You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா வைரஸ்: ஏப்ரல் 20 முதல் அமலுக்கு வரும் மத்திய அரசின் நெறிமுறைகள் இவைதான் - விரிவான தகவல்
கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு வரும் மே 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கு உத்தரவின்போது கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளையும், விலக்கு அளிக்கப்பட்ட சில நடவடிக்கைகள் குறித்த தகவல்களையும் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
நேற்று மோதி கூறியது
கொரோனா வைரஸ் தொற்று அதிகமாகப் பரவி வரும் நிலையில் அதைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு அவசியம் என நேற்று கூறிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, மே 3-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என்று அறிவித்து இருந்தார்.
கொரோனா வைரஸ் தொற்று இல்லாத பகுதிகளில் ஏப்ரல் 20-க்குப் பிறகு நிபந்தனைகளுடன் சில தளர்வுகள் இருக்கும் எனக் கூறி இருந்தார். அவை குறித்து இன்று அறிவிக்கப்படும் என தனது உரையில் குறிப்பிட்டு இருந்தார் மோதி.
இப்படியான சூழலில் மத்திய உள்துறை அமைச்சகம் அந்த நெறிமுறைகளை இன்று வெளியிட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளில் 10 முக்கிய அம்சங்கள் குறித்து பார்ப்போம்.
பின்பற்றப்பட வேண்டிய நெறிமுறைகள்
அனுமதி இல்லை
- நாட்டில் உள்ள அனைத்து கல்வி நிலையங்கள் மற்றும் பயிற்சி மையங்கள் மே 3 வரை மூடப்பட்டிருக்கும். திரையரங்குகள், நீச்சல் குளங்கள், உடற்பயிற்சி மையங்கள், மதுபான விடுதிகள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவையும் மே 3 வரை திறக்கப்படாது. இந்த காலகட்டத்தில் டாக்சி, ஆட்டோ, கேப் உள்ளிட்ட வாகன சேவைகளுக்கும் அனுமதி கிடையாது.எலக்ட்ரீசியன், பிளம்பர், மெக்கானிக்குகள், மரவேலை செய்பவர்கள் பழுது நீக்கும் பணிகளை மேற்கொள்ளலாம்
- மே 3-ஆம் தேதி வரை அனைத்து மத வழிபாட்டு இடங்களும் மூடப்பட்டிருக்கும். மேலும் இந்த காலகட்டம் வரை மத ரீதியிலான எந்த நிகழ்வுக்கும் அனுமதியில்லை. இறுதிச் சடங்குகளில் 20 பேருக்கு மேல் கூடுவதற்கு அனுமதியில்லை.
- உள்நாட்டு, வெளிநாட்டுப் பயணிகள் விமானச் சேவைகள், மெட்ரோ உள்ளிட்ட பயணிகள் ரயில் சேவைகள், பேருந்து போக்குவரத்து ஆகியவை மே 3 வரை செயல்படாது.
- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- Pandemic என்றால் என்ன?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?
- முறையாக கை கழுவுதல் எப்படி?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்
அனுமதி
- அனைத்து விவசாய மற்றும் தோட்டக்கலை தொடர்பான நடவடிக்கைகளும் முழு அளவில் செயல்பாட்டில் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. விவசாய இயந்திரங்கள் விற்கும் கடைகள், அவற்றைப் பழுது பார்க்கவும் கடைகள் உள்ளிட்டவையும் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
- அறுவடை மற்றும் விதை தூவும் இயந்திரங்களை மாநிலத்துக்கு உள்ளேயும், மாநிலங்களுக்கு இடையேயும் கொண்டு செல்லவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
- சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் ஏப்ரல் 20க்கும் பிறகு சில தொழிற்சாலைகள் செயல்பட அனுமதி வழங்கப்படும்.
- வங்கி கிளைகள், ஏடிஎம் மையங்கள், இவை தொடர்பான பணிகள் ஆகியவற்றின் செயல்பாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- ஏப்ரல் 20க்கும் பிறகு அத்தியாவசிய பொருட்களைத் தயாரிக்கும் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் ஊரக பகுதிகளில் உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் ஆகியவை செயல்பட அனுமதி.
- தேயிலை, காஃபி, ரப்பர் உற்பத்திப் பணிகளை 50 சதவீத ஊழியர்களுடன் மேற்கொள்ளலாம்
- ஏப்ரல் 20க்கு பிறகு சமூக இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து 100 நாள் வேலைத் திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- ஏப்ரல் 20க்கு பிறகு கொள்முதல் நிலையங்கள் செயல்படத் தடையில்லை.அதேபோல் ஏப்ரல் 20க்கு பிறகு மீன்பிடி தொழில் மற்றும் மீன் விற்பனைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பால் உற்பத்தி மற்றும் விநியோக பணிகளை வழக்கம் போல் மேற்கொள்ளலாம்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: