You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா வைரஸ்: அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டுமா? - விரிவான தகவல்கள்
- எழுதியவர், டேவிட் ஷுக்மேன்
- பதவி, பிபிசி
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு இன்னும் நிறைய பேர் முகக்கவசம் அணிய வேண்டுமா?
உலக சுகாதார நிறுவனம் அமைத்துள்ள சிறப்பு குழு ஒன்று இந்த கேள்விக்கான பதிலை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளது.
அமெரிக்காவில் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு முடிவின்படி, கொரோனா பாதித்த ஒருவர் இருமினால் அது ஆறு மீட்டர் வரையும், தும்மினால் எட்டு மீட்டர் வரையும் இருப்பவர்களை பாதிக்கக் கூடும். இது தற்சமயத்தில் உலக சுகாதார நிறுவனத்தால் நம்பப்பட்டு வரும் தூரத்தை விட அதிகம். எனவே, இந்த சிறப்பு குழுவானது வைரஸின் பரவல் தூரம் குறித்து ஆய்வு நடத்த உள்ளது.
இதுகுறித்து பிபிசியிடம் பேசிய அந்த சிறப்பு குழுவின் தலைவரான பேராசிரியர் டேவிட் ஹெய்மான், இந்த புதிய ஆய்வு முகக்கவசங்கள் குறித்து அளிக்கப்பட்டு வரும் வழிகாட்டுதல்களில் மாற்றத்தை கொண்டுவர கூடும் என்று கூறினார்.
உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் இயக்குநரான அவர், “முகக்கவசங்களை அணிவது தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் அளித்து வரும் பரிந்துரையில் மாற்றத்தை மேற்கொள்ள வேண்டுமா என்பதை தீர்மானிக்க புதிய ஆதாரங்களை மையாக கொண்ட விவாதத்தை மீண்டும் ஆரம்பித்துள்ளோம்” என்று அவர் கூறினார்.
முகக்கவசம் குறித்த தற்போதைய நிலைப்பாடு என்ன?
நோய்த்தொற்று ஏற்படும் அபாயத்தைத் தவிர்ப்பதற்காக இருமல் அல்லது தும்மும் எவரிடமிருந்தும் குறைந்தது ஒரு மீட்டர் தூரம் தள்ளியிருக்க உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கிறது.
உடல்நல பாதிப்பு உள்ளவர்கள் மற்றும் நோய்த்தொற்று அறிகுறி இருப்பவர்கள் மட்டும் முகக்கவசம் அணிய வேண்டும் என்பதே உலக சுகாதார நிறுவனத்தின் தற்போதைய பரிந்துரையாக உள்ளது.
ஆனால், நோய்த்தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படுபவர்களை கவனித்துக்கொள்ளும் ஆரோக்கியமான உடல்நிலையில் இருப்போரும் முகக்கவசத்தை அணிய வேண்டும் என்று அது அறிவுறுத்துகிறது.
முகக்கவசத்தை சரிவர பயன்படுத்துவதுடன், அடிக்கடி கை கழுவதும் மிகவும் முக்கியமானது என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்துகிறது.
ஒருவருக்கொருவர் இரண்டு மீட்டர் இடைவெளியில் இருந்தால் மட்டுமே அது சமூக விலக்கமாக கருதப்படும் என்று பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அறிவுறுத்துகின்றன.
திரவ துளிகளின் வாயிலாக மட்டுமே வைரஸ்கள் பரவ முடியும் என்பதைக் காட்டும் ஆதாரங்களின் அடிப்படையில் இந்த ஆலோசனை அமைந்துள்ளது.
திரவ துளிகளில் பெரும்பாலானவை அவை வெளியேற்றப்பட்ட நபரின் அருகே தரையில் விழுந்துவிடும் அல்லது அதற்கு முன்பே ஆவியாகிவிடும் என்பது புரிதலாக உள்ளது.
புதிய ஆய்வு என்ன சொல்கிறது?
அமெரிக்காவில் உள்ள மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தின் (எம்ஐடி) ஆராய்ச்சியாளர்கள், இருமல் அல்லது தும்மலுக்குப் பிறகு என்ன நடக்கிறது என்பதைத் துல்லியமாக மதிப்பிடுவதற்கு அதிநவீன கேமராக்கள் மற்றும் உணரிகளை (சென்சார்) பயன்படுத்தினர்.
சுவாசம் ஒரு மிகச் சிறிய, வேகமாக நகரும் வாயு நிறைந்த மேகம் போன்ற அமைப்பை உருவாக்குகிறது என்றும் அவை மாறுபட்ட அளவுகளில் திரவத் துளிகளைக் கொண்டிருக்கக்கூடும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். குறிப்பாக, அவற்றில் மிகச் சிறியவை நீண்ட தூரத்திற்கு செல்ல முடியும் என்பதையும் அவர்கள் கண்டறிந்துள்ளனர்.
ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த பரிசோதனையில், இருமல் மூலம் நோய்த்தொற்று ஆறு மீட்டர்கள் வரையும், அதைவிட வேகமான தும்மல் வாயிலாக எட்டு மீட்டர் வரையும் பரவ முடியும் என்று அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
இதன் தாக்கங்கள் என்ன?
இந்த ஆய்வுக்கு தலைமை தாங்கிய விஞ்ஞானியும், எம்ஐடியின் பேராசிரியருமான லிடியா பௌரோபா, தங்களது ஆய்வு முடிவுகள், "சமூக விலக்கலுக்கு பாதுகாப்பான தூரம்" என்று தற்போது கடைபிடிக்கப்பட்டு வரும் தூரத்தை விட பன்மடங்கு அதிகமாக இருப்பது தன்னை கவலையில் ஆழ்த்துவதாக கூறுகிறார்.
"நாம் மூச்சை வெளியேற்றுவது, இருமல் அல்லது தும்முவது என்பது ஒரு வாயு மேகம் போன்றது. இது நோய்த்தொற்று திரவ துளிகளை வெகுதூரத்திற்கு கொண்டு செல்லக்கூடியது" என்று அவர் கூறினார்.
“இருமல் அல்லது தும்மல் வாயிலாக வெளிப்படும் திரவ துளிகள் ஓரிரு மீட்டர்கள் தொலைவில் தரையில் விழுந்துவிடும் என்ற தற்போதைய எண்ணம் முறைப்படி நிருவுறப்பட்ட முடிவு அல்ல.”
இது முகக்கவசம் குறித்து பரிந்துரைகளை மாற்றுமா?
வீடு அல்லது அலுவலகம் போன்ற காற்றோட்டமில்லாத இடங்களில் இருக்கும்போது முகக்கவசங்களை அணிவது நோய்த்தொற்றுகளிலிருந்து தற்காப்பதற்கு பயன்படும் என்று லிடியா கருதுகிறார்.
உதாரணமாக, நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவரின் சுவாச காற்றின் மூலம் ஆரோக்கியமான நபரின் வாய் வழியே நோய்த்தொற்று செல்லும் அபாயத்தை முகக்கவசங்கள் தடுக்கின்றன.
“மெலிந்த முகக்கவசங்களில் வடிகட்டும் அமைப்பு இல்லாததால் அவை காற்றில் உள்ள மிகச்சிறிய துகள்களை உள்ளிழுப்பதில் இருந்து பாதுகாக்கப் போவதில்லை. எனினும், அவை திரவ துளிகள் திசைத்திருப்ப பயன்படும்” என்று லிடியா கூறுகிறார்.
உலக சுகாதார நிறுவனத்தின் ஆலோசகர்கள் என்ன நினைக்கிறார்கள்?
எம்ஐடி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், நாம் நினைத்து கொண்டிருப்பதை விட அதிகமான தூரத்திற்கு இருமல் மற்றும் தும்மல் ஆகியவற்றிலிருந்து வெளிப்படும் திரவ துளிகள் பயணிக்கின்றன என்று தெரியவந்துள்ளதால் அது குறித்து கண்டிப்பதாக மதிப்பீடு செய்ய வேண்டியுள்ளதாக பேராசிரியர் ஹெய்மான் கூறுகிறார்.
- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- Pandemic என்றால் என்ன?
- கொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?
- முறையாக கை கழுவுதல் எப்படி?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்
- கொரோனா வைரஸ் தொற்றை தனிமைப்படுத்தி கொள்ளுதலால் கட்டுப்படுத்த முடியுமா?
- கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில் உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி?
ஒருவேளை மேற்கண்ட ஆய்வு முடிவுகள் முன்வைக்கும் ஆதாரங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டால், “முகக்கவசங்கள் அணிவது சமூக விலக்கத்தை போன்றோ அல்லது அதைவிடவோ மிகவும் பயன்தரத்தக்கது என்றோ பொருள்படும்.”
எனினும், நாசித்துளையை சுற்றி மூடப்பட்ட முகக்கவசங்களையே அணிய வேண்டுமென்று அவர் கூறுகிறார். முகக்கவசங்களின் மேற்பரப்பில் ஈரமாக இருந்தால் அதன் வழியே துகள்கள் உள்ளே சென்றுவிடும் என்று அவர் கூறுகிறார். அதேபோன்று, பயன்படுத்திய முகக்கவசத்தை மிகுந்த கவனத்துடன், கைகளில் நோய்த்தொற்று கிருமிகள் பரவாமல் கழற்றிட வேண்டும் என்று அவர் கூறுகிறார்.
“முகக்கவசங்களை தொடர்ச்சியாக அணிய வேண்டும். அதாவது, பேசுவதற்காக, புகைப்பிடிப்பதற்காக என அடிக்கடி முகக்கவசங்களை கழற்றாமல், முழு நேரமும் அணிந்திருக்க வேண்டும்.”
தொற்று அபாயங்களுக்கான திட்டம் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (Strategic and Technical Advisory Group for Infectious Hazards) என அழைக்கப்படும் இந்த குழு, தனது அடுத்த மெய்நிகர் கூட்டத்தை அடுத்த சில நாட்களில் நடத்த உள்ளது.