CAA - NRC: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக தமிழகம் தழுவிய அளவில் நடந்த போராட்டங்கள்

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், போராட்டம் நடத்துபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பேரணி நடைபெற்றது.

இந்த போராட்டங்களில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் இந்து அமைப்புகளைச் சேர்ந்த முன்னணி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

சென்னையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் பா.ஜ.க தேசிய குழு உறுப்பினர் இல. கணேசன், மாநில பொதுச்செயலாளர், கே.எஸ்.நரேந்திரன், ராதாரவி மற்றும் பல பாஜக பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய இல.கணேசன், ஓட்டுக்காகத் தேச விரோத போக்கை திமுக கடைப்பிடிப்பதாகக் குற்றம்சாட்டினார்.

குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றி தேவையற்ற பிரச்சாரங்கள் நடைபெறுவதாக ராதாரவி தெரிவித்தார்.

கோவை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் நேற்று மாலை பேரணி நடைபெற்றது.

இதில் மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் பங்கேற்றார்.

கூட்டத்தில் பேசிய அவர், "நாங்கள் இங்கு காவல்துறையின் முறையான அனுமதி பெற்று பேரணி நடத்துகிறோம். ஆனால் சென்னை வண்ணாரப்பேட்டையில் போலீசாரின் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடந்தது. அவ்வாறு அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்தனர். அதைக் கண்டித்தும் போராட்டம் நடத்தப்பட்டது,"என்றார்.

மேலும் அவர், "தமிழகத்திலேயே அதிகளவு உயிர் தியாகம் செய்த கட்சி என்றால் அது பாரதீய ஜனதா கட்சிதான். குடியுரிமை திருத்த சட்டம் நாட்டில் அமல்படுத்தப்பட்டு விட்டது. அந்த சட்டத்தைத் திரும்பப் பெறும் நிலை இல்லை," என்றார்.

ஈரோட்டில் பாரதிய ஜனதா கட்சியினர் சார்பில் ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள காலிங்கராயன் விருந்தினர் மாளிகையிலிருந்து கலெக்டர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாகச் சென்று கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டத்தை ஈரோடு பா.ஜ.க.வினர் நடத்தினர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: