தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு: 571ஆக உயர்வு

தமிழகத்தில் இன்று (மார்ச் 5) ஒரே நாளில் 86 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதியாகியுள்ளதால், மாநிலத்தில் தற்போது கொரோனா தாக்கத்திற்கு ஆளானவர்கள் எண்ணிக்கை 571ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இன்று நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள 86 பேரில் 85 நபர்கள் டெல்லியில் நடைபெற்ற மத நிகழ்வில் பங்குபெற்றவர்கள் என்றும் ஒருவர் துபாயில் இருந்து தமிழகம் திரும்பியவர் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மூன்றாம் நிலைக்குச் செல்லக்கூடாது என மக்கள் ஒவ்வொருவரும் நினைக்கவேண்டும் என்றார்.

''தமிழகம் முழுவதும் 90,824 பேர் வீட்டு கண்காணிப்பில் உள்ளனர். 127 பேர் அரசு கண்காணிப்பில் உள்ளனர். இதுவரை எட்டு நபர்கள் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 4,612 பேர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது" என்றார் பீலா ராஜேஷ்.

கடந்த ஆறு தினங்களில் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கையை பார்க்கும்போது, ஒவ்வொரு நாளும் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை 50க்கும் மேற்பட்டதாக உள்ளது. இதில் பெரும்பாலானவர்கள் டெல்லி மதநிகழ்வில் கலந்துகொண்டவர்கள் அல்லது அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மார்ச் 31 - 57

ஏப்ரல் 1 - 110

ஏப்ரல் 2 - 75

ஏப்ரல் 3 - 102

ஏப்ரல் 4 - 74

ஏப்ரல் 5 - 86

அதேபோன்று, தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக அதிகரித்துள்ளது. சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 60 வயதான நபர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இராமநாதபுரத்தை சேர்ந்த 71 வயதான ஆண் ஒருவர் கடந்த மார்ச் 2ம் தேதி இறந்தார். இவர் கொரோனா தொற்றால் இறந்தார் என்பது தற்போது உறுதிசெய்யப்பட்டுள்ளது எனத் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த இரண்டு நபர்களின் இறப்பால் தமிழகத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை ஐந்தாகியுள்ளது.

டெல்லியில் நடந்த மத நிகழ்வு ஒன்றில் பங்குபெற்ற நபர்கள் பலருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. டெல்லியில் நடைபெற்ற அந்த நிகழ்வில் பங்கேற்றவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அந்த நபர்கள் அடையாளம் காணப்பட்டு சோதனை நடைபெற்றது. அதோடு, பங்கெடுத்தவர்கள் தாங்களாகவே வந்து கொரோனா சோதனை செய்துகொள்ளுமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

நேற்று(சனிக்கிழமை)கொரோனா தொற்று இருப்பதாக உறுதிசெய்யப்பட்ட 74 பேரில் 73 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை தமிழகத்தில் கொரோனா தாக்கத்தால், பாதிக்கப்பட்டவர்கள் 485 பேர் என்றும் அதில் 422 நபர்கள் டெல்லி மாநாட்டிற்குச் சென்றவர்கள், மற்றும் அவர்களோடு தொடர்பிலிருந்தவர்கள் என்றும் சுகாதாரத்துறைச் செயலர் பீலா ராஜேஷ் முன்னர் தெரிவித்திருந்தார்.

கொரோனா தாக்கத்தைக் கட்டுப்படுத்த இன்று(மார்ச் 5) முதல் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே செயல்படவேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள இறைச்சிக் கடைகளில் சமூக விலகலை கடைப்பிடிக்கவேண்டும் என மாநகராட்சி அதிகாரிகள் கட்டுப்பாடு விதித்துள்ளனர். விதிகளை மீறும் கடைகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

''மோதியின் அறிவிப்பின்படி மின்விளக்கை அணைத்தால் பழுது ஏற்படாது''

கொரோனா விழிப்புணர்வின் ஒரு பகுதியாக இன்று(மார்ச் 5) இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் டார்ச், அகல்விளக்கு அல்லது செல்போன் ஒளியை மக்கள் ஒளிர விட வேண்டும் என பிரதமர் மோதி வெளியிட்ட அறிவிப்பால், மின்சாதனங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கமணி இரவு 9 மணிக்கு மின் விளக்குகளை, அணைத்தாலும் மற்ற மின் சாதனங்களை மக்கள் இயக்கலாம் என தெரிவித்துள்ளார். மின் சாதனங்களுக்கு பழுது ஏற்படுமோ என மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் தெரிவித்தார்.

பிரதமரின் அறிவிப்பை வீடுகளில் மக்கள் பின்பற்றுவதில் பழுது இருக்காது என்றும், தெருவிளக்குகள் அணைக்கப்படாது மற்றும் மருத்துவமனைகளில் மின் விளக்குகள் அணைக்கப்படாது என்றும் தெரிவித்தார்.

கொரோனா தாக்கம் காரணமாக 21 நாட்கள் ஊரடங்கு பின்பற்றப்படுவதால், தொழிற்சாலைகளுக்கு மின்சாரத்தேவை குறைந்துள்ளது என்றும் அதனால் தினமும் சுமார் 5,000 மெகாவாட் மின்சாரம் சேமிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: