கொரோனா வைரஸ்: இந்தியாவில் ஒரு நாளில் எத்தனை பேருக்கு பரிசோதனை செய்ய முடியும்?

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 12000-ஐ கடந்துள்ளது.

இந்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் இன்று மாலை 4 மணியளவில் வெளியிட்ட தகவலின்படி இதுவரை 12759 பேர் இதுவரை கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அந்த அமைச்சகத்தின் தரவுகளின்படி வியாழன் மாலை 6 மணி வரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 420ஆக உள்ளது.

1514 பேர் குணமடைந்துள்ளனர் அல்லது தொற்று உண்டானபின் இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளனர். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 10,824 ஆக உள்ளது.

இந்தத் தரவுகளின்படி நேற்றைவிட இன்று 1320 பேர் கூடுதலாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதிகமானவர்கள் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் முதல் மூன்று இடங்களில் மகாராஷ்டிரா, டெல்லி, தமிழகம் ஆகியன உள்ளன.

புதன்கிழமைக்கான தரவுகள் இந்திய அரசால் வெளியிடப்பட்டபின் 43 பேர் கோவிட்-19 தொற்று காரணமாக இந்தியா முழுவதும் இறந்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 3.3% பேர் இறந்துள்ளனர். 12.02% பேர் குணமடைந்துள்ளனர் என்று சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் இன்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

எத்தனை பேருக்கு கொரோனா வைரஸ் சோதனை?

இந்தியா முழுவதும் இதுவரை 2,90,401 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா என்று சோதனை செய்யப்பட்டுள்ளது என அந்த செய்தியாளர் சந்திப்பில் இந்திய மருத்துவர் ஆராய்ச்சிக் கழகத்தின் தலைவர் மருத்துவர் கங்காகேத்கர் தெரிவித்துள்ளார்.

அவற்றில் 30,043 பரிசோதனைகள் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

ஒரு நாளுக்கு 40,000 பேருக்கு பரிசோதனை செய்யும் அளவுக்கு இந்தியா முழுவதும் உள்ள ஆய்வகங்களில் வசதிகள் உள்ளன என்று கங்காகேத்கர் கூறியுள்ளார்.

இந்தியாவில் குறைவானவர்களுக்கே கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்படுவதாக காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி எழுப்பியுள்ள விமர்சனம் குறித்து அந்த செய்தியாளர் சந்திப்பில் அப்போது கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த கங்காகேத்கர், "ஒருவருக்கு தொற்று இருப்பதைக் கண்டறிய ஜப்பானில் சராசரியாக 11.7 பேருக்கும், இத்தாலியில் சராசரியாக 6.7 பேருக்கும், அமெரிக்காவில் சராசரியாக 5.3 பேருக்கும், பிரிட்டனில் சராசரியாக 3.4 பேருக்கும் பரிசோதனை செய்யப்படுகிறது. ஆனால் இந்தியாவில் 24 பேருக்கு பரிசோதனை செய்ய்யப்படுகிறது," என்றார்.

ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டுகள் என்ன?

ஊரடங்கு என்பது வைரஸ் தொற்றை தற்காலிகமாக தள்ளிப்போடுமே தவிர, இது முடிவுக்கு வந்தவுடன் மீண்டும் இந்தத் தொற்று வேகமாக பரவும் என இன்று மதியம் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

"நாம் அவசர நிலையில் இருக்கிறோம். ஒட்டுமொத்த இந்தியாவும் இணைந்து இந்த வைரஸ் தொற்றுக்கு எதிராக போராட வேண்டும். நாம் நன்கு யோசித்து செயல்பட வேண்டியுள்ளது," என்றும் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

"கொரோனா வைரசிற்கு எதிரான ஆயுதம், அதிக பரிசோதனைகளை செய்வது மட்டுமே. நாம் 10 லட்சம் மக்களில் 199 பேரை மட்டுமே பரிசோதிக்கிறோம். கடந்த 72 நாட்களில் நாம் செய்த பரிசோதனையை எடுத்துக் கொண்டால், ஒரு மாவட்டத்திற்கு சுமார் 350 பரிசோதனைகளையே செய்திருக்கிறோம்.

வரும் நாட்களில் பெருமளவு பரிசோதனை நடத்தப்பட வேண்டும். நோயாளிகளை கண்டறிவதோடு, வைரஸ் எந்த பகுதிக்கு நகர்கிறது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்" என அவர் தெரிவித்திருந்தார்.

மாநில மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் மூலம் பரவலைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று கூறியிருந்த ராகுல், இதைப் பின்பற்றி கேரளா வெற்றி பெற்றிருப்பதாகத் தெரிவித்திருந்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: