நரேந்திர மோதி - ஏப்ரல் 5 அகல் விளக்கு அறிவிப்பு: மின் இணைப்புகளில் ஏற்படப் போகும் விளைவுகள் என்ன தெரியுமா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், முரளீதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் அனைவரும் ஒன்றிணைந்திருப்பதைச் சுட்டிக்காட்டும் வகையில், ஏப்ரல் ஐந்தாம் தேதி இரவு 9 மணிக்கு துவங்கி 9 நிமிடங்கள் வீட்டில் உள்ள மின் விளக்குகளை அணைக்கும்படி இந்தியப் பிரதமர் மோதி கோரிக்கை விடுத்திருக்கிறார். இப்படி ஒரே நேரத்தில் விளக்குகளை அணைப்பதால் மின் தொடரமைப்பு பாதிக்கப்படுமா?
வெள்ளிக்கிழமையன்று நாட்டு மக்களிடம் தொலைக்காட்சி மூலம் பேசிய பிரதமர் மோதி, ஞாயிற்றுக் கிழமையன்று இரவு 9 மணிக்கு வீடுகளில் மின் விளக்குகள் அனைத்தையும் அணைத்துவிடும்படி கோரியிருக்கிறார். இதற்கு முன்பாக மார்ச் 22ஆம் தேதி மாலை ஐந்து மணிக்கு கைகளைத் தட்டும்படி பிரதமர் கோரிக்கைவிடுத்தபோது, அதற்கு பெரும் ஆதரவு கிடைத்தது.
அதேபோல, இந்தக் கோரிக்கைக்கும் ஆதரவு கிடைக்கும்பட்சத்தில் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் 9 நிமிடங்களுக்கு கோடிக்கணக்கான மின் விளக்குகள் அணைக்கப்படலாம்.

பட மூலாதாரம், Getty Images
ஆனால், இப்படி ஒரே நேரத்தில் விளக்குகளை அணைப்பதால் திடீரென மின்தேவை குறையும். திடீரென மின் தேவை குறைவதோ, அதிகரிப்பதோ மின் உற்பத்தியையும் மின் தொடரமைப்பையும் கடுமையாக பாதிக்கக்கூடும்.

- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- Pandemic என்றால் என்ன?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?
- முறையாக கை கழுவுதல் எப்படி?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்
- கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில் உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி?
- கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?

அதிகரித்தாலோ குறைந்தாலோ
இந்தியாவில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு, விநியோகிக்கப்படும்போது 49.0 Hertzலிருந்து 50.05 Hertz வரையிலான அதிர்வெண்களுக்குள் மின் தொடரமைப்பு (grid) பராமரிக்கப்படுகிறது. மின்சாரத் தேவை பெருமளவில் அதிகரித்தாலோ குறைந்தாலோ இந்த அதிர்வெண்கள் மாற ஆரம்பிக்கும். அவை மேலே சொன்ன அளவைத் தாண்டினாலோ, குறைந்தாலோ அது விநியோகத்தையும் உற்பத்தியையும் கடுமையாகப் பாதிக்கும்.

பட மூலாதாரம், Harvepino / Getty
இந்தியாவில் நேஷனல் லோட் டெஸ்பாட்ச் சென்டர் (NLDC) என்ற அமைப்பு மின் விநியோகத்தை நாடு முழுவதும் கண்காணிக்கிறது. ஒவ்வொரு மாநிலமும் எந்த நேரத்தில் எவ்வளவு மின்சாரத்தைப் பயன்படுத்தப்போகின்றன என்பதை தொடர்ச்சியாக என்எல்டிசிக்கு தெரிவித்துவருகின்றன. அதற்கேற்றபடி மின் நிலையங்களில் உற்பத்தி மாற்றியமைக்கப்பட்டு, மின்விநியோகக் கட்டமைப்பின் அதிர்வெண் குறிப்பிட்ட எல்லைக்குள் பராமரிக்கப்படுகிறது.
பிரதமரின் அறிவிப்பையடுத்து NLDCஐ இயக்கிவரும் பவர் சிஸ்டம் ஆபரேஷன் கார்ப்பரேஷனின் (POSOCO) அதிகாரிகள் வெள்ளிக்கிழமையன்று இது தொடர்பாக கலந்தாலோசித்ததாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஏப்ரல் ஐந்தாம் தேதியன்று செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாநில மின்வாரியங்களுடன் விவாதித்ததாகவும் சொல்லப்படுகிறது.
ஏப்ரல் ஐந்தாம் தேதியன்று நாடு முழுவதும் விளக்குகள் அணைக்கப்படும் 9 மணியும் விளக்குகள் மீண்டும் எரிய ஆரம்பிக்கும் 9.09 மணியும் மின் விநியோக நிறுவனங்களுக்கு மிக முக்கியமான தருணங்களாக இருக்கும்.
"இது சமாளிக்கக்கூடிய ஒன்று என்றுதான் நினைக்கிறேன். நிலக்கரி மூலம் இயங்கும் மின் நிலையங்கள் தொடர்ந்து இயங்கும். எரிவாயு மூலம் இயங்கும் மின் நிலையங்கள், நீர் மின் நிலையங்களில் சிறிது நேரத்திற்கு முன்பாகவே அவற்றின் உற்பத்தி குறைக்கப்படலாம். அல்லது நிறுத்தப்படலாம். 9 நிமிடங்களுக்குப் பிறகு இந்த நிலையங்களில் மீண்டும் உற்பத்தித் திறனை அதிகரித்துக்கொள்ளலாம்" என்கிறார் தமிழ்நாடு மின்துறை பொறியாளர்கள் சங்கத்தின் தலைவர் எஸ். காந்தி.
பராமரிப்பது சிரமமில்லை
காந்தி சொல்வதைப் போலத்தான் பல மின்வாரியப் பொறியாளர்கள் கருதுகிறார்கள். தேவை குறையும் நேரம் முன்கூட்டியே தெரியும் என்பதால், மின் தொடரமைப்பின் அதிர்வெண்ணை பாதுகாப்பான அளவில் பராமரிப்பது சிரமமில்லை என்றே கருதுகிறார்கள்.

பட மூலாதாரம், jacek_kadaj / Getty
புவிவெப்பமயமாதல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பல நாடுகளில் குறிப்பிட்ட நேரத்திற்கு மின்விளக்குகள் அடைக்கப்படுகின்றன. மின் சாதனங்கள் நிறுத்தப்படுகின்றன. அந்தத் தருணங்களில் மின் விநியோக நிறுவனங்கள் இதுபோலத்தான் உற்பத்தியை குறைத்து, பிறகு அதிகரிக்கின்றன.
"தற்போது இந்தியாவின் மின் தொடரமைப்பு 140 கிகா வாட் மின்சாரத்தை கடத்திவருகிறது. விளக்குகளை அணைக்கும் நேரத்தில் 10 முதல் பதினைந்து கிகாவாட் அளவுக்கு மின்சாரத் தேவை குறையலாம். அதை எளிதில் நிர்வகிக்க முடியும்" என்கிறார் தமிழ்நாடு மின்தொடரமைப்புக் கழகத்தின் முன்னாள் இயக்குனர் எஸ். அக்ஷய் குமார்.
ஏப்ரல் 5ஆம் தேதியன்று மின் விளக்குகளை மட்டும்தான் அணைப்பார்கள்; வீட்டிலுள்ள ஏசி, ஃப்ரிட்ஜ், மின்விசிறிகள், தொலைக்காட்சிகள் ஆகியவை தொடர்ந்து இயங்கவே செய்யும். ஆகவே மின்தேவை குறைவது என்பது பெரிதாக இருக்காது எனக் கருதுகிறார் காந்தி.
இந்தியாவிலேயே அதிகம் தொழில்மயமான மாநிலம் தமிழ்நாடு. பல தொழிற்சாலைகள் இயங்காததால், மின்தேவை வெகுவாகக் குறைந்திருக்கிறது. இருந்தபோதும், வீடுகளில் விளக்குகளுக்கு மட்டும் எவ்வளவு மின்சாரம் பயன்படுகிறது என்பது யாருக்கும் தெரியாது. ஆகவே, ஒரு உத்தேசமான அளவிலேயே மின் உற்பத்தி குறைக்கப்படும்.

இது தொடர்பாக தமிழ்நாடு மின்தொடரமைப்புக் கழகம் விடுத்திருக்கும் சுற்றறிக்கையில், எல்லா செயற்பொறியாளர்களும் தேவையான அளவு பணியாளர்களுடன் ஞாயிற்றுக்கிழமை மாலை 8 மணியளவில் அவரவர் தலைமையகத்திற்கு வந்துவிட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில மின்விநியோகக் கட்டுப்பாட்டு மையம் (SLDC) விடுக்கும் அறிவுரைகளை அவர்கள் கவனத்துடன் பின்பற்ற வேண்டுமென்றும் கூறப்பட்டுள்ளது.
கொரோனா விவகாரம் துவங்கியதிலிருந்தே, தமிழ்நாட்டின் மின் தேவை வெகுவாக குறைந்திருக்கிறது. கடந்த மார்ச் 19ஆம் தேதியன்று தமிழ்நாட்டின் மின் நுகர்வு 348.517 மில்லியன் யூனிட்களாக இருந்தது. மின்சாரம் அதிகம் பயன்படுத்தப்படும் மாலை நேரங்களில் 15593 மெகாவாட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டது.
ஆனால், கொரோனாவுக்காக ஊரடங்கு அறிவிக்கப்பட்ட இரண்டாவது நாளான மார்ச் 25ஆம் தேதியன்று மின் நுகர்வு 290.991 மில்லியன் யூனிட்களாகக் குறைந்தது. மாலை நேர மின் தேவை 11,892ஆகக் குறைந்தது. ஏப்ரல் இரண்டாம் தேதி மின் தேவை மேலும் சரிந்து, 243.429 மில்லியன் யூனிட்களாக இருந்தது.
பிற செய்திகள்:
- கொரோனா வைரஸ்: இலங்கையில் 10 ஆயிரம் பேர் கைது, துப்பாக்கிச் சூடு - என்ன நடக்கிறது அங்கே?
- “நாக்பூர் டூ நாமக்கல்”: நூறு கி.மீ நடை, லாரிகளில் பயணம் - நாமக்கல் இளைஞருக்கு என்ன நடந்தது?
- கொரோனா வைரஸ்: இந்திய மக்கள் எங்கெல்லாம் அதிக நேரம் செலவிட்டு இருக்கிறார்கள் தெரியுமா?
- தமிழகத்தில் கொரோனா: வீட்டுக் கண்காணிப்பில் 90,412 பேர்; பாதிப்பு எண்ணிக்கை 400-ஐ கடந்தது
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












