You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"கொரோனா வைரஸ் குறித்த வதந்திகளை நம்பாதீர்கள்" - பிரதமர் நரேந்திர மோதி
கொரோனா வைரஸ் குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என்று இந்திய மக்களிடம் பிரதமர் நரேந்திர மோதி வலியுறுத்தியுள்ளார்.
தரம் மிக்க மருந்துப்பொருட்களை மக்களுக்கு குறைந்த விலையில் வழங்கும் நோக்கத்துடன் இந்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் பி.எம்.பி.ஜே.பி திட்டத்தின் பயனாளிகளிடம் காணொளி வாயிலாக கலந்துரையாடியபோது இந்த கருத்தை பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.
சீனாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய்த்தொற்றினால் உலகம் முழுவதும் 3,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி, 31 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து பேசிய நரேந்திர மோதி, "கொரோனா வைரஸ் தொடர்பாக எதை செய்ய வேண்டும், எதை செய்யக் கூடாது என்பது குறித்த வதந்திகளை மக்கள் நம்பக் கூடாது என்று நான் கோரிக்கை விடுக்கிறேன். இதுகுறித்து உங்களுக்கு எவ்வித சந்தேகம் இருந்தாலும் மருத்துவரை அணுகுங்கள்," என்று வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா பாதிப்பு - முக்கிய பேச்சுவார்த்தை
இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்துவது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் இன்று பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக ஏ.என்.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், நாட்டு மக்களிடையே கொரோனா வைரஸ் பரவல் குறித்த விழுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், அதுதொடர்பான குறுஞ்செய்திகள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் தரப்பில் அலைபேசி பயன்பட்டாளர்களுக்கு அனுப்பப்பட்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டோரின் எண்ணிக்கை நேற்று (வெள்ளிக்கிழமை) 31-ஆக அதிகரித்தது. டெல்லியில் உள்ள உத்தம் நகர் பகுதியில் வசிக்கும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது என்று அங்குள்ள குரு நானக் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் உள்ள ஆய்வகம் ஒன்றில் செய்யப்பட்ட ஆரம்பகட்ட சோதனைகள் அவர்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக தெரிவிக்கின்றன.
எனினும் புனேவில் உள்ள வைராலஜி இன்ஸ்டிட்யூட் தரவுள்ள ஆய்வு முடிவுகள் வந்த பின்னரே உறுதியாகத் தெரியவரும் என்று அமிர்தசரசு மாவட்ட நிர்வாகம் தெரிவிக்கிறது.
அவர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டால் இந்தியாவில் கொரோனா இருப்பவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: