You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அவசரநிலை காலத்தில் அருண் ஜெட்லி ரகசியமாக பிபிசி ரேடியோ கேட்டதாக சொன்னார்: டோனி ஹால்
அவசர நிலைக் காலத்தில் உலக நடப்பையும் நாட்டு நடப்பையும் தெரிந்துகொள்வதற்கு ரகசியமாக பிபிசி ரேடியோ கேட்டதாக மறைந்த பாஜக தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான அருண் ஜெட்லி தம்மிடம் கூறினார் என்று பிபிசி தலைமை இயக்குநர் டோனி ஹால் தெரிவித்தார்.
புது டெல்லியில் உலக வணிக உச்சி மாநாட்டில் சனிக்கிழமை பேசிய அவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு 4 புதிய இந்திய மொழிகளில் பிபிசி சேவையை தொடக்கும் நிகழ்ச்சிக்கு டெல்லி வந்திருந்ததாகவும், இந்தியாவில் மேலும் மில்லியன் கணக்கான மக்களுக்கு பிபிசியின் நம்பகமான செய்திகளை கொண்டு சேர்ப்பதே குறிக்கோள் என்றும் குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டு முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜேட்லியின் மரணம் குறித்து கேள்விப்பட்டபோது மீண்டும் இதனை நினைத்ததாக அவர் குறிப்பிட்டார்.
"ஏனென்றால் நான் அப்போது இங்கே வந்தபோது அவசரநிலைக் காலத்தில் 18 மாதத்துக்கு மேல் சிறையில் இருந்த அருண் ஜெட்லியிடம் அந்தக் காலத்தின் அவரது அனுபவம் குறித்து பேசும் வாய்ப்பு கிடைத்தது. எப்படியோ ஒரு சிறிய டிரான்சிஸ்டர் ரேடியோவை ரகசியமாக உள்ளே கொண்டு சென்ற அவர், காலை 6 மணிக்கு எழுந்து, காவலர்கள் விழிப்பதற்கு முன்பாக, பிபிசி உலக சேவை செய்தியை கேட்பது வழக்கம் என்று தெரிவித்தார்.
உலகத்திலும், சொந்த நாட்டிலும் என்ன நடந்துகொண்டிருந்தது என்பதைத் தெரிந்துகொள்ள தமக்கு இருந்த ஒரே வழி அதுதான் என்று அவர் அப்போது கூறினார். சிறைப்பட்ட நிலையில், அச்சத்தில், நிச்சயமற்ற நிலையில் வாழ்கிற பலருக்கு பிபிசி செய்தி அப்படித்தான் 90 ஆண்டுகளாக பயன்படுகிறது" என்று அவர் கூறினார்.
அந்த உரையில் டோனி ஹால் மேலும் கூறியது:
செய்தியில் நம்பகத் தன்மை குறித்து நான் பேச விரும்புகிறேன். ஆனால், முதலில் நம்பகத் தன்மை என்பதை இன்னும் விரிவாகப் பேசவேண்டும்.
ஜனநாயக நிறுவனங்களின் மீதான, வணிகத்தின் மீதான, ஊடகங்களின் மீதான நம்பகத்தன்மை. ஜனநாயகத்தின் மீதே நம்பகத்தன்மை என்பது குறித்தெல்லாம் பேசவேண்டும்.
தகர்ப்பு என்பதே தாரக மந்திரமாகிவிட்ட புதிய யுகத்தில் என்ன மாற்றங்கள் நடந்துள்ளன என்பது குறித்து, ஊடகத்தில் உள்ள நாங்கள் இதற்கு எப்படி எதிர்வினை ஆற்ற முடியும் என்பது குறித்து நான் என்ன நினைக்கிறேன் என்பது குறித்து கொஞ்சம் பேச விரும்புகிறேன்.
ஜனநாயகத்தின் மீதான நம்பகத்தன்மை
இந்த ஆண்டின் தொடக்கத்தில் லண்டனில் ''எடில்மேன் ட்ரஸ்ட் பேரோமீட்டர்’’ வெளியீட்டு நிகழ்ச்சியில் நான் பேசினேன். 28 நாடுகளில் வணிகத்தில், அரசாங்கத்தில், ஊடகத்தில், அரசு சாரா நிறுவனங்களில் நம்பகத் தன்மை குறித்து ஆராய்கிற வருடாந்திர சர்வே இது என்பது உங்களில் பலருக்குத் தெரியும்.
கடந்த 20 ஆண்டுகளில் நிகழும் மாற்றம் குறித்த அற்புதமான கதையை இது சொல்கிறது.
பிரிட்டனில் இந்தக் கதை உரத்து சொல்வது இதைத்தான்: ஜனநாயக நிறுவனங்களின் மீதான நம்பகத்தன்மை சரிந்துவிட்டது. தேசிய விவாதத்தில் தங்கள் குரல் கேட்கப்படவில்லை என்று மேலும் மேலும் அதிகமான மக்கள் நினைக்கிறார்கள்.
தங்கள் நலன்கள் பேணப்படவில்லை என்று மேலும் மேலும் அதிக சமூகங்கள் கருதுகின்றன. குறைவாகவோ, கூடுதலாகவோ, உலகம் முழுவதும் இந்தப் போக்கை நாம் பார்க்கிறோம்.
அதிர்ச்சி அளிக்கும் ஒரு புள்ளிவிவரத்தை நான் பார்க்கிறேன். இயந்திரமயமாதலாலோ, பொருளாதார மந்த நிலையாலோ, போட்டியாலோ, குடியேற்றத்தாலோ தங்கள் வேலையை இழப்பது குறித்த கவலை 10ல் 8 பேருக்கு இருக்கிறது. அச்சத்தால் நம்பிக்கை அற்றுப்போகிறது. சமூக மேம்பாடு குறித்து பலருக்கு அவநம்பிக்கை. கடின உழைப்பு பலனைத் தரும் என்பதில் அவநம்பிக்கை.
விளைவு ஜனநாயகத்தின் மீது, ஜனநாயக நிறுவனங்களின் மீது நம்பிக்கை பாதிக்கப்பட்டுள்ளது.
வணிகத்தில் நம்பகத்தன்மை
சமீப ஆண்டுகளில் பல நாடுகளில் ஒரு போக்கு தலையெடுத்து வருகிறது. ஊடகங்களைவிட, அரசாங்கத்தைவிட வணிக நிறுவனங்களே நம்பகமானவையாக பார்க்கப்படுகின்றன.
சமூகத்தின் நெருக்கடியான பிரச்சனைகளுக்கு அரசியல் தலைவர்கள் எதிர்வினையாற்றவேண்டும் என்று ஒரு காலத்தில் மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அதற்குப் பதிலாக இப்போது வணிகத் தலைவர்களிடம் இதனை எதிர்பார்க்கின்றனர்.
நியாயமான கூலி, இயந்திரமயமாக்கல், கார்பன் உமிழ்தல், இணைய முறைப்படுத்தல் என எல்லாவற்றிலும், அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதற்காக காத்திராமல், நிறுவனங்களின் சிஇஓ-க்கள் எனப்படும் முதன்மை நிர்வாக அதிகாரிகள் மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும் முக்கால்வாசி பேர் நினைக்கிறார்கள்.
2030 வாக்கில் நியாயமான முறையில் நடந்துகொள்ளும் நிறுவனங்கள்தான் நிலைத்திருக்கும் என்று சமீபத்தில் ஒரு மிகப்பெரிய உலக தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவர் ஒருவர் என்னிடம் கூறினார்.
இதில் இருந்து என்ன தெளிவாகிறது என்றால் வணிகத்தில் வெற்றி என்பது நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதைப் பொறுத்து அல்ல, அதை எப்படி செய்கிறீர்கள் என்பதைப் பொறுத்துதான் அமையப்போகிறது என்பதுதான்.
உயர்ந்த லட்சியம் உடையவர்களே மிகப்பெரிய வெற்றியாளர்களாக வருவார்கள்.
ஊடகத்தில் நம்பகத்தன்மை
ஊடகத் துறைக்கும் இது பொருந்தும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். கடந்த தசாப்தம் உலக ஊடகத் துறையில் பல தகர்ப்புகள் நிகழ்ந்துள்ளன. மிகச்சில ஆண்டுகளிலேயே போலிச்செய்திகள் என்பவை சமூகத்தின் ரத்த ஓட்டத்தில் கலந்துவிட்டன. இதன் மூலம் நம்பகத்தன்மை குலைந்து, ஜனநாயகம் பலவீனப்படுத்தப்பட்டது.
உலகம் முழுவதும், உரையாடலை சிதைக்க, பிரிவினைகளை ஊதிப் பெருக்க, வாக்காளர்களின் முடிவுகள் மீது செல்வாக்கு செலுத்த, வன்முறைகளைத் தூண்ட, உயிரிழப்புகளை ஏற்படுத்த இந்த போலிச் செய்திகளுக்கு உள்ள வலிமையை நாம் பார்த்து வருகிறோம்.
ஜனநாயகம் மிக பலவீனமாக உள்ள, டிஜிடல் கல்வி மிகக் குறைவாக உள்ள நாடுகளில் பொய்த் தகவல்கள் அவசரப் பிரச்சனையாக உருவெடுத்துள்ளன.
பொய்த் தகவல்களைப் பரப்பும் ஆயுதங்கள் நவீனமடைய அடைய, இந்தப் பிரச்சனை மேலும் மோசமாகும்.
'டீப்ஃபேக்' எனப்படும் அதிநுட்ப போலி வீடியோ தொழில்நுட்பத்தின் மூலம் யார் வேண்டுமானாலும், எதுவேண்டுமானாலும் செய்ததாகவோ, எப்படி சொன்னதாகவோ தோன்றும்படி செய்கிற யுகத்தில் நாம் நுழைகிறோம்.
உண்மையில் இருந்து பொய்யையும், உறுதியான ஒன்றிலிருந்து கூறப்படுவதை, சத்தியத்தில் இருந்து புளுகை பிரித்தறிவது இப்போது உள்ளதைப் போல கடினமாக முன்பு எப்போதும் இருந்ததில்லை. சமூக ஊடகங்களின் எழுச்சி இந்தப் போக்கை உந்துகிறது.
தங்கள் உலகப் பார்வையை சவாலுக்கு உட்படுத்துவதற்குப் பதிலாக அந்தப் பார்வையை பிரதிபலிக்கிற செய்தி மூலங்களையே மக்கள் தேர்ந்தெடுக்கின்றனர்.
சமூக ஊடகம் என்ற நம் குரலையே எதிரொலிக்கும் அறைகள் சமூகத்தின் பிரிவினைகளை அதிகரிக்கின்றன. நம் பக்க வாதங்களை மட்டுமே பார்க்கும்படி நம்மை ஊக்குவிக்கின்றன.
இதனால் ஏற்படும் கவலையளிக்கும் விளைவுகளில் ஒன்றாக நான் பார்ப்பது, பிறர் கேட்க விரும்பாத கருத்துகளை செய்தியாக்குகிற ஒரே காரணத்துக்காக மட்டுமே தொடர்ந்து பத்திரிகையாளர்கள் அநாமதேய அச்சுறுத்தலுக்கு உள்ளாவதுதான்.
பாரம்பரிய இதழியல் தற்போது தீர்வாகப் பார்க்கப்படுவதில்லை. பிரச்சனையாகப் பார்க்கப்படுகிறது என்று குறிப்பிட்டார்.
ஒவ்வொரு நாளும் பத்திரிகையாளர்களை குறிவைக்க, ட்ரால் செய்ய, அச்சுறுத்த முயற்சி நடப்பதைப் பார்க்கிறோம். கடைசியாக அவர்கள் வேலையை அவர்கள் செய்வதில் இருந்து இவையெல்லாம் தடுக்கின்றன.
உடல் ரீதியான தாக்குதலையும், அச்சுறுத்தலையும் அவர்கள் எதிர்கொள்கிறார்கள். டெல்லியில் சமீபத்தில் நடந்த கலவரத்தில் கூட இது நடந்தது.
இது கருத்துரிமையின் மீதான, அச்சமோ, பக்கச் சார்போ இல்லாமல் உண்மையை நாடுவதற்கான எமது கடமையின் மீதான, அதிகாரத்துக்கு எதிரே கசப்பான உண்மையாக இருந்தாலும் அதைப் பேசுவதன் மீதான தாக்குதலாக இது இருக்கிறது.
உண்மையை நாடுவதற்கான வாய்ப்பு இல்லாத ஜனநாயகம், அடிப்படை தகர்ந்த ஜனநாயகம்தான்.
தகர்ப்புகள் நிகழும் யுகத்தில் செய்தி மீதான நம்பகத் தன்மை
பாரம்பரிய ஊடகங்களில் உள்ள நாங்கள் முன்னெப்போதையும்விட இப்போது, மிக இன்றியமையாத பணியாற்றவேண்டியிருக்கிறது. எந்த விழுமியங்களைக் கொண்டு நாங்கள் எங்களைக் கட்டமைத்துக்கொண்டோமோ அந்த விழுமியங்கள், நாங்கள் ஆற்றுகிற பணியினைத் தீர்மானிக்கிற நல்ல இதழியலுக்கான கொள்கைகள், முன் எப்போதையும் விட தற்போது அதிகம் தேவைப்படுகின்றன.
இது மிகப்பெரிய வாய்ப்பு அளிக்கிற தருணம். முன் எப்போதும் இல்லாத வகையில், ஊடகத்தின் மீதான நம்பகத்தன்மைக்கான எமது கடமையை இரட்டிப்பாக்கவேண்டிய, செய்திகளின் மீதான நம்பகத்தை நிலைநாட்டப் பாடுபடவேண்டிய நேரம் இது.
எனவே, இதனை பிபிசி செய்வதற்கு ஐந்து வழிகளை தேர்ந்தெடுக்க விரும்புகிறேன்.
முதலாவதாக உலக அளவில் நாங்கள் சென்று சேரும் நேயர்களின் எண்ணிக்கையை விரிவுபடுத்துகிறோம்.
இன்று பிபிசி உலகின் மிகவும் நம்பகமான, அரசியல் தலையீடு இல்லாத, உயர்தர முறையில் சார்பற்றும், துல்லியமாகவும் செய்தி அளிக்கும் நிறுவனங்களில் ஒன்று. ஒவ்வொரு வாரமும் நாங்கள் 430 மில்லியன் மக்களை சென்று சேர்கிறோம். இது பிபிசி உலக செய்தியும், பிபிசி உலக சேவை ரேடியோவும் எந்தக் காலத்திலும் செய்யாத சாதனை.
ஆனால், நாங்கள் உலகம் முழுவதும் உள்ள நேயர்களுக்கு சேவையாற்ற இன்னும் அதிகம் செய்யமுடியும் என்று நினைக்கிறோம். அதனால்தான் 1940ல் இருந்து இதுவரை இல்லாத அளவில் பிபிசி உலக சேவையின் விரிவாக்கத்தை செய்துள்ளோம். நாங்கள் தற்போது 42 மொழிகளில் செயல்படுகிறோம். நைரோபி, பாங்காக் மற்றும் பெல்கிரேட் ஆகிய இடங்களில் புதிய மற்றும் விரிவாக்கிய செய்திப் பிரிவுகளை தொடங்கியுள்ளோம்.
இந்தியாவில் ஏற்கெனவே இருந்த இந்தி, தமிழ், போன்ற மொழிப் பிரிவுகளோடு, குஜராத்தி, மராத்தி, பஞ்சாபி, தெலுங்கு ஆகிய மொழிச் சேவைகளைத் தொடங்கியுள்ளோம். இதன் மூலம் மொத்தம் 9 இந்திய மொழிகளில் செயல்படுகிறோம்.
இரண்டாவதாக போலிச் செய்திகளுக்கு எதிரான போராட்டத்தை தொடங்கியுள்ளோம்.
கடந்த ஆண்டு பிபிசியின் பியாண்ட் ஃபேக் நியூஸ் (போலிச் செய்திகளைத் தாண்டி) என்ற திட்டத்தின் மூலம் ஆவணப்படங்கள், சிறப்புச் செய்திகள் போன்றவற்றை எங்கள் அனைத்து சர்வதேச வலைப் பின்னல்களில் வெளியிட்டோம். பிரச்சனையைப் புரிந்துகொள்வது மற்றும் ஊடகக் கல்வியை மேம்படுத்துவது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு செய்யப்பட்டது.
இந்தியா, நைஜீரியா, கென்யா போன்ற நாடுகளில் போலிச் செய்திகள் எப்படி தனியார் வலைப்பின்னல்கள் மூலம் பரவுகின்றன என்பது பற்றி ஆய்வு செய்தது பிபிசி உலக சேவை. இந்த ஆய்வு விருது வென்றது.
பெரிய தேர்தல்களின்போது ஜனநாயகத்துக்கு ஆதரவாக இருப்பது எங்கள் கவனமாக இருக்கிறது. 'ரியாலிட்டி செக்' என்ற உலகளாவிய உண்மைப் பரிசோதனை சேவையை மேற்கொள்கிறோம்.
இந்தியாவின் பொதுத் தேர்தலுக்கு முன்பாக, பல போலிச் செய்திகளை வெளிப்படுத்தினோம். அவற்றில் ஒன்று, பிபிசி பெயரில் வெளியான போலி சர்வே.
மூன்றாவதாக களத்தில் இருந்து செய்திகள்
சம்பவங்கள் நடைபெறும் களத்தில் இருந்து, செய்திகள் சேகரிப்பது, துறை சார் வல்லுநர்கள் அந்தந்த துறை சார்ந்த நம்பகமான கருத்துகளைத் தருவது. பிபிசி உலக செய்தியைப் பொறுத்தவரை இவற்றை உள்ளூர் செய்தியாளர்களைக் கொண்டு செய்வது. இதனால்தான் இந்தியாவில் பிபிசி மேற்கொண்ட விரிவாக்கத்தின்போது 150க்கு மேற்பட்ட இதழாளர்களை பணியமர்த்தினோம்.
நான்காவதாக நாங்கள் நேரமெடுத்து செய்கிறோம்
சம்பவம் நடக்கும் நேரத்தில், அது பற்றி செய்தி வெளியிடுவது, நிகழ்வு குறித்து ஒளி பாய்ச்சுவதற்குப் பதிலாக வெப்பத்தைக் கிளப்புவது இந்தக் காலத்தில் மிக எளிது. பிபிசி தலைப்புச் செய்திகளில் இருந்து ஒரடி பின்னே வந்து, நிகழ்வுகளின் சூழல், பின்னணி மற்றும் விளக்கம் ஆகியவை குறித்து நேயர்களுக்கு தகவல்களைத் தருவதற்கு அதிக ஆற்றலை செலவிடுகிறோம்.
ஐந்தாவது, நாங்கள் மற்றவர்களோடு சேர்த்து செயல்படுகிறோம்
கடந்த ஆண்டு கோடை காலத்தில் உலகம் முழுவதும் உள்ள ஊடக நிறுவனங்களை பிபிசியின் சிறப்பு மாநாடு ஒன்றில் பங்கேற்கும்படி அழைத்தேன். மக்கள் நிறுவனமாக பிபிசியின் ஆற்றல் பல்வேறுபட்ட குழுமங்களை பொது நோக்கத்துக்காக ஒன்று திரட்டுவதை சாத்தியமாக்கியது.
ஃபேஸ்புக், மைக்ரோசாஃப்ட், கூகுள், ட்விட்டர், வால்ஸ்ட்ரீட் ஜர்னல், தி ஹிண்டு உள்ளிட்ட பல நிறுவனங்களோடு ஒரு கூட்டணியைக் கட்டமைப்பது இது.
உலக அளவில், பொய்த் தகவல்கள், ஒருதலை சார்பு, போலிச் செய்திகள் ஆகியவற்றை எதிர்கொள்வதற்கு உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதற்கு நம்மால் என்ன செய்ய முடியும் என்பதை ஆராய்வதே நோக்கம். இதனை ட்ரஸ்டட் நியூஸ் இனிஷியேட்டிவ் என்கிறோம்.
தீர்வு
இந்த சந்தர்ப்பத்தை நான் ஒரு வாய்ப்பாகவே பார்க்கிறேன். செய்தியில், உறுதியான தகவல்களில் மக்கள் கொண்டிருக்கிற நம்பிக்கையை மீட்டெடுக்கும் வாய்ப்பு இது. இந்த புதிய தசாப்தத்தின் முதல் சில ஆண்டுகளில் போலிச் செய்திகளா, நியாயமான, சுதந்திரமான செய்திகளா எவை வெல்லும் என்பது தீர்மானிக்கப்படும்.
செய்தியின் நம்பகத்தன்மை வெல்வதை உறுதிப்படுத்துவதன் மூலமாகவே ஜனநாயகத்தின் மீதான, ஜனநாயக நிறுவனங்களின் மீதான நம்பகத்தன்மையை, சமூகத்தின் மீதான விஸ்வாசத்தை நாம் உறுதிப்படுத்த முடியும் என்று டோனி ஹால் குறிப்பிட்டார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: