You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா வைரஸ்: தமிழகம் வாங்கிய 'ரேபிட் டெஸ்ட் கிட்'டின் விலை அதிகமாக இருப்பது ஏன்?
கொரோனா வைரஸ் தாக்குதல் இருக்கிறதா என்பதைத் துரிதமாகக் கண்டறிய உதவும் 'ரேபிட் டெஸ்ட் கிட்'கள் இன்று தமிழகத்தை வந்தடைந்திருக்கும் நிலையில், அவற்றின் விலை அதிகமாக இருப்பது குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.
கொரோனா நோய் தடுப்பு முயற்சியில், பெரும் எண்ணிக்கையிலான மக்களுக்கு வேகமாக சோதனை செய்ய உதவும் 'ரேபிட் டெஸ்ட் கிட்கள்' இன்று தமிழகத்தை வந்தடைந்துள்ளன. தமிழ்நாடு சுகாதாரத் துறை ஆர்டர் செய்த 5,00,000 கிட்களில் 24,000 கிட்களும் மத்திய அரசுக்கு வந்த கிட்களில் 12 ஆயிரம் கிட்களும் இன்று தமிழகத்தை வந்தடைந்திருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்த கிட்களை வைத்து உடனடியாக சோதனைகளும் துவங்கப்பட்டன. இந்த நிலையில், செய்தியாளர் சந்திப்பில் இந்த ரேபிட் டெஸ்ட் கிட்களின் விலையைச் சொல்வதில் அதிகாரிகள் காட்டிய தயக்கம், 600 ரூபாய் விலைக்கு ஒரு கிட்டை வாங்கியிருப்பது ஆகியவை சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.
மத்திய அரசு நிர்ணயித்த 600 ரூபாய்க்கு ரேபிட் டெஸ்ட் கருவிகள் வாங்கப்பட்டது என்றும் தமிழக அரசு முன்கூட்டியே ஆர்டர் செய்துவிட்டதால் நாம் அதிக பணம் செலவிட நேர்ந்தது என்றும் தமிழக அரசு சார்பில் பிபிசி தமிழிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று குறித்த தகவல்களை அளிக்கும் தினசரி செய்தியாளர் சந்திப்பு சனிக்கிழமையன்று நடந்தபோது, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
அப்போது தமிழகத்திற்கு வந்தடைந்திருக்கும் ரேப்பிட் டெஸ்ட் கிட் ஒன்றின் விலை என்ன என செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். சட்டீஸ்கர் மாநிலத்தில் ஒரு கிட் 337 ரூபாய்க்கு வாங்கப்பட்டிருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் என்ன விலைக்கு வாங்கப்பட்டிருக்கிறது என செய்தியாளர்கள் கேட்டனர்.
- கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- Pandemic என்றால் என்ன?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா வைரஸ் குணமடைந்த பின்னும் மீண்டும் தாக்குமா?
- கொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?
- முறையாக கை கழுவுதல் எப்படி?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்
- கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில் உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி?
- கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?
- வைரஸுக்கு ஏற்ற சூழ்நிலையும், அதை எளிதில் கட்டுப்படுத்தும் வழிகளும்
- கோடைக் காலம் வந்தால் கொரோனா வைரஸ் சாகுமா?
இது தொடர்பான கேள்விகளுக்கு, தமிழ்நாட்டில் மருத்துவ உபகரணங்களைக் கொள்முதல் செய்யும் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் நிர்வாக இயக்குநர் உமாநாத் பதிலளிப்பார் என விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
இதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய உமாநாத், "ஆன்டி - பாடி அடிப்படையில் இந்த சோதனையைச் செய்யும் ரேபிட் டெஸ்ட் கிட்களுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் ஏப்ரல் 2ஆம் தேதி ஒப்புதல் அளித்தது. இதற்கு அடுத்த நாள் அவர்கள் இந்த கிட்களை வாங்குவதற்கான முயற்சிகளை எடுத்தார்கள். அதற்கு அடுத்த நாளே, மத்திய அரசு ஒப்புதல் அளித்த விலையில், அதே நிறுவனத்திற்கு நாங்கள் ஆர்டர் கொடுத்தோம்" என்று தெரிவித்தார்.
பிறகு செய்தியாளர்கள் மீண்டும் விலை குறித்த கேள்வியை எழுப்பினர். அதற்கு பதிலளித்த உமாநாத், "மத்திய அரசு 15 லட்சம் கிட்களை ஆர்டர் செய்திருப்பதாகத் தெரிகிறது. தமிழக அரசு 5 லட்சம் ஆர்டர் செய்திருக்கிறோம். இந்தியாவிற்கு வந்த முதல் பேட்சில், 3 லட்சம் கிட்கள் இருந்தன. அதில் தமிழகத்திற்கான 24 ஆயிரம் கிட்கள் வந்திருக்கின்றன. மத்திய அரசின் பங்கிலிருந்து 12 ஆயிரம் கிட்கள் வந்திருக்கின்றன. மீத கிட்கள் விரைவில் வரும்" என்றார்.
இதற்குப் பிறகு மீண்டும் விலை குறித்து கேட்டபோது, மத்திய அரசு எங்கு வாங்கியதோ, அதே விலையில், அதே நிறுவனத்தில்தான் வாங்கினோம் என்று தெரிவித்தார். மீண்டும் விலை குறித்து கேட்டபோது, "மத்திய அரசு நிர்ணயித்த விலையை மத்திய அரசிடம்தான் கேட்க வேண்டும்" என்று தெரிவித்தார் உமாநாத்.
"மத்திய அரசு ஏப்ரல் 3 ஆம் தேதி ஆர்டர் கொடுத்தது. இதற்குப் பிறகு பல மாற்றங்கள் நிகழ்ந்தன. நாம் ஆர்டர் செய்தபோது இருந்த நிறுவனங்கள் மிகக் குறைவு. ஏழு நிறுவனங்கள்தான் இருந்தன. சட்டீஸ்கர் மாநிலம் ஆர்டர் செய்திருக்கும் கம்பெனிக்கு, அந்தத் தருணத்தில் ஒப்புதலே இல்லை. நாமும் மத்திய அரசும் ஆர்டர் செய்த பிறகு, இந்த கிட்களுக்கான சுங்கவரி, சுகாதார சிறப்பு வரி ஆகியவை நீக்கப்பட்டன. ஆகவே அதற்குப் பிறகு வாங்கியவர்களுக்கு விலை குறைவாகத்தான் இருக்கும். ஆகவே தமிழக அரசு கூடுதல் விலைக்குக் கொள்முதல் செய்தது என்று சொல்வது தவறான கருத்து. மத்திய அரசு எந்த நிறுவனத்திடமிருந்து, எந்த விலைக்கு வாங்கியதோ அந்த நிறுவனடமிருந்து அதே விலைக்குத்தான் நாம் வாங்கியிருக்கிறோம். மத்திய அரசு கொள்முதலுக்கு நிர்ணயித்த விலையை மற்றொரு மாநிலம் வாங்கிய விலையோடு ஒப்பிடுவது சரியாக இருக்காது. நாங்கள் புதிதாக வாங்குவதற்கு ஒரு டெண்டர் விட்டால், சட்டீஸ்கர் வாங்கியதைவிட குறைந்த விலைக்கு வாங்க முடியும். அந்தத் தருணத்தில் சட்டீஸ்கர் வாங்கியது கூடுதல் விலை என ஆகிவிடாது. காரணம் வரி விகிதம், நிறுவனங்கள் மாறியிருக்கின்றன" என்று தெரிவித்தார் உமாநாத்.
விலையைச் சொல்வதில் என்ன தயக்கம் என்றும் ஒரு கிட்டை 600 ரூபாய்க்கு வாங்கியதாக சொல்லப்படுகிறதே அது சரியான தகவலா என்றும் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். இதற்குப் பதிலளித்த உமாநாத், "நீங்களே விலையைக் குறிப்பிட்டு கேள்வியெழுப்பியிருக்கிறீர்கள். நாம் விலையை நிர்ணயிக்காதபோது, மற்றொரு மாநிலம் குறைந்த விலைக்கு வாங்கியிருக்கும் நிலையில், அந்த அமைப்பைக் குறைசொல்லக்கூடாது" என்று தெரிவித்தார்.
செய்தியாளர் சந்திப்பு முடிந்த பிறகு, தமிழக அரசு ஒரு கிட்டை 600 ரூபாய் விலைக்கு வாங்கியிருப்பது தொடர்பான ஆவணங்களைச் செய்தியாளர்களிடம் காண்பித்தார் உமாநாத்.
நேற்று காலையில் ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்த சட்டீஸ்கர் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் டிஎஸ் சிங் தியோ, "75,000 உயர் ரக டெஸ்ட் கிட்களை ரூ. 337 + ஜிஎஸ்டி என்ற விலையில் தென்கொரிய நிறுவனம் ஒன்றிடமிருந்து வாங்கியிருக்கிறோம். இந்தியாவிலேயே இது மிகக் குறைந்த விலை. இந்தியாவில் உள்ள தென்கொரியத் தூதர், தென்கொரியாவில் உள்ள இந்தியத் தூதர் ஆகியோருடன் நடத்திய பேச்சுவார்த்தையால் இது சாத்தியமானது. வெல்டன் டீம்!" என்று குறிப்பிட்டிருந்தார்.
இதையெடுத்தே, தமிழக அரசு என்ன விலைக்கு இந்த ரேபிட் டெஸ்ட் கிட்களை வாங்குகிறது என்ற சர்ச்சை எழுந்தது.
தமிழக அரசின் பதில் என்ன?
ரேபிட் டெஸ்ட் கிட் வாங்குவதற்கு தமிழக அரசு செலவிட்ட பணம் அதிகமாக இருப்பது குறித்த சர்ச்சை பற்றி பிபிசி தமிழிடம் பேசிய, பெயர் வெளியிட விரும்பாத சுகாதாரத்துறை உயர் அதிகாரி ஒருவர் மத்திய அரசு நிர்ணயித்த 600 ரூபாய்க்கு ரேபிட் டெஸ்ட் கருவிகள் வாங்கப்பட்டது என்றார். ''தமிழக அரசு முன்கூட்டியே ஆர்டர் செய்துவிட்டதால் நாம் அதிக பணம் செலவிட நேர்ந்தது. அதோடு, வாங்குவதற்கு நாம் தயாராக இருந்தாலும் பொருட்கள் கிடைப்பதற்கு காலம் தேவைப்படுகிறது என்பது மற்றொரு பிரச்சனை,'' என்றார்.
முகக்கவசம் மற்றும் தெர்மல் ஸ்கேனர் உபகரணங்களை பொறுத்தவரை, மத்திய அரசு நிர்ணயம் செய்தவிலையைவிட குறைந்தவிலைக்கு தமிழக அரசு வாங்கியது என்றார்.
''முகக்கவசத்திற்கான மூலப்பொருள் சீனாவில் இருந்து நேரடியாக வரவேண்டிய தேவை இருந்தது. அதாவது, மத்திய அரசு ஒரு முகக்கவசத்திற்கு ரூ.13 என முடிவு செய்திருந்தது. தமிழக அரசு முகக்கவசம் வாங்க ரூ.9 என விலை நிர்ணயம் செய்து, அதனை பெற்றது. அதேபோல தெர்மல் ஸ்கேனர் வாங்கும்போது, ரூ.4,000 என்பது சாதாரண நாட்களில் விற்கப்படும் விலை. ஆனால் கொரோனா தொற்று சமயத்தில் அதே தெர்மல் ஸ்கேனரின் விலையை ரூ.15,000 என தனியார் நிறுவனம் உயர்த்திவிட்டது. முதலில், கொரோனா பரவலை குறைக்கவேண்டும் என்ற எண்ணத்தில், முதலில் ஆர்டர் செய்துவிட்டோம், பின்னர் அவர்களிடம் பேசி விலையை குறைத்துவாங்கினோம்,'' என்றார் அந்த அதிகாரி.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: