கொரோனா வைரஸ்: அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோதி ஆலோசனை

இந்திய பிரதமர் நரேந்திர மோதி, அனைத்து மாநில முதலமைச்சர்கள் உடனான ஆலோசனைக் கூட்டத்தைத் தொடங்கினார். இந்தக்கூட்டம் காணொளிக் காட்சி வாயிலாக நடைபெறுகிறது.

இந்தக் கூட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக அமலில் உள்ள ஊரடங்கு குறித்து ஆலோசிக்கப்பட்டு, முக்கிய முடிகள் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் உள்ளிட்ட பலரும் இந்தியாவில் ஊரடங்கை நீட்டிக்குமாறு பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ஏஎன்ஐ முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7,000-ஐ கடந்துள்ளது என்று இன்று காலை 9 மணியளவில் என்று இந்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை தெரிவித்துள்ளது..

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 40 பேர் இறந்துள்ளனர். 1,035 பேருக்கு புதிதாக தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தற்போது சிகிச்சை பெற்றுவரும் 6,565 பேர், உயிரிழந்த 239 பேர் உள்பட இதுவரை 7,447 பேர் இதுவரை இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

குணமடைந்த அல்லது நாட்டை விட்டு வெளியேறிய 643 பேரும் இதில் அடக்கம்.

இந்நிலையில் கேரளாவில் இன்று மூன்றாவது மரணம் பதிவாகியுள்ளது. புதுச்சேரியின் மாஹே மாவட்டத்தை சேர்ந்த 71 வயது முதியவர் ஒருவர் கண்ணூரில் உள்ள மருத்துவ கல்லூரியில் உயிரிழந்ததாக கேரள சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்கு நன்றி

இந்நிலையில் கொரோனா சிகிச்சைக்கு உதவும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை உதவ முன்வந்ததாக இந்தியாவுக்கு மாலத்தீவின் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா ஷாஹித் நன்றி தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா, ஸ்பெயின், ஜெர்மனி, பஹ்ரைன், பிரேசில், நேபாள், பூடான், ஆப்கானிஸ்தான், மாலத்தீவுகள், வங்கதேசம், மொரீஷியஸ், டோமினிக் குடியரசு, சீசலஸ் ஆகிய 13 நாடுகளுக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை இந்தியா அனுப்ப உள்ளதாக ஏ.என்.ஐ முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

வெளிநாடுகளுக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை ஏற்றுமதி செய்வதால் இந்தியாவில் அந்த மருந்துக்கு தட்டுப்பாடு நிலவக் கூடும் என்ற கருத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இணை செயலர் லாவ் அகர்வால், உள்நாட்டு தேவையான ஒரு கோடி மாத்திரைகளை விட 1.30 கோடி மாத்திரைகள் அதிகமாக கைவசம் உள்ளதாக விளக்கம் அளித்துள்ளார்.

இந்தியாவில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கடந்த 18 நாட்களில் 123 குடும்ப வன்முறை புகார்கள் வந்துள்ளதாக தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வரும் நிலையில், இந்தியர்கள் எவரும் நாட்டிற்குள் நுழையாத வண்ணம் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இலங்கையில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 197 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. கோவிட்-19 தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஏழாகும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: