ஒரு காலத்தில் டைனோசர் எங்கெல்லாம் நடமாடின தெரியுமா? - ஆச்சரிய தகவல் மற்றும் பிற செய்திகள்

ஒரு காலத்தில் டைனோசர் எங்கெல்லாம் நடமாடின தெரியுமா?

மேற்கு அன்டார்டிகாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் 90 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் பகுதியில் டைனோசர்கள் நடமாடியது தெரியவந்துள்ளது. ஜெர்மனியின் ஆல்ஃப்ரெட் வேகனார் கல்வி நிலையம் இந்த ஆய்வினை மேற்கொண்டுள்ளது.

இந்த ஆய்வு முடிவானது நேச்சர் சஞ்சிகையில் வெளிவந்துள்ளது. அண்டார்டிகா கண்டமானது 90 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இப்போது உள்ளது போலப் பனிப் பிரதேசமாக இல்லாமல் அடர்ந்த காடாக இருந்துள்ளது. அந்த காடுகளில் டைனோசர் உலவி இருந்திருக்கின்றன ஐரோப்பாவின் சில பகுதிகளில் இப்போது நிலவும் வெப்ப நிலையில் அப்போது அண்டார்டிகா இருந்துள்ளது என்கிறது அந்த ஆய்வு.

கொரோனா வைரஸால் உலகளவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 60,000-ஐ தாண்டியது

கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அறுபது ஆயிரத்தை கடந்தது.

அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தரவின்படி, உலகம் முழுவதும் கோவிட்-19 நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இந்திய நேரப்படி இரவு 7:52 மணிக்கு 60,887ஆக உள்ளது.

அதன்படி, உலக நாடுகளிலேயே அதிகபட்சமாக இத்தாலியில் இதுவரை 14,681 பேரும், ஸ்பெயினில் 11,744 பேரும், பிரான்சில் 6,507 பேரும், பிரிட்டனில் 4,313 பேரும் கொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ்: தமிழகத்தில் மேலும் ஒருவர் பலி, நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்

தமிழகத்தில் மேலும் 74 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இதன் மூலம், தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 485ஆக அதிகரித்துள்ளது. இன்று கோவிட்-19 நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள 74 பேரில் 73 பேர் டெல்லி நிஜாமுதீனில் உள்ள மசூதியில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்றவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கை மீறி தொழுகை - தென்காசியில் 4 பேர் கைது; 300 பேர் மீது வழக்கு

தென்காசியில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு ஊரடங்கை மீறி வெள்ளிக்கிழமை தொழுகை செய்ய முயன்ற 300க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களில் நால்வர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலையாகியுள்ளனர்.

தென்காசி நடுப்பேட்டை பள்ளிவாசலில் நேற்று (வெள்ளிக்கிழமை) அனுமதியின்றி ஏராளமானோர் தொழுகைக்காக கூடினர். இதுகுறித்து தகவல் அறிந்த தென்காசி வட்டாட்சியர், காவல் ஆய்வாளர் மற்றும் காவல் துறையினர் நடுப்பேட்டையில் உள்ள பள்ளிவாசலுக்கு சென்றனர்.

விவசாயம் முதல் விமானம் வரை முடங்கிய தொழில்கள்

டெல்லியில் உணவுக்காக வரிசையில் நிற்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களில் முகமது ஆலமும் ஒருவர். கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க பிரதமர் நரேந்திர மோதி 21 நாட்களுக்கு நாடு முழுவதும் முடக்கப்படும் என அறிவித்ததும் முகமது ஆலம் வேலை செய்த தொழிற்சாலையும் மூடப்பட்டது.

தினக்கூலியாக இருக்கும் அவருக்கு வேறு வருமானம் இல்லாத காரணத்தால் அரசு இலவசமாக உணவு அளிக்கும் மையத்திற்கு வருவதை தவிர வேறு வழி இல்லை.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: