கொரோனா வைரஸ்: குடும்ப அட்டை இல்லாததால் கொரோனா நிவாரணம் பெற முடியாமல் தவிக்கும் பூர்வகுடிமக்கள்

    • எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இந்திராநகர். இப்பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இனத்தை சேர்ந்த மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் ஊசி, பாசி, மணி போன்றவற்றை பேருந்து நிலையம், ரயில்வே நிலையம் போன்ற பொது இடங்களில் விற்று தங்களது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து வந்தனர்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவால் வருமானம் இன்றி தவித்து வரும் நரிக்குறவர் இன மக்களுக்கு, குடும்ப அட்டை இல்லாததால் தமிழக அரசால் குடும்ப அட்டை தாரர்களுக்கு வழங்கபடும் கொரோனா நிவாரண தொகை மற்றும் உணவு பொருட்களான அரிசி, பருப்பு கிடைக்காமல், ஒரு வேளை சாப்பாட்டிற்கு கூட வழி இல்லாத சூழ் நிலையில் வாழ்ந்து வருவதாக நரிக்குறவர் இன மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இது குறித்து இந்திரா நகரில் வசிக்கும் ஸ்ரீதேவி பிபிசி தமிழிடம் பேசுகையில்: 'நான் புதுக்கோடை மாவட்டம் இந்திரா நகரில் வசித்து வருகிறேன் எனக்கு வயது 35 நானும் என் கணவரும் ஊசி, பாசி விற்று வரும் வருமானத்தில் தான் எங்கள் குழந்தைகளை காப்பாற்றி வருகிறோம்'.

'தற்போது ஊரடங்கு உத்தரவால் எந்த வேலையும் இல்லாமல் வீடுகளில் முடங்கி கிடக்கிறோம். ஒரு வேளை சாப்பாட்டிற்கு ரேஷன் அரிசி கூட கிடைக்கவில்லை'.

குடும்ப அட்டை இல்லாததால் கொரோனா நிவாரணம் இல்லை:

'எங்கள் காலணியில் 32 வீடுகள் உள்ளது வீடு ஒன்றில் மூன்று, நான்கு குடும்பங்கள் என 200க்கும் அதிகமானோர் வசித்து வருகிறோம். ஆனால் ஒரு சில குடும்பத்திற்கு மட்டுமே குடும்ப அட்டை உள்ளது'. 'எங்கள் காலனியில் வசித்து வருபவர்கள் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக குடும்ப அட்டை வழங்க கோரி பல முறை மனு அளித்துள்ளனர் ஆனால், இன்று வரை எங்களுக்கு குடும்ப அட்டை வழங்கப்படவில்லை.'

'குடும்ப அட்டை இல்லாததால் அரசு கொடுக்கும் நிவாரண தொகை மற்றும் அரிசி,பருப்பு,சமையல் எண்ணெய் எதுவும் கிடைக்கவில்லை இதனால் சமைத்து சாப்பிட அரிசி இல்லாமல் கஷ்டப்பட்டு வருகிறோம்'.

தொடர்ந்து பேசிய ஸ்ரீதேவி 'நாங்கள் நாலு எழுத்து படித்து இருந்தால் அதிகாரிகளை சந்தித்து பேசி குடும்ப அட்டை கிடைக்க வழி செய்து இருக்க முடியும் ஆனால் படிப்பு அறிவு இல்லாததால் எங்களால் இன்று வரை குடும்ப அட்டை வாங்க முடியவில்லை'.

வாழ்வதற்கு அரிசி தங்குவதற்கு வீடு

'பங்குனி,சித்திரை இந்த இரண்டு மாதங்களும் கோவில் திருவிழாக்களில் ஊசி, பாசி,பலூன்,பொம்மை விற்று நாலு காசு சம்பாதிப்போம் ஆனால் திருவிழாக்களுக்கு தடை விதித்தால் அந்த வருமானமும் கிடைக்கவில்லை இந்த நேரத்தில் அரசு கொடுக்கும் அரிசி கிடைத்து இருந்தால் ஒரு வேளை யாவது நிம்மதியாக சாப்பிட்டு இருக்கலாம்'.

'நாங்கள் சொத்து, பணம் எதுவும் சேர்த்து வைக்கவில்லை, அன்றாட வாழ்கைக்கு தேவையானவற்றை மட்டும்மே சம்பாதித்து இது நாள் வரை வாழ்ந்து வந்தோம்'. 'நாங்கள் அரசாங்கத்திடம் கேட்பது இரண்டு மட்டும் தான் பிழைக்க ரேஷன் பொருட்கள், வசிப்பதற்கு ஒரு வீடு இந்த இரண்டு மட்டும் செய்து கொடுத்தால் போதுமானது' என்றார் ஸ்ரீதேவி.

பசிக்கு பூனை,முயல் கூட வேட்டையாட முடியவில்லை:

இது குறித்து இந்திரா நகரில் வசித்து வரும் மயிலமுத்து பிபிசி தமிழிடம் பேசுகையில் 'எனக்கு வயது 70 ஆகிறது முன்பெல்லாம் சாப்பாட்டிற்கு பூனை முயல் போன்றவற்றை வேட்டையாடி வந்தோம் ஆனால், தற்போது அது கூட கிடைப்பதில்லை'. 'கடந்த 15 நாட்களுக்கு முன் அரசாங்கத்தில் இருந்து வீடு ஒன்றுக்கு 5 கிலோ அரிசி,காய்கறி கொடுத்தார்கள் அது எப்படி எங்களுக்கு போது மானதாக இருக்கும்.'

அரசாங்கம் எங்களுக்காக ரு.5000 நிவாரணமாக கொடுத்தால் நன்றாக இருக்கும் அதே போல் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் அரசு சார்பில் தொகுப்பு வீடு கட்டி கொடுக்கபட்டது ஆனால், தற்போது அனைத்து வீடுகளும் சேதமடைந்துள்ளது'.

'தங்குவதற்க்கு இடமில்லாமல், உண்பதற்கு உணவில்லாமல், குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் உப்புத் தண்ணீர் அருந்தி வாழும் எங்கள் மக்களுக்கு அரசு எதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என மயில முத்து தெரிவித்தார்.

இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி 'புதுக்கோட்டை மாவட்டம் இந்திரா நகரில் 32 குடும்பங்கள் வசித்து வருகிறது. இதில் 23 குடும்பங்களுக்கு குடும்ப அட்டைகள் உள்ளது'.

நரிக்குறவர் இன மக்களுக்கு தடையில்லாமல் உணவு வழங்கப்படும்:

'மீதம் உள்ள 9 குடும்பங்களுக்கு ஆதார் அட்டை புதுப்பிக்கபடாததால் அவர்களுக்கு குடும்ப அட்டைகள் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது இருப்பினும் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் சார்பில் விரைவில் நரிக்குறவர் இன மக்களுக்கு குடும்ப அட்டைகள் வழங்கப்படும்' என்றார்.

மேலும் கூறுகையில் 'கடந்த 14 ந்தேதி கந்தர்வகோட்டை வட்டாச்சியரால் ஒரு மூட்டை அரிசி மற்றும் ஒரு மூட்டை காய்கறிகள் வழங்கப்பட்டுள்ளது. இந்திரா நகரில் வசித்து வரும் நரிக்குறவர் இன மக்களுக்கு தடையில்லாமல் உணவு கிடைக்க முழு நடவடிக்கை எடுக்கப்படும்'.

'நரிக்குறவர் இன மக்கள் வசித்து வரும் காலனியில் வீடுகள் சேதமடைந்தது குறித்து ஆய்வு செய்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: