You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா வைரஸ்: கிராமத்துக்கு இடம் பெயர்ந்த ஐ.டி. நிறுவனம்
கொரோனா வைரஸ் எதிரொலியாக தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்யும்மாறு ஐ.டி. நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன. இந்நிலையில் 'கொரோனா முன்னெச்சரிக்கை' நடவடிக்கையாக பெங்களூருவை சேர்ந்த இன்ஸ்டா கிளீன் என்ற நிறுவனம் தேனி மாவட்ட மலை அடிவாரத்தில், இயற்கை எழில் கொஞ்சும் கிராமம் ஒன்றில் 8 பணியாளர்களுடன் செயல்பட்டு வருகிறது.
தேனி மாவட்டம் தேவாரம் டி.ரெங்கநாதபுரத்தை சேர்ந்த அரவிந் ராஜு 'இன்ஸ்டாகிளீன்' என்ற செயலி உருவாக்கும் 'ஸ்டார்ட் அப்' நிறுவனத்தை பெங்களூருவில் நடத்தி வருகிறார். இதில் இந்தியர்கள், வெளிநாட்டினர் என 20 பேர் பணி புரிந்து வருகின்றனர்.
கிராமத்தில் ஐ.டி நிறுவனம்
'கொரோனா'வின் பாதிப்பால் ஊழியர்கள் அலுவலகம் வர அஞ்சியதால் தேனி மாவட்டம் தேவாரம், அனுமந்தன்பட்டியில் உள்ள தனது பண்ணை வீட்டை அலுவலகமாக்க அரவிந் ராஜு முடிவு செய்தார். இதற்கு ஊழியர்களும் சம்மதித்தனர். அதன்படி 8 பேர் கொண்ட குழு தோட்டத்தை அலுவலகமாக மாற்றி காலை 7 முதல் மதியம் 3 மணி வரை வேலை செய்கின்றனர்.
இது குறித்து நிறுவனத்தின் பங்குதாரர் அரவிந் ராஜு பிபிசி தமிழிடம் பேசுகையில் 'எங்கள் நிறுவனத்தில் அமெரிக்கா, நைஜீரியா மற்றும் இலங்கையை சேர்ந்த 3 பேர் உட்பட 20 பொறியாளர்கள் பணி செய்து வந்தோம்.'
'கொரோனா அச்சத்தால் எங்கள் பொறியாளர்கள் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்து சாப்பிட்டு வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்தனர்.'
'இந்நிலையில் பல ஐடி நிறுவனங்கள் WFH (Work From Home) என ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்யுமாறு அறிவித்தன. ஆனால், நாங்கள் கொஞ்சம் வித்தியாசமாக WFF (Work From Farm) என பண்ணை சூழலில் கிராமத்தில் இருந்து வேலை செய்யும்மாறு அழைப்புவிடுத்திருந்தோம். அதற்கு எங்கள் ஊழியர்கள் அனைவரும் ஆர்வத்துடன் முன் வந்ததையடுத்து தேனியில் உள்ள எனது சொந்த பண்ணை வீட்டை அலுவலகமாக மாற்றி கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக பணியாற்றி வருகிறோம்' என்றார்.
நாங்கள் இங்கே எங்கள் நேரத்தை 7,8,9 என பிரித்துள்ளோம் அதாவது 7 மணி நேர வேலை, 8 மணிநேர தூக்கம், 9 மணிநேர பொழுது போக்கு (மலையேற்றம், நீச்சல்) என்று உற்சாகமாக நேரத்தை கழிக்கிறோம்' என்றும் அவர் தெரிவித்தார்.
'இதனால் புத்துணர்ச்சி அதிகரித்து வேலையின் தரம் உயர்ந்துள்ளது. எங்கள் செயல்பாடு சிறப்பாக இருப்பதைப் பார்த்த மற்ற நிறுவனங்கள், தங்களுக்கும் இதே போன்ற பணி சூழலை ஏற்படுத்தித் தர முடியுமா? என்று கேட்டுள்ளனர். கொரோனா தாக்கத்திற்க்கு பின் கிராமங்களில் மென்பொருள் நிறுவனத்தை துவக்க வேண்டுமென்ற சிந்தனை எனக்கு உள்ளது' என்றார் அரவிந் ராஜு.
இந்த பண்ணை சூழலில் வேலை பார்ப்பது குறித்துப் பேசிய நைஜீரியரான ஆண்ட்ரியா பெர்னாண்டோ "எனக்கு இது ஒரு புதிய அனுபவமாக உள்ளது, பொதுவாக ஐ.டி நிறுவனங்களில் பணிபுரியும் பொறியாளர்கள் மிகவும் மன அழுத்தத்துடன் வாழ்ந்து வருகின்றனர். எனக்கும் அப்படித்தான் ஆனால் இந்த பண்ணை சூழலில் வேலை பார்ப்பது மனதுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது" என்றார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: