கொரோனா வைரஸ் பரவலுக்கு உள்ளான இந்திய கடற்படையினர் வசித்த கட்டடம்

கோவிட்-19 தொற்று இருப்பதாக கண்டறியப்பட்ட 21 இந்திய கடற்படை வீரர்களில் 20 பேர் ஐ.என்.எஸ் ஆங்ரே எனும் கட்டடத்தில் வசித்து வந்துள்ளனர்.

மும்பையின் கடற்கரைப் பகுதிக்கு அருகாமையில், கப்பல் பராமரிப்பு பகுதியில் அமைந்துள்ள இந்த கட்டடத்தில்தான் இன்னும் திருமணமாகாத கடற்படை வீரர்கள் தங்கியுள்ளனர்.

ஐ.என்.எஸ் ஆங்ரே கட்டடத்தில் 650 முதல் 750 வரை எண்ணிக்கையிலான கடற்படை வீரர்கள் தங்கியுள்ளனர் என்று பெயர் வெளியிட விரும்பாத கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்

பெரும்பாலான திருமணமாகாத ஆண்களுக்கான விடுதிகளைப் போலவே இந்தக் கட்டத்திலும் தனித்தனியான சமையலறைகள் இல்லை. எனவே அனைவருக்கும் ஒரே இடத்தில்தான் உணவு சமைக்கப்படுகிறது.

அதைப்போலவே இந்த கட்டடத்தில் உள்ள அறைகளுக்கு தனித்தனிக் கழிவறைகளும் கிடையாது. ஆதலால் அங்கு தங்கியிருந்தவர்கள் அனைவருக்கும் பொதுவான கழிவறைகளையே பயன்படுத்தியுள்ளனர்.

கடற்படையினருக்கு கோவிட்-19 இருப்பது எவ்வாறு கண்டறியப்பட்டது?

ஐ.என்.எஸ் ஆங்ரே கட்டடத்தில் தங்கியுள்ள 20 கடற்படையினர் உள்பட 21 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாக இந்திய கடற்படை செய்தி வெளியிட்டது.

இந்திய கடற்படையில் இருப்பவர்களுக்கு கொரோனா வைரஸ்தொற்று இருப்பது ஏப்ரல் ஐந்தாம் தேதி செய்யப்பட்ட சோதனையின்போது முதன் முதலில் தெரியவந்தது.

ஏப்ரல் ஐந்தாம் தேதி செய்யப்பட்ட சோதனையின் முடிவு ஏப்ரல் ஏழாம் தேதி தெரியவந்தது.

அப்போது வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டவருக்கு மும்பையிலுள்ள ஐ.என்.எஸ் அஸ்வினி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்திய கடற்படையின் மேற்கு மண்டலத்தில் மிகப்பெரிய மற்றும் நவீன மருத்துவமனையாக ஐ.என்.எஸ் அஸ்வினி உள்ளது.

ஏப்ரல் ஏழாம் தேதி தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட கடற்படை வீரருடன் தற்போது தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ள பிற கடற்படை வீரர்கள் தொடர்பில் இருந்தார்கள் என்று இந்திய கடற்படை தெரிவிக்கிறது.

கோவிட்-19 தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளவர்களில் 20 பேர் ஒரே கட்டடத்தில் வசித்தவர்கள் என்பதால் அதீத கவனம் செலுத்தப்படுகிறது.

தற்போது தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளவர்கள் அனைவரும் 20 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று தகவல் தெரிந்தவர்கள் கூறுகிறார்கள். அவர்கள் வசித்து வந்த அந்த கட்டடம் இப்பொழுது முழுவதுமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இப்பொழுது இந்தியா முழுவதும் உள்ள கடற்படை கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்களில் இருப்பவர்களுக்கும் கோவிட்-19 தொற்று ஏற்படாமல் இருப்பதற்காக இந்திய கடற்படை மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகிறது.

இந்திய ராணுவத்திலும் 8 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதுமட்டுமல்லாமல் அமெரிக்காவுக்கு சொந்தமான கடற்படை போர்க் கப்பலான 'தியோடர் ரூஸ்வெல்ட்' எனும் கப்பலில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு வைரஸ் தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது.

அதன் பின்பு அக்கப்பலுடன் தொடர்பில் இருந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: