தமிழகத்தில் முககவசம் அணியும் நிலை இல்லை : அமைச்சர் விஜயபாஸ்கர்

பட மூலாதாரம், Getty Images
கொரோனா பாதிப்பு ஏற்பட்ட முதல் நபர் சென்னையில் அனுமதிக்கப்பட்டுள்ளதும், தமிழகத்தில் பொது மக்கள் அச்சப்பட்டு முககவசம் அணியும் நிலை தற்போது இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
விமான நிலையங்கள் மற்றும் துறைமுகத்தில் தீவிர கண்காணிப்பு செய்யப்படுவதால், வெளிநாட்டில் இருந்துவரும் நபர்களுக்கு நோய் தொற்று இருப்பது உடனடியாக கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்படுவதால், பொது மக்கள் முககவசம் அணியதேவையில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர், தமிழகத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது என கூறிய அவர், ''அமெரிக்காவில் இருந்து வந்த நபருக்கு அறிகுறிகள் தென்படுகின்றன. அவரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்துவருகிறோம். இந்த வைரஸ் தாக்குதல் குறித்த விழிப்புணர்வு மக்களிடம் தேவை.
கைகளை தண்ணீரில் அல்லது வீட்டில் பயன்படுத்தும் சோப்பு கொண்டு கழுவினால் போதும். எப்போதும் சானிடைசர் திரவத்தை பயன்படுத்தவேண்டிய தேவை இல்லை. பொது இடங்களுக்குச் செல்லும்போது, முககவசம் அணியும் நிலை தமிழகத்தில் இல்லை. பாதுகாப்பாக இருங்கள்,அச்சப்படாதீர்கள்,'' என்றார் அமைச்சர்.

பட மூலாதாரம், Getty Images
மேலும், சளி,காய்ச்சல் இருப்பவர்கள் மட்டும் முககவசம் அணியவேண்டும் என்றும் உடல்நலமற்றவர்கள் கூடுமானவரை வெளியிடங்களுக்குச் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றார்.
கொரோனா பாதிக்கப்பட்ட நபரின் உடல்நிலை குறித்துக் கேட்டபோது, அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவரது உடல்நலனில் ஏற்படும் முன்னேற்றங்கள் குறித்த விவரங்கள் தினமும் வெளியிடப்படும் என்றார்.
கொரோனா தாக்குதலை கண்டறிய சளி மற்றும் ரத்த மாதிரிகளை சோதனை செய்யும் பிரத்தியேக சோதனை கூடம் ஒன்று தேனியில் அமையவுள்ளது என தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்திற்கு வருபவர்களுக்கு கொரோனா தாக்கம் உள்ளதா என கண்டறிய தற்போது சென்னையில் மட்டுமே சோதனை நிலையம் உள்ளது. விமானம் மூலம் தினமும் வந்திறங்கும் பயணிகளை சோதனை செய்யவேண்டும், அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக தனிமைப்படுத்தவேண்டும் என்பதால், புதிய சோதனை கூடம் ஒன்றை தொடங்கவுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் சுகாதாரத்துறை அதிகாரிகள், விமான நிலைய அதிகாரிகள் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் பேசிய தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் இதனை தெரிவித்தார்.
கொரோனா தாக்கம்: தேனியில் வருகிறது புதிய பரிசோதனை கூடம்

பட மூலாதாரம், Getty Images
இரண்டு நபர்கள்
''தற்போது தமிழகத்தில் இரண்டு நபர்கள் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் உள்ளார்கள். ஒமானில் இருந்து வந்த நபருக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவிலிருந்து வந்துள்ள நபருக்கு அறிகுறிகள் இருந்ததால் மேலும் அவரை கண்காணிக்கவேண்டும் என்பதால் மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம். ஓமனில் இருந்து வந்த நபர் பயணித்த விமானத்தில் பயணம் செய்த 27 நபரைகளை தொடர்புகொண்டு அவர்களின் உடல்நலனை கண்காணித்து வருகிறோம். மேலும் பயணிகளை அடையாளம் கண்டுவருகிறோம்,'' என்றார் பீலா ராஜேஷ்.

பட மூலாதாரம், Getty Images
ஓமன் மற்றும் அமெரிக்காவில் இருந்து வந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்கட்ட பரிசோதனை செய்யப்பட்டது என்றும் அவர்கள் அனைவரும் அவர்களின் வீடுகளில் இருந்து வெளியேறவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.
தேனியில் அமையவுள்ள சோதனை கூடம் குறித்து பேசிய பீலாராஜேஷ், ''தற்போதுவரை அறிகுறிகள் தென்பட்ட 60 நபர்களின் மாதிரிகள் சோதனை செய்தோம். அதில் 59 நபர்களுக்கு பாதிப்பு இல்லை. ஒருவருக்கு மட்டுமே இருந்தது. தினமும் தமிழகம் முழுவதும் உள்ள விமான நிலையங்களுக்கு வருபவர்களிடம் சோதனை செய்யப்படுகிறது என்பதால் புதிய சோதனை கூடத்தை தேனியில் அமைக்கவுள்ளோம்,'' என்றார்.
கொரோனாவின் தாக்கத்தால் இறப்பவர்களின் சதவிகிதம் மிகவும் குறைவு என்பதால் தேவையற்ற அச்சத்தை மக்கள் விடவேண்டும் என கோரிக்கை விடுத்தார் சுகாதர செயலர் பீலா ராஜேஷ்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
''100 பேர் பாதிக்கப்பட்டால், இரண்டு நபர்கள் இறப்பதற்கான வாய்ப்புள்ளது. இதுவரை பலருக்கும் தெரிந்த வைரஸ் தாக்குதல் நோய்கள் போன்றதுதான் கொரோனா. இந்த வைரஸை கட்டுப்படுத்த தேவையான மருத்துவ வசதிகள் நம்மிடம் உள்ளது. முதலில் முன்னெச்சரிக்கையாக ஒவ்வொருவரும் தூய்மையாக இருந்தால், ஆரோக்கியத்துடன் இருந்தால் இந்த தாக்கத்தை எதிர்கொள்ளலாம்,'' என்றார் அவர்.
மேலும் குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் மற்றும் ஏற்கனவே சர்க்கரை வியாதி மற்றும் ரத்தக்கொதிப்பு உள்ளவர்கள் கவனம் எடுத்துக்கொள்ளவேண்டும் என்றார். ''தும்மல் வரும்போது எச்சில் தெரிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். கைகளை தூய்மையாக வைத்துக்கொள்ளுங்கள்,'' என்றார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













