கொரோனா வைரஸ்: 25 லட்சத்திற்கு சொத்தை விற்று ஏழைகளுக்கு உதவிய பாட்ஷா சகோதரர்கள் - நெகிழ்ச்சி சம்பவம்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், இம்ரான் குரேஷி,
- பதவி, பிபிசிக்காக.
"சாதி மதம் பார்த்து உணவளித்தால், இறைவன் நம்மை எப்போதும் மன்னிக்க மாட்டான்." இந்த வாக்கியம்தான் இரு சகோதரர்களின் வாழ்க்கையை மாற்றி இருக்கிறது, 25 லட்சம் மதிப்பிலான சொத்துகளை விற்று இந்த இக்கட்டான சூழலில் ஏழைகளுக்கு உதவ செய்திருக்கிறது.
யார் இவர்கள்... என்ன செய்தார்கள்?
கர்நாடகாவை சேர்ந்த இரு சகோதரர்கள் முஜமில் பாட்ஷா மற்றும் தஜமுல் பாட்ஷா, கொரோனா காரணமாக பிறபிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் பசியால் வாடும் மக்களுக்கு உணவளிப்பதற்காக 25 லட்சம் மதிப்பிலான தங்கள் சொத்தை விற்பனை செய்திருக்கிறார்கள்.
பிபிசியிடம் பேசிய இருவரில் இளைய சகோதரரான 37 வயதான முஜமில் பாட்ஷா, "நாங்களும் ஒரு காலத்தில் ஏழைகள்தான். அப்போது யாரும் எங்களை பாகுபாடுடன் நடத்தவில்லை. ஏராளமான உதவி செய்தார்கள். அதனால் முன்னேறினோம். இப்போது பலர் பசியால் வாடுவதை பார்த்தோம். அதனால்தான் இந்த முடிவை எடுத்தோம்." என்கிறார்.
இவர்கள் இருவரும் வாழைமண்டி வைத்திருக்கிறார்கள். அந்த வாழைமண்டி இடத்தைதான் விற்று இவர்கள் ஏழைகளுக்கு உணவிட்டு இருக்கிறார்கள்.

பட மூலாதாரம், முஜமில் பாட்ஷா
"நாங்கள் அந்த இடத்தை எங்கள் நண்பரிடம்தான் விற்றோம். அவர் பெருந்தன்மையாக 25 லட்சம் ரூபாய் அளித்தார். அதுமட்டுமல்ல, பல நண்பர்கள் தங்களால் ஆன பணத்தை கொடுத்தார்கள். சிலர் ஒரு லட்சம் வரை கொடுத்தார்கள். அதைவைத்துதான் நாங்கள் இயலாதவர்களுக்கு உதவினோம். எவ்வளவு பணம் செலவிட்டோம் என்று சொல்வது சரியாக இருக்காது. அதை இறைவன் அறிவான். அவருக்கு தெரிந்தால் போதும்," என்கிறார் முஜமில்.
உணவில்லாமல் கஷ்டப்படும் ஏழைகளில் தலா ஒருவருக்கு 10 கிலோ அரிசி, இரண்டு கிலோ கோதுமை மாவு, ஒரு கிலோ பருப்பு, ஒரு கிலோ சர்க்கரை. 100 கிராம் மல்லிதூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு மற்றும் சோப்பு வழங்கி இருக்கிறார்கள்.
இதுவரை இவர்கள் ஏறத்தாழ மூவாயிரம் பேருக்கு உணவு பொட்டலங்கள் மற்றும் மளிகை சாமான்களை வழங்கி இருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, ரமலான் மாதம் தொடங்கி உள்ளதால், இவர்கள் ஏழைகளுக்கு நோன்பு கஞ்சியையும் வழங்கி வருகிறார்கள்.
சிறு வயது சோகம்
இந்த சகோதரர்கள் தங்களது இளவயதில் தங்கள் தந்தையை இழந்திருக்கிறார்கள். தந்தை இறக்கும் போது முஜமில்லுக்கு மூன்று வயது, தஜமுல்லுக்கு நான்கு வயது. அடுத்த நாற்பது நாட்களிலேயே அவர்களது தாயையும் இழந்திருக்கிறார்கள்.

பட மூலாதாரம், முஜமில் பாட்ஷா
பின் அவர்களது பாட்டிதான் இருவரையும் வளர்த்திருக்கிறார். உள்ளூர் பள்ளிவாசல் இவர்களுக்கு உதவி இருக்கிறது.
பள்ளிவாசல் அருகே இருக்கும் வாழைமண்டியில் இருவரும் வேலை பார்த்திருக்கிறார்கள்.
"நாங்கள் இருவரும் அதிகம் படிக்கவில்லை. 1995 -96 ஆகிய காலகட்டங்களில் நாங்கள் ஒரு நாளுக்கு 15 முதல் 18 ரூபாய் வரை சம்பாதித்தோம். சிறுக சிறுக சேர்த்து அடுத்த சில ஆண்டுகளிலேயே நாங்களே ஒரு வாழை மண்டி தொடங்கினோம்," என்று தங்களது இளவயது நாட்கள் குறித்து பிபிசியிடம் விரிவரிக்கிறார் முஜமில்.
பின் அதிலிருந்து வந்த வருவாயை கொண்டு மேலும் இரு வாழைமண்டிகள் தொடங்கி இருக்கிறார்கள்.
தமிழ்நாடு மற்றும் ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களிலிருந்து வாழை வாங்குவதாக கூறுகிறார்கள்.

- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- Pandemic என்றால் என்ன?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?
- முறையாக கை கழுவுதல் எப்படி?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்
- கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில் உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி?
- கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?

கடவுளிடம் மதம் இல்லை
எப்படி அனைவருக்கும் உதவும் எண்ணம் வந்தது என்று நம்மிடம் கூறும் அவர், "எங்கள் சிறுவயதில் எங்களை வளர்க்க பலர் தங்களாலான உதவிகளை செய்திருக்கிறார்கள் என என் பாட்டி எங்களிடம் கூறி இருக்கிறார். நாங்கள் வளர்ந்த பின்னும் அவ்வாறான உதவிகளை செய்ய வேண்டும் என எங்களை வலியுறுத்தி இருக்கிறார். குறிப்பாக சாதி, மத, இனப்பாகுபாடு பார்க்காமல் உதவ வேண்டும் என கோரி இருக்கிறார். அவர் கூறிய அறிவுரைகள்தான் நாங்கள் இப்போது பிறருக்கு உதவ காரணம்," என்கிறார் முஜமில்.
மதம் என்பது இங்குதான் உள்ளது. அது நாம் ஏற்படுத்திக் கொண்ட ஒன்று. கடவுளிடம் மதம் இல்லை என்று கூறுகிறார் முஜமில்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












