கொரோனா வைரஸுக்கு எதிரான போர்: 5-ஆம் தேதி அகல்விளக்கு ஏற்ற மக்களுக்கு மோதி அழைப்பு

உலக அளவில் தொடர்ந்து கடும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம், கடந்த சில நாட்களாக இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோதி தனது ட்விட்டரில் நாட்டு மக்களுக்கு காணொளி செய்தியொன்றை பகிர்ந்துள்ளார்.

இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு அவர் பகிர்ந்த அந்த காணொளியில், கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த இந்தியா எடுத்துவரும் நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து அவர் பேசினார்.

''கொரோனா வைரஸுடனான போரில் நாம் 9 நாட்களை நிறைவு செய்துள்ளோம். தற்போது அமலில் உள்ள முடக்கநிலைக்கு நாட்டு மக்கள் நல்ல ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர்'' என்று அவர் கூறினார்.

''நாம் எடுத்துவரும் பல நடவடிக்கைகளை உலக நாடுகள் பலவும் பின்பற்றி வருகின்றன.''

''கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த எதிர்கொண்டு வரும் போராட்டத்தில், நாம் யாரும் தனி மனிதர்கள் இல்லை. நாம் 130 கோடி பேர் என்பதை நினைவில் வைத்து கொள்ள வேண்டும்'' என்று பிரதமர் மோதி மேலும் குறிப்பிட்டார்.

ஊரடங்கை கடைபிடிப்பதில் இந்தியா முன்னுதாரணமாக இருந்து வருகிறது என்றும் மோதி தான் வெளியிட்டுள்ள காணொளி செய்தியில் குறிப்பிட்டார்.

வரும் ஞாயிற்றுக்கிழமை கொரானோவுக்கு எதிராக நாட்டு மக்கள் மகா சக்தியை உருவாக்க வேண்டும் என்று மோதி மேலும் தெரிவித்தார்.

''வரும் ஏப்ரல் 5ஆம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்களுக்கு வீட்டிலுள்ள அனைத்து லைட்டுகளையும் நிறுத்திவிட்டு வீட்டிலிருக்கும் டார்ச், அகல் விளக்கு மற்றும் செல்போன் ஒளியை பயன்படுத்த வேண்டும்'' என்று நாட்டு மக்களுக்கு பிரதமர் மோதி வேண்டுகோள் விடுத்தார்.

ஏப்ரல் 5-ஆம் இரவு 9 மணிக்கு மெழுகுவர்த்தி மற்றும் செல்போன் விளக்குகளை ஒளிர விடவேண்டும்.

''அதேவேளையில் ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 9 மணிக்கு சமூக இடைவெளியை கடைபிடித்து உங்கள் டார்ச், அகல்விளக்கு அல்லது செல்போன் ஒளியை 9 நிமிடங்கள் ஒளிர விடுங்கள்'' என்றும் மோதி குறிப்பிட்டார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: