You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா வைரஸ்: 15,000 கோடி வரை இழப்பை சந்திக்கும் இந்திய பத்திரிகைத்துறை - விரிவான தகவல்கள்
முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
தினமணி: "15,000 கோடி வரை இழப்பை சந்திக்கும் இந்திய பத்திரிகைத்துறை"
கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் அமல்படுத்தப்பட்டுள்ள தேசிய ஊரடங்கு உத்தரவால், பத்திரிகைத் துறை கடும் சவால்களை சந்தித்து வருகிறது. பத்திரிகைத் துறை 15 ஆயிரம் கோடி வரை இழப்பை சந்திக்கும் என இந்திய பத்திரிகை சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும் ஊரடங்கு உத்தரவால் விளம்பரங்கள் இன்றி பத்திரிகைகள் நடத்தப்பட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக இந்திய பத்திரிகை சங்க தலைவர் சைலேஷ் குப்தா குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே பத்திரிகை விற்பனையிலும் வருவாய் இழப்பை சந்தித்து வருவதால் இந்த துறையில் பணியாற்றும் 30 லட்சம் பணியாளர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை செயலாருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 4000 கோடி முதல் 4500 கோடி வரை வருவாய் இழப்பே சந்தித்ததாக பத்திரிக்கை துறை குறிப்பிடுகிறது. மேலும் அடுத்த 6 அல்லது 7 மாதங்களுக்கு தனியார் நிறுவனங்கள் விளம்பரம் அளிக்க வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.
பத்திரிக்கை துறை இந்த இழப்பீடை சந்திக்க மத்திய அரசு நிவாரண திட்டம் ஒன்றை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்து தமிழ் திசை: "சசிகலா தாக்கல் செய்த சீராய்வு மனு தள்ளுபடி"
இரட்டை இலை சின்னம் அதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டதை எதிர்த்து வி.கே.சசிகலா தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தர விட்டுள்ளது.
முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரது தலைமையிலான அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கி டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து டிடிவி தினகரன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்குத் தடை விதிக்க மறுப்பு தெரிவித்தது.
அதையடுத்து இந்த வழக்கை மீண்டும் விசாரிக்கக் கோரி வி.கே.சசிகலா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ''அதிமுக-வில் பொதுச்செயலாளர் என்ற பதவியை நீக்குவதற்கு யாருக்கும் எந்த அடிப்படை அதிகாரமும் கிடையாது. இதை தேர்தல் ஆணையமும், டெல்லி உயர் நீதிமன்றமும் கருத்தில் கொள்ளாமல் இரட்டை இலை சின்னத்தை கே.பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு அளித்தது சட்டவிரோதமானது'' என கூறப்பட்டிருந்தது.
சீராய்வு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே மற்றும் நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு, ''இது தொடர்பாக ஏற்கெனவே உச்ச நீதி மன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில் குறையேதும் காண முடிய வில்லை'' எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் குறை நிவர்த்தி மனு விரைவில் தாக்கல் செய்யப்படும் என சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- Pandemic என்றால் என்ன?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?
- முறையாக கை கழுவுதல் எப்படி?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்
- கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில் உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி?
- கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?
தினத்தந்தி: "நாளை திருமணம், மணமக்கள் கொரோனா வார்டில் அனுமதி"
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் பகுதியைச் சேர்ந்த சிலர், சென்னை வில்லிவாக்கம் பகுதியில் தங்கியிருந்து வேலை செய்து வருகின்றனர். இவர்களில் ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும், சொந்த ஊரான எட்டயபுரத்தில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.
இதைத்தொடர்ந்து மணமக்கள் மற்றும் உறவினர்கள் என மொத்தம் 27 பேர் அனுமதி பெற்று ஒரு வேன் மற்றும் காரில் நேற்று முன்தினம் இரவில் எட்டயபுரத்துக்கு சென்றனர். இதேபோன்று சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த 8 பேர், தங்களது சொந்த ஊரான எட்டயபுரத்தில் உள்ள உடல்நலம் பாதிக்கப்பட்ட உறவினரை பார்ப்பதற்காக ஒரு காரில் சென்றனர்.
நேற்று காலையில் எட்டயபுரம் பகுதியில் உள்ள சோதனைச்சாவடியில் இருந்த போலீசார், அந்த வேன் மற்றும் 2 கார்களை மறித்து, அதில் இருந்தவர்களிடம் விசாரித்தனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அந்த வாகனங்களில் இருந்த மணமக்கள் உள்ளிட்ட 35 பேரும் எட்டயபுரம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டது.
- இவ்வாறாக அந்நாளிதழ் விவரிக்கிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: