You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டெல்லி கலவரம்: இந்திய அரசு தடை செய்த சேனல்கள் மீண்டும் ஒளிபரப்பு
முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
தினத்தந்தி: "டெல்லி வன்முறை: 2 மலையாள சேனல்களுக்கு 48 மணிநேரம் தடை"
டெல்லியில் நடைபெற்ற வன்முறை தொடர்பான ஒளிபரப்பு மூலமாக சமூக நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவித்ததாக இரண்டு மலையாள செய்தி சேனல்களுக்கு 48 மணி நேரம் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.
டெல்லியில் கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி நடந்த வன்முறை தொடர்பான செய்திகளை, ஒரு சார்பாக ஒளிபரப்பியதாக மலையாள செய்தி தொலைக்காட்சிகளான ஏசியா நெட் நியூஸ் மற்றும் மீடியா ஒன் சேனல்களுக்கு 48 மணி நேரம் மத்திய அரசு தடை விதித்துள்ளது.
வெள்ளிக்கிழமை இரவு 7:30 மணியிலிருந்து 48 மணி நேரத்திற்கு தடை விதிப்பதாக தகவல் ஒலிபரப்புத்துறை தெரிவித்துள்ளது. ஏசியாநெட் நியூஸ் ஒரு வழிபாட்டுத்தலத்தின் மீதான தாக்குதலை மிகைப்படுத்தி காட்டியதாகவும், ஒரு சமுதாயத்திற்கு சாதகமாக செயல்பட்டது போல் தெரிவதாகவும் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை கூறியுள்ளது.
மீடியா ஒன் தொலைக்காட்சியின் செய்திகள் சிஏஏ ஆதரவாளர்களின் கலவரத்தின் மீது மட்டுமே கவனத்தை குவிப்பதாக இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
இரண்டு சேனல்களில் செய்தியாளர்களின் வார்த்தைகள் இரு சமுதாயத்திடையேயான நல்லிணக்கத்தை குலைக்கும் வகையில் இருந்ததாகவும் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
48 மணிநேரம் முடியும் முன்னரே அந்த சேனல்கள் இப்போது மீண்டும் ஒளிபரப்பப்பட்டு வருவதாக ஏ.என்.ஐ செய்தி தெரிவிக்கிறது.
இந்து தமிழ் திசை: "ஊழல் குற்றச்சாட்டில் சிக்கினால் பாஸ்போர்ட் கிடையாது"
மத்திய அரசு ஊழியர்கள் ஊழல் குற்றச்சாட்டின் கீழ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தாலோ விசாரணை நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தாலோ சம்பந்தப்பட்ட ஊழியர்கள் பாஸ்போர்ட் பெற முடியாது என்று மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அரசு ஊழியர்கள் பாஸ்போர்ட் பெற மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் அனுமதி தேவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர் மீது ஏதாவது கிரிமினல் வழக்கில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தாலும் அவர் பாஸ்போர்ட் பெற முடியாது.
மேலும், ஊழியர் இந்தியாவைவிட்டு வெளியே சென்றால், அதனால், ஏதாவது ஒரு நாட்டுடன் இந்தியாவின் நல்லுறவு பாதிக்கப்படும் என்றாலோ அல்லது மனு செய்தவருக்கு பாஸ்போர்ட் வழங்குவது பொதுநலன் சார்ந்ததாக இருக்காது என்று மத்திய அரசு கருதினாலோ அவருக்கு பாஸ்போர்ட் மறுக்க அதிகாரிகளுக்கு பாஸ்போர்ட் சட்ட விதிகளின்படி அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசின் அனைத்து துறை செயலாளர்களுக்கும் பணியாளர் நலத்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
டைம்ஸ் ஆஃப் இந்தியா - 'மாற்ற விரும்புகிறோம்' என்கிறார் நரேந்திர மோதி
குடியுரிமை திருத்த சட்டம், முத்தலாக் சட்டம், காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து உள்ளிட்ட விவகாரங்களில் ஏற்கனவே இருக்கும் நிலையை நாங்கள் மாற்ற விரும்புகிறோம். ஆனால், எங்களை எதிர்ப்பவர்கள், நாட்டை பின்தங்க வைப்பனவற்றை மாற்றுவதை விரும்பவில்லை என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி கூறியுள்ளார்.
எக்கனாமிக் டைம்ஸ் இதழின் நிகழ்ச்சி ஒன்றில் நேற்று ஆற்றிய உரையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
"தொழில் செய்பவர்கள் அனைவரும் நேர்மையற்றவர்கள் அல்ல. தங்கள் திட்டங்கள் தவறாகிப் போனதால் சிக்கலுக்கு உள்ளானவர்களுக்கு, அதிலிருந்து மீளும் வழியை நாங்கள் தருகிறோம்," என்று தொழில் துறையினர் குறித்து அவர் பேசினார்.
ஊழல் மற்றும் நெருக்கமானவர்களுக்கு முறைகேடாக ஆதாயம் செய்தல் ஆகியவற்றுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் மோதி கூறினார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: