எலான் மஸ்க் பகிர்ந்த 7 ட்வீட்டுகள், இல்லாமல் போன டெஸ்லாவின் ஒரு லட்சம் கோடி - என்ன நடந்தது?

எலான் மஸ்க்: 7 ட்வீட்டுகள், இல்லாமல் போன ஒரு லட்சம் கோடி

எலாம் மஸ்க் பகிர்ந்த 7 ட்வீட்டுகளால் டெஸ்லாவின் பங்குகள் சரிந்து உள்ளன. ஏறத்தாழ 14 பில்லியன் டாலர்களை அது இழந்துள்ளது. எலாம் மஸ்க் பகிர்ந்த ட்வீட்டுகளால் அவரே 3 பில்லியன் டாலர்கள் அளவுக்கு நஷ்டத்தை சந்திப்பார்.

அப்படி என்ன ட்வீட் செய்தார்?

டெஸ்லாவின் பங்குகள் விலை மிக அதிகம் ஐஎம்ஓ என்று ஒரு ட்வீட்டிலும், மக்களுக்கு அவர்களது சுதந்திரத்தை மீண்டும் தாருங்கள் என இரண்டாவது ட்வீட்டிலும் எலான் மஸ்க் குறிப்பிட்டு இருந்தார்.

பங்கு விலை குறித்த ட்வீட் விளையாட்டாக பகிரப்பட்டதா என வால் ஸ்ட்ரீட் பத்திரிகை எலான் மஸ்கிடம் வினவியதற்கு 'இல்லை' என அவர் பதில் அளித்திருக்கிறார்.

கிம் ஜாங் உன்: மீண்டும் வந்தார் வட கொரியா தலைவர்

வட கொரியா அரசு ஊடகம் தரும் தகவலின் படி, கடந்த இருபது நாட்களில் முதல் முறையாக பொது வெளியில் தோன்றி இருக்கிறார் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன்.

உர தொழிற்சாலை ஒன்றினை கிம் ஜோங் உன் தொடங்கி வைத்தார் என்கிறது வட கொரியா அரசு ஊடகமான கே.சி.என்.ஏ.

கிம் ஜோங் உன் வந்த போது விண்ணை பிளக்கும் அளவில் உற்சாகம் ததும்பியது என்கிறது கே.சி.என்.ஏ.

இந்தியாவில் மே 4 முதல் மீண்டும் ஊரடங்கு - உங்களுக்கான 20 தகவல்கள்

இந்தியாவில் நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு குறித்த 20 முக்கிய தகவல்களின் தொகுப்பு. மே 17 வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும்.

பச்சை, சிவப்பு மற்றும் ஆரஞ்சு மண்டலங்களுக்கு வெவ்வேறு விதிகள் உள்ளன.

கடந்த 21 நாட்களாக தொற்று உண்டாகாத பகுதிகள், பச்சை மண்டலங்கள் ஆகும்.

தற்போது சிகிச்சை பெற்று வருபவர்கள் மற்றும் பரவல் அதிகமாக உள்ள மாவட்டங்கள் சிவப்பு மண்டலங்கள் ஆகும்.

பெண்ணுறுப்பு சிதைப்பு செய்தால் சிறை - ஆஃப்ரிக்க நாடு அதிரடி

ஆஃப்ரிக்க நாடான சூடானில் பெண்ணுறுப்பு சிதைப்பு சடங்கு செய்வது குற்றமாக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சடங்கு செய்து பெண்ணுறுப்பை சிதைப்பவர்களுக்கு மூன்றாண்டு சிறை தண்டனை அளிக்கப்படும் என சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

14 வயதிலிருந்து 49 வயது வரை உள்ள சூடான் பெண்களில் 87 சதவீதம் பேர் பெண்ணுறுப்பு சிதைப்புக்கு ஆளாகியுள்ளனர் என ஐ.நா கூறுகிறது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ்- பச்சை, சிவப்பு, ஆரஞ்சு மண்டல விவரங்கள்

தமிழகத்தில் புதிதாக 203 நபர்களுக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதால், மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,526 ஆக உயர்ந்துள்ளது என தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா தாக்கத்தால் சென்னையில் சிகிச்சை பெற்றுவந்த 98 வயதான நபர் ஒருவர் இறந்துவிட்டார் என்பதால் தமிழகத்தில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 28ஆக உயர்ந்துள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: