கொரோனா வைரஸ்: இந்திய மக்கள் எங்கெல்லாம் அதிக நேரம் செலவிட்டு இருக்கிறார்கள் தெரியுமா? மற்றும் பிற செய்திகள்

இந்திய மக்கள் எங்கெல்லாம் அதிக நேரம் செலவிட்டு இருக்கிறார்கள் தெரியுமா?

கூகுள் நிறுவனம் மக்களின் மொபைல் தகவல் மற்றும் கூகுள் மேப் தகவல்களைக் கொண்டு, கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட காலத்திலிருந்து மக்கள் எங்கெல்லாம் அதிகம் சென்று இருக்கிறார்கள், அதிக நேரம் செலவிட்டு இருக்கிறார்கள் என தொகுத்துள்ளது.

அதன்படி இந்திய மக்கள் உணவகங்கள், காபி பார், தீம் பார்க், நூலகம், திரையரங்கம் செல்வது சராசரியைவிட 77 சதவீதம் குறைந்துள்ளது. அதுபோல மளிகைக் கடைகளுக்குச் செல்வது 65 சதவீதமும், பூங்காக்கள் மற்றும் கடற்கரை செல்வது 57 சதவீதமும், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் செல்வது 71 சதவீதமும், பணி இடங்களுக்குச் செல்வது 47 சதவீதமும் குறைந்துள்ளது. மக்கள் வீட்டில் இருப்பது 22 சதவீதம் அதிகரித்துள்ளது.

இவ்வாண்டு ஜனவரி 5 முதல் பிப்ரவரி 6 வரை மக்கள் எங்கெல்லாம் நேரம் செலவிட்டார்கள் என்பதுடன் ஒப்பிட்டு இந்தத் தகவல் தொகுக்கப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ்: வீட்டுக் கண்காணிப்பில் 90,412 பேர்; பாதிப்பு எண்ணிக்கை 400-ஐ கடந்தது

கொரோனா நோய் தொடர்பாக தமிழ்நாட்டில் 90,412 பேர் வீட்டிலேயே வைத்து கண்காணிக்கப்படுவதாக மாநில சுகாதாரத் துறைச் செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்திருக்கிறார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 411ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத் துறை செயலர், இன்று கொரோனா நோய் இருப்பதாக உறுதிசெய்யப்பட்ட 102 பேரில் 100 பேர் டெல்லி தப்லிக் ஜமாத் மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் என்று தெரிவித்தார்.

இலங்கையில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 10,000-க்கும் அதிகமானோர் கைது

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் கீழ் இதுவரை 10,730 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதுவரை அங்கு நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவிக்கின்றது.

கண்ணுக்குத் தெரியாத எதிரிக்கு எதிராக ஒன்று சேருவோம் - ஏ.ஆர். ரஹ்மான்

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் திரைத்துறை பிரபலங்கள் பலரும் அவர்களுடைய சமூக வலைதள பக்கங்கள் மூலமாக தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அது பலரது கவனத்தை ஈர்த்திருப்பது மட்டுமன்றி, சிந்திக்கவும் வைத்திருக்கிறது. அப்படிப்பட்ட சில பகிர்வுகளை இங்கே பார்க்கலாம்.

மலேசியாவில் 3,333 பேருக்கு பாதிப்பு: 25 விழுக்காட்டினர் குணமடைந்தனர்

மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றியோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்துள்ளது. இன்று புதிதாக 217 பேருக்கு நோய்த் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து அங்கு பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 3,333ஆக உள்ளது.

இதற்கிடையே கடந்த 24 மணி நேரத்தில் மேலும் மூன்று பேர் உயிரிழந்ததையடுத்து கொரோனா வைரஸ் தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 53ஆக அதிகரித்துள்ளது. எனினும் நோய்த் தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்த மேலும் 60 பேர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :