கொரோனா வைரஸ்: கடற்படை வீரர்களுக்கு கோவிட் 19 தொற்று - இந்தியா மற்றும் தமிழக நிலவரம்

இந்தியாவில் புதிதாக 991 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் 43 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,378 ஆக அதிகரித்துள்ளது. இதில் 1992 பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

லக்னோவில் நேற்று பரிசோதிக்கப்பட்ட 1062 மாதிரிகளில், 98 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவின் நாக்பூர் பகுதியில் புதிதாக 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை நாக்பூரில் மட்டும் 63 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 12 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என மாவட்ட அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மும்பையில் உள்ள ஐ.என்.எஸ் ஆங்ரே கப்பல் துறைமுகத்தில் உள்ள கடற்படையை சேர்ந்த 21 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 20 பேர் கப்பல்களில் பயணம் மேற்கொள்கிறவர்கள். கடந்த ஏப்ரல் 7ம் தேதி கப்பலில் பயணம் மேற்கொள்ளும் ஒரே ஒரு அதிகாரிக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள குல்பர்கா பல்கலைக்கழகம் மற்றும் கர்நாடகாவின் மத்திய பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவர்கள் தங்கும் விடுதிகளை கொரோனா நோயாளிகளைத் தனிமைப்படுத்தும் இடமாகப் பயன்படுத்த வேண்டும் என கலபுராகி மாவட்டத்தின் துணை ஆணையர் ஷரத் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் புதிதாக 41 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இதில் ஒருவருக்கு சிறுநீரகத்தில் ஏற்கனவே பாதிப்பு இருந்தது என்று அம்மாநில சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் ராஜஸ்தான் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1270 ஆக அதிகரித்துள்ளது. அம்மாநிலம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக உள்ளது.

தமிழகத்தில் என்ன நிலை ?

மத்திய அரசின் தொகுப்பிலிருந்து 12,000 ரேபிட் கிட்கள் தமிழகத்திற்கு வந்துசேர்ந்துள்ளன. சேலம் மாவட்டத்திற்கு 1,000கிட்கள் அளிக்கப்பட்டுள்ளன என அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மதுரையில் சித்திரை திருவிழா நடைபெறாது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் மட்டும் கோவிலுக்குள் நடத்தி முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், தமிழ்நாட்டின் மிகப் பெரிய திருவிழாக்களில் ஒன்றான மதுரை சித்திரைத் திருவிழா ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஆண்டுதோறும் மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை மாதத்தில் மிகப் பிரம்மாண்டமான முறையில் நடக்கும் சித்திரைத் திருவிழாவுக்கான கொடியேற்றம் இந்த ஆண்டு ஏப்ரல் 25ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்க வேண்டும். இதன் உச்சகட்ட நிகழ்வான மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் மே 4ஆம் தேதியும் தேரோட்டம் மே ஐந்தாம் தேதியும் நடக்க வேண்டும்.

ஆனால், கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்த ஆண்டு சித்திரைத் திருவிழா ரத்துசெய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. திருவீதி உலாக்கள், பட்டாபிஷேகம், திக் விஜயம், திருக்கல்யாணம், திருத்தேரோட்டம் ஆகிய எந்த நிகழ்வும் நடக்காது என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

திருக்கல்யாண நிகழ்வு மட்டும் மே நான்காம் தேதியன்று காலை 9 மணியிலிருந்து 9.29க்குள் சுவாமி சன்னிதியில் உள்ள சேத்தி மண்டபத்தில் நான்கு சிவாச்சாரியார்கள் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடக்குமெனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிகழ்வு கோவிலின் இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்புச்செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மீனாட்சி திருக்கல்யாண தருணத்தில் பெண்கள் தங்கள் மாங்கல்யத்தை மாற்றும் மரபு உள்ளது. அப்படிச் செய்ய விரும்பும் பெண்கள் மேலே குறிப்பிட்ட நேரத்தில் வீட்டிலேயே அதைச் செய்யும்படி கூறப்பட்டுள்ளது.

சித்திரைத் திருவிழாவின் மற்றொரு பகுதியான ஆற்றில் அழகர் இறங்கும் வைபவம் சுந்தரராஜப் பெருமாள் கோவிலின் மூலம் நடத்தப்படும். அது தொடர்பான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

இந்த இரு திருவிழாக்களும் சித்திரை மற்றும் மாசி மாதங்களில் நடந்துவந்தன. மதுரையை திருமலை நாயக்கர் ஆட்சி செய்த காலத்தில் இந்த இரு திருவிழாக்களும் சித்திரை மாதத்தில் நடக்கும் வகையில் ஒருங்கிணைக்கப்பட்டன.

சென்னை கோயம்பேடு காய்கனி அங்காடி வளாகத்திற்கு நாளை முதல் காலை 7.30 மணிக்கு மேல் இருசக்கர வாகனங்களில் காய்கனி வாங்க வரும் நபர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஊரடங்கு விதிகளை மீறியவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம் ரூ.1 கோடியை தாண்டியது. தமிழகம் முழுவதும் 2,14,951 வழக்குகள் பதிவாகியுள்ள. இதுவரை 1,94,339 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஊரடங்கை மீறியதாக 2,28,823 பேர் கைதாகி விடுதலையாகி உள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: