கொரோனா வைரஸ்: டெல்லி மருத்துவருக்கு தொற்று, தனிமைப்படுத்தப்பட்ட தப்லிக் ஜமாத்தினர் - இந்திய நிலவரம் Corona In India

இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு 1397 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 35 பேர் இந்த தொற்றால் உயிரிழந்துள்ளனர் எனச் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

டெல்லி நிஜாமூதின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் என அனைவரையும் தேடும் பணி நடைபெற்று வருவதாகக் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் 36 மணி நேரத்துக்குப் பிறகு நிஜாமூதின் மர்சக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட 2361 பேரில் 617 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மீதி பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என டெல்லியின் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த பகுதியைத் தூய்மை படுத்தும் பணியை தெற்கு டெல்லி மாநகராட்சி பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

மருத்துவருக்கு கொரோனா

டெல்லியில் உள்ள புற்றுநோய் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர் சமீபத்தில் பிரிட்டன் சென்று வந்த தனது சகோதரரைச் சந்திக்க அவரின் வீட்டிற்குச் சென்றதாக டெல்லி சுகாதார அமைச்சர் சத்தேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.

உயரும் எண்ணிக்கைகள்

இந்தியாவில் அதிக பட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தில் 320 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தற்போதைய நிலவரப்படி அங்குப் புதிதாக 18 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தலைநகர் டெல்லியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 120ஆக உள்ளது.

டெல்லி முழுவதும் சுமார் 750 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் அதில் ஒருவருக்கு மட்டும்தான் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டுள்ளது என டெல்லி சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தெலங்கானா மாநிலத்தில் இன்று புதிதாக 15 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் நிஜாமுதீன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் என அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதுவரை இல்லாத அளவு தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 57 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் நேற்றைய தகவல்படி தமிழகத்தில் கொரோனா தொற்றுக்குப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 124ஆக உள்ளது.

நேற்று தமிழகத்தில் புதிதாக கொரோனா தொற்று இருப்பதாகக் கண்டறியப்பட்ட 50 பேரில் 45 டெல்லி நிஜாமுதீன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் என சுகாதார அமைச்சர் விஜய பாஸ்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :