You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா வைரஸ்: இந்தியாவில் முதல் உயிரிழப்பு; நடந்தது என்ன? - சுகாதாரத்துறை விளக்கம்
கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியாவின் கர்நாடகாவை சேர்ந்த 76 வயது முதியவர் உயிரிழந்தது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து கர்நாடகா சுகாதாரத்துறை அமைச்சர் பி. ஸ்ரீராமுலு தமது டுவிட்டர் பக்கத்தில், கோவிட்-19 வைரஸ் சந்தேக அறிகுறியுடன் சிகிச்சை பெற்ற கலபுரகியை சேர்ந்த 76 வயது நபர் உயிரிழந்த நிலையில், அவருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது உறுதிபடுத்தப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
அவருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறியவும், அவர்களை தனிமைப்படுத்தி பிற நடைமுறைகளை மேற்கொள்ளவும் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கர்நாடகா அமைச்சர் ஸ்ரீராமுலு தெரிவித்துள்ளார்.
76 வயது முதியவர் உயிரிழந்தது தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம், உயிரிழந்த நபர் செளதி அரேபியாவுக்கு கடந்த ஜனவரி மாதம் 29-ஆம் தேதி முதல் பிப்ரவரி 29-ஆம் தேதிவரை சென்றிருந்ததாகவும், உயர் அழுத்தம் மற்றும் ஆஸ்துமா பாதிப்பு அவருக்கு இருந்ததாக குறிப்பிட்டு அவரது உடல்நிலை தொடர்பான தகவல்களை செய்திக்குறிப்பில் வெளியிட்டுள்ளது.
கொரோனா தொற்றிலிருந்து உங்களை காத்து கொள்வது எப்படி?
என்ன நடந்தது?
கடந்த மாதம் ஹைதராபாத் திரும்பிய அவர், அங்கிருந்து கலபுரகி சென்றதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 6-ஆம் தேதி காய்ச்சல் மற்றும் இருமல் பாதிப்பு இருந்ததால் அவரது இல்லத்திலேயே மருத்துவர் வரவழைக்கப்பட்டு சிகிச்சை கொடுக்கப்பட்டதாகவும், அதன் பிறகும் நிலைமை மோசமடைந்ததால் கடந்த 9-ஆம் தேதி அவர் கலபுர்கியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
மாதிரிகளை பரிசோதிக்க நடவடிக்கை
மிதமான வைரல் நிமோனியாவால் அவர் பாதிக்கப்பட்டதாக பரிசோதனை செய்த தனியார் மருத்துவமனை, அவருக்கு கோவிட்-19 வைரஸ் அறிகுறி சந்தேகம் இருப்பதாக கூறியதை அடுத்து, அவரது ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் கலபுரகியில் உள்ள ஆய்வுக்கூடத்தால் சேகரிக்கப்பட்டு அங்கிருந்து பெங்களூரில் உள்ள விஆர்டிஎல் எனப்படும் வைரஸ் ஆராய்ச்சி மற்றும் பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால், பரிசோதனை முடிவுகள் வெளியாகும் முன்பே, நோயாளியை அவரது உறவினர்கள் அங்கிருந்து விடுவித்து, ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார்கள்.
இதையடுத்து கலபுரகி மாவட்ட சுகாதார அதிகாரி, ஹைதராபாத் சென்று சம்பந்தப்பட்ட நோயாளியை குல்பர்கா மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் உள்ள தனிமை வார்டில் சேர்க்குமாறு கேட்டுக் கொண்டார்.
புதுச்சேரியில் கொரோனா இல்லை
புதுச்சேரியில் கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்ட மூன்று நபர்களுக்கு வைரஸ் பாதிப்பு இல்லை என புனே ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.புதுச்சேரியில் உள்ள அரசு மார்பக புற்றுநோய் மருத்துவமனை, ஜிப்மர் மற்றும் தனியார் பிம்ஸ் மருத்துவமனையில் மூன்று நபர்கள் கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் நேற்று அனுமதிக்கப்பட்டனர். இவர்களது ரத்த மாதிரிகளை சேகரிக்கப்பட்டு புனேவில் உள்ள மத்திய அரசின் ஆய்வு கூடத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. இதனிடையே தற்போது வந்துள்ள ஆய்வின் முடிவுகளில், மூன்று நபர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் தெரிவித்துள்ளார்.
கொரோனா அறிகுறிகள்
ஒத்துழைக்க மறுப்பு
ஆனால் அதை ஏற்க மறுத்த அவரது உறவினர்கள் அங்கேயே சிகிச்சை தொடர்ந்தனர். பிறகு அங்கிருந்து கடந்த 10-ஆம் தேதி விடுவிக்கப்பட்ட அவரை, கலபுரகியில் உள்ள ஜிம்ஸ் மருத்துவ நிறுவனத்துக்கு கொண்டு வந்தபோது, வரும் வழியிலேயே அந்த முதியவரின் உயிர் பிரிந்ததாக நடந்த நிகழ்வுகளை தமது செய்திக்குறிப்பு மூலம் இந்திய சுகாதாரத்துறை விவரித்துள்ளது.
முன்னதாக, கர்நாடகாவில் நான்கு பேருக்கு கோவிட்-19 வைரஸ் பாதிப்பு இருந்ததை இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியிருந்தது. டெல்லியில் 6, உத்தர பிரதேசத்தில் 10, மகராஷ்டிராவில் 11, லடாக்கில் 3 என இதுவரை இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி மொத்தம் 74 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
- கொரோனா வைரஸ்: சர்வதேச நிலை என்ன? மரணங்கள் எவ்வளவு? - விளக்கும் வரைபடங்கள்
- கொரோனா வைரஸ்: ‘எத்தனை பேர் பாதிக்கப்பட்டாலும் சமாளிப்போம்’- மலேசிய அரசு
- கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பயணத்தடை அறிவித்த நாடுகள் - விரிவான தகவல்கள்
- கொரோனா வைரஸ்: ஐரோப்பாவுடன் விமான சேவையை துண்டித்த அமெரிக்கா, விசா வழங்குவதை நிறுத்திய இந்தியா
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: