You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு திடீரென அதிகரித்தது ஏன்?
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக 500க்கும் மேற்பட்டவர்கள் ஒரே நாளில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
கோயம்பேடு சந்தைக்கு சென்ற வியாபாரிகள் பலருக்கும் நோய் தொற்று இருப்பதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக திங்களன்று (மே 4) தமிழக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் கோவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,550ஆக உயர்ந்துள்ளது. திங்களன்று ஒரே நாளில் மட்டும் 527 நபர்களுக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றுக்கு ஆளாகி இன்று ஒருவர் இறந்துள்ளதால், இறந்தவர்களின் எண்ணிக்கை 31ஆக உயர்ந்துள்ளது. தமிழகம் முழுவதும் திங்களன்று, 30 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,409 ஆக உயர்ந்துள்ளது.
- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- Pandemic என்றால் என்ன?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?
- முறையாக கை கழுவுதல் எப்படி?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்
- கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில் உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி?
- கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?
சென்னையில் மட்டும் 266 பேருக்கு பாதிப்பு
இன்று தமிழகத்தில் புதிதாக கோவிட்-19 நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள 527 பேரில் அதிகபட்சமாக 266 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என்று மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அடுத்ததாக, கடலூரில் 122 பேருக்கும், விழுப்புரத்தில் 49 பேருக்கும், பெரம்பலூரில் 25 பேருக்கும் நோய்த்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர், தர்மபுரி, தேனி, தஞ்சாவூர் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இன்று ஒருவருக்கு கூட நோய்த்தொற்று உறுதிசெய்யப்படவில்லை.
கோயம்பேடு சந்தை இடமாற்றம்
பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, கோயம்பேடு சந்தை நாளை (மே 5) முதல் தற்காலிகமாக மூடப்படுவதாக அதன் நிர்வாகக்குழு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "பொதுமக்களுக்கு காய்கறிகள் தங்கு தடையின்றி கிடைக்கவும், விவசாயிகள் உற்பத்தி செய்யும் வேளாண் பொருட்கள் மக்களை சென்றடையவும் சென்னை திருமழிசையில் வருகின்ற வியாழக்கிழமை (மே 7) முதல் தற்காலிகமாக காய்கறி மொத்த விற்பனை அங்காடி செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைச் சேர்ந்த சிறு வியாபாரிகள் திருமழிசை காய்கறி மொத்த விற்பனை அங்காடிக்கு வந்து காய்கறிகளை வாங்கி கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
"அடுத்துவரும் சில நாட்களிலும் அதிகரித்து காணப்படும்"
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மாநகர கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன், சென்னை கோயம்பேடு சந்தையைச் சேர்ந்த அனைத்து வியாபாரிகளுக்கும் கொரோனா சோதனை செய்யப்படவுள்ளதால், நோய்த்தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை இன்றும் அடுத்துவரும் சில நாட்களிலும் அதிகரித்து காணப்படும் என்று தெரிவித்திருந்தார்.
அதோடு, கோயம்பேடு சந்தையில் இருந்து பல மாவட்டங்களுக்கு சென்ற வியாபாரிகள், சரக்கு வாகன ஓட்டுநர்கள், உதவியாளர்கள் என பலருக்கும் தொற்று இருக்க வாய்ப்புள்ளது என தெரிவித்திருந்தார். கோயம்பேடு சந்தையில் உள்ள 3,000க்கும் மேற்பட்ட கடைகளில் உள்ளவர்களையும் சோதனை செய்யவேண்டியுள்ளது என ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.
தமிழக அரசின் 50 கொரோனா வைரஸ் பரிசோதனை மையங்களில் இதுவரை, 1,62,970 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன என்றும் 2,662 நபர்களுக்கு தொற்று இருக்கும் வாய்ப்புள்ளதால், கண்காணிப்புக்காக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: