இடங்களுக்கு சென்றுவந்துள்ளார். அவர் ஆந்திரப் பிரதேசம் காக்கிநாடவிலிருந்து மீன் ஏற்றிக்கொண்டு கொல்கத்தா சென்றுள்ளார். மீண்டும் கொல்கத்தாவிலிருந்து வீடு திரும்பும்போது ராயலசீமாவிற்கு எண்ணெய் ஏற்றி வந்துள்ளார்.

அவர் வீடு திரும்பிய பிறகே முடக்கம் அறிவிக்கப்பட்டது. எனவே பொழுது போக்கிற்காக பக்கத்தில் வசிப்பவர்களுடன் சீட்டு விளையாடியுள்ளார். இறுதியில் அது கொரோனாத் தொற்று பரவக் காரணமாக அமைந்தது. அந்த ஓட்டுநர் மீது ஆந்திரப்பிரதேசப் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதே போன்ற மற்றுமொரு சம்பவம் விஜயவாடாவில் நடந்துள்ளது. ஒரு நபரிடமிருந்து 30 பேருக்கு தொற்று பரவியுள்ளது. ஆனால் அவர் விளையாட்டு ஏதும் விளையாட வில்லை. தான் வெளிநாடு சென்று வந்ததை மறைத்ததால் தொற்று பரவலுக்கு காரணமாக அமைந்தார்.

அந்த நபர் துபாயில் ஒரு விடுதியில் பணிபுரிந்துள்ளார். மார்ச் இரண்டாம் வாரத்தில் துபாயிலிருந்து இலங்கை மற்றும் சென்னை வழியாக விஜயாவாடாவுக்கு திரும்பியுள்ளார். ஆனால் மருத்துவ அதிகாரிகளிடமிருந்து அவர் இந்த பயணத்தை மறைத்துள்ளார். அவரது குடும்பத்திற்கு சொந்தமான விடுதியில் அவர் பொழுதை கழித்துள்ளார்.

அந்த விடுதி மிகவும் சிறியது. அதனால் தொற்று பரவக்கூடிய வாய்ப்பு அங்கு அதிகம் இருந்தது. சில நாட்கள் கழித்து அவருக்கு கோவிட்-19க்கான அறிகுறி தென்படவே சோதனை செய்துகொண்டுள்ளார். அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. பிறகு விடுதியில் அவரோடு பழகிய 30 பேருக்கு கோவிட்-19 இருப்பது கண்டறியப்பட்டது.

Banner image reading 'more about coronavirus'

விஜயவாடா காவல்துறை அதிகாரி ஒருவர் கூற்றுப்படி, இந்த கனரக வாகன ஓட்டுநர் மற்றும் துபாயிலிருந்து வந்தவரால் விஜயவாடாவில் 100 க்கும் அதிகமானோருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

தற்போது விஜயவாடா பகுதியில் போலீஸார் கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். "தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியேறுவோரை தனிமைப்படுத்தல் மையத்திற்கு அனுப்புகிறோம். இதனால் மக்கள் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியேற மாட்டார்கள் எனத் தோன்றுகிறது" என அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

தெலங்கானா மாநிலத்தில் சூர்யபேட் என்னும் மாவட்டத்தில் இதேபோன்ற ஒரு செய்தியை உள்ளூர் ஊடகங்கள் முன்பு வெளியிட்டிருந்தன. ஒரு பெண் அவர் வீட்டில் பரமபதம் விளையாடி நிறைய பேருக்கு தொற்று பரப்பியதாக செய்திகள் வெளியாகின.

சூர்யபேட் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ண ரெட்டி பிபிசியிடம் கூறுகையில், "இது முற்றிலும் பொய்யான தகவல். ஒரு பெண் தொற்று பரப்பியதாக எந்த சம்பவமும் இதுவரை பதிவாகவில்லை. யார் இவ்வாறு வதந்தியை பரப்புகிறார்கள் என தெரியவில்லை. ஆனால் அப்படி எந்த சம்பவமும் சூர்யபேட்டில் நடக்கவில்லை. சில ஊடகங்களும் இதை சொல்வதே கவலையளிக்கிறது" என்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: