You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா வைரஸ் தடுப்பு ஊரடங்கு - மகனுக்காக 1200 கி.மீ பைக் ஓட்டிய தாய்
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6,000-ஐ கடந்துள்ளது.
இந்தியாவில் மூன்றாவது வாரமாக ஊரடங்கு அமலில் உள்ளது. ஏப்ரல் 14ஆம் தேதியோடு ஊரடங்கு உத்தரவு முடியவுள்ள நிலையில், இது மேலும் நீட்டிக்கப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.
சமீபத்திய நிலவரங்களை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.
- இந்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி இதுவரை 6,412 பேர் கோவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
- கடைசி 12 மணி நேரத்தில் மட்டும் 547 பேருக்கு கொரோனா இருப்பது தெரியவந்துள்ளது என்று இன்று காலை 9 மணியளவில் அந்த அமைச்சகம் கூறியுள்ளது.
- உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து 199 ஆகியுள்ளது. நேற்றைவிட இது 30 அதிகம். இப்போது 5,709 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- மும்பையின் தாராவி பகுதியில் மேலும் புதிதாக 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஏ.என்.ஐ முகமை செய்தி வெளியிட்டுள்ளது. இதில் இருவர் டெல்லி மத நிகழ்வில் கலந்து கொண்டவர்கள். இதோடு அப்பகுதியில் மொத்தம் 22 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி ஆகிய மாநிலங்கள் அதிகம் பாதித்த முதல் மூன்று இடங்களில் உள்ளன.
- இந்திய தலைநகர் டெல்லியில் இதுவரை 720 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
- அவர்களில் 22 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளதாகவும், 7 பேருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் டெல்லி சுகாதார அமைச்சர் சத்தியேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார்.
- கொரோனா பெருந்தொற்றை எதிர்த்து நாம் அனைவரும் ஒன்றாக போராட வேண்டும். நட்பு நாடுகளுக்கு முடிந்த உதவியை செய்ய இந்தியா தயாராக இருக்கிறது என் பிரதமர் நரேந்திர மோதி ட்வீட் செய்துள்ளார்.
- இஸ்ரேலிற்கு ஹைட்ராக்ஸிகுளோராகுயின் மருந்து அனுப்பியதற்கு இஸ்ரே்ல் பிரதமர் இந்தியாவுக்கு நன்றி தெரிவித்ததை அடுத்தே மோதி இவ்வாறு தெரிவித்தார்.
- இந்தியாவின் தென் கிழக்கு மாநிலமான அசாமில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக முதல் மரணம் பதிவாகியுள்ளதாக அம்மாநிலம் தெரிவித்துள்ளது.
மகனுக்காக சென்ற தாய்
நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தெலங்கானாவில் இருந்து 1,200 கிலோ மீட்டர் இரு சக்கர வாகனத்தில் பயணித்து ஆந்திராவில் இருந்த தனது மகனை அழைத்து வந்துள்ளார் ஒரு பெண்மணி.
தெலங்கானா மாநிலத்தில் உள்ள நிஜாமாபாத் என்ற நகரத்தில் இருந்து ஆந்திராவில் உள்ள நெல்லூர் வரை சென்று தன் மகனை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார் ராசியா பேகம்.
கொரோனா வைரஸ் தொற்றால் வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு உதவ உத்தரப்பிரதேச அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
முதல் கட்டமாக 11 லட்சம் கட்டடத் தொழிலாளர்களுக்கு அவர்களது வங்கிக் கணக்கில் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: