You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா வைரஸ்: சமூக விலகலை மீறிய பாஜக எம்.எல்.ஏ - பிறந்தநாள் கேக், பிரியாணி விருந்து
சில முக்கிய இந்திய நாளிதழ்களில் வெளியான சில முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
டெக்கன் கிரானிக்கல் - சமூக விலகலை கடைபிடிக்காத பாஜக எம்.எல்.ஏ
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க சமூக விலகல் அவசியம் என்று வலியுறுத்தப்படும் சூழலில், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் தனது சொந்த கிராமத்தில், தன் ஆதரவாளர்களைக் கூட்டமாகக் கூட்டி வெள்ளியன்று தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
தும்கூரு மாவட்டத்தில் உள்ள துருவெக்கெரே சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினர் மசாலே ஜெயராம் கேக் வெட்டியபோது அங்கு கூடியிருந்தவர்கள் முகக்கவசம் எதுவும் அணியவில்லை என்கிறது டெக்கன் கிரானிக்கல் செய்தி.
இந்தக் கூட்டத்தில் குழந்தைகளும் இருந்தனர் என டெக்கன் கிரானிக்கல் செய்தி தெரிவிக்கிறது.
ஜெயராமின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பிரியாணி விருந்தும் நடந்தது.
அத்தியாவசியப் பொருட்களை வாங்க வெளியே செல்லும்போது மக்கள், கூட்டம் சேராமல் சமூக விலகலைக் கடைபிடிக்க வேண்டும் என்று அவர் அந்தக் கூட்டத்தில் பேசியுள்ளார்.
கோவிட்-19 தொற்றை கட்டுப்படுத்த கிராம மக்களுக்கு முகக்கவசம் வழங்கப்படும் என்றும் ஜெயராம் கூறியுள்ளார்.
தினத்தந்தி - சாலையோரம் தூங்கிய மருத்துவர்
மத்திய பிரதேச மாநிலம் போபால் நகரில் உள்ள ஜே.பி. அரசு மருத்துவமனையில் மருத்துவராக இருப்பவர், சச்சின் நாயக். அவருக்கு மனைவியும் 3 வயதில் ஒரு பெண் குழந்தையும் இருக்கிறார்கள். போபால் நகரில் கொரோனா வேகமாக பரவி வருகிறது.
இந்த நிலையில் மருத்துவமனைக்கு பணிக்கு செல்லும் சச்சின் நாயக், தன் மூலம் கொரோனா தொற்று பரவக்கூடாது என்பதற்காக, இரவில் வீடு திரும்புவது இல்லை. காரை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு இருக்கையை படுக்கை போல் சாய்த்து, அதிலேயே தூங்கிவிடுவார்.
அதற்காக காரில் தண்ணீர், சோப்பு, பேஸ்ட், பிரஷ் மற்றும் லேப்டாப் போன்றவை வைத்து கொள்வார். நேரம் கிடைக்கும் போது சாலை ஓரத்தில் சிறிது நேரம் நடந்து கொள்வார். மனைவி, மகளிடம் செல்போனில் பேசிக்கொள்வார்.
இவ்வாறாக அவர் ஒருவார இரவுகளை சாலை ஓரத்தில் காரிலே கழித்தார் என்கிறது தினத்தந்தி செய்தி.
இந்து தமிழ் திசை - ஊரடங்கை மீறிய 1.35 லட்சம் பேர் கைது
கொரோனா வைரஸ் பரவல் தடுப்புக்காக அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவை மீறியதாக தமிழகம் முழுவதும் கைது செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 35 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
1 லட்சத்து 6 ஆயிரத்து 539 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்கிறது இந்து தமிழ் திசை நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தி.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :