You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
CAA Protest: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான சட்டமன்ற முற்றுகை போராட்டத்திற்கு உயர் நீதிமன்றம் தடை
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் புதன்கிழமை நடத்துவதாக அறிவித்திருந்த தமிழக சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
சட்டமன்ற முற்றுகை போராட்டத்துக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று தொடரப்பட்ட முதன்மை வழக்கு மார்ச் 11ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதால், முற்றுகைப் போராட்டம் நடைபெறுமா என்பது தெரியவில்லை.
ஆனால், இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய மனித நேய ஜனநாயகக் கட்சித் தலைவரும் எம்.எல்.ஏ.வுமான தமுமின் அன்சாரி "போராட்ட அமைப்பாளர்களை எதிர் மனுதாரராக சேர்க்கவில்லை என்பதால் நீதிமன்றம் விதித்த தடை எங்களுக்குப் பொருந்தாது. திட்டமிட்டபடி நாளை சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் நடைபெறும்," என்று தெரிவித்தார்.
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரவேண்டும் எனக் கோரி கடந்த ஐந்து நாட்களாக சென்னை வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடந்துவருகின்றன.
இந்நிலையில், இந்த போராட்டத்தின் அடுத்தகட்டமாக, தமிழக சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் ஒன்றை நடத்தப்போவதாக இஸ்லாமிய அமைப்புகள் தெரிவித்திருந்தன. இந்த போராட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி வராகி என்பவர் திங்களன்று வழக்கு தொடர்ந்திருந்தார்.
மனுதாரர் வராகி சார்பில் வைக்கப்பட்ட வாதத்தில், போராட்டம் நடத்துபவர்கள் சட்டமன்றத்தை முற்றுகையிட முடிவு செய்துள்ளனர்.
இந்தப்போராட்டத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள், கல்லூரி, பள்ளிக்குச் செல்பவர்கள், பணிக்குச் செல்பவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை எதுவும் ஏற்படக்கூடாது என்பதற்காக முற்றுகை போராட்டத்திற்கு தடைவிதிக்கவேண்டும் என கோரப்பட்டது.
வராகியின் வழக்கை அவரச வழக்காக விசாரிக்கவேண்டும் என்ற கோரிக்கை திங்களன்று நிராகரிக்கபட்டது. செவ்வாயன்று அவரது மனு நீதிபதிகள் சத்திய நாராயணன் மற்றும் ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசரணைக்கு வந்தது.
விசரணையில், பொதுவாக போராட்டத்திற்கான அனுமதி ஐந்து நாட்களுக்கு முன்னர் பெறப்படவேண்டும் என பிப்ரவரி 13ம் தேதி காவல்துறையினரால் அறிவிப்பு செய்யப்பட்டது என்றும், போராட்டம் நடத்துவதற்கு இரண்டு நாட்கள் முன்னதாக அனுமதி கேட்டதால், அதனை அனுமதிக்க முடியாது என காவல்துறை சார்பில் வாதம் வைக்கப்பட்டது. இதன் காரணமாக முற்றுகை போராட்டத்திற்கான அனுமதி அளிக்கப்படவில்லை என கூறப்பட்டது.
மேலும், வண்ணாரப்பேட்டை போராட்டத்தில் நடந்த தடியடி உள்ளிட்ட காரணங்களுக்காக 12 வழக்குகள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் கூறப்பட்டது.
போராட்டம் தொடர்பான வராகியின் வழக்கு மார்ச் 11ம் தேதி விசாரிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
பிற செய்திகள்:
- ராணுவத்தில் பெண்களுக்கு சம உரிமை வழங்கும் தீர்ப்பு: என்ன கிடைக்கும்? என்ன கிடைக்காது?
- "இது இந்தியா இல்லை, பாகிஸ்தான்" - போராட்டக்காரர்களை விடுவித்த பாகிஸ்தான் நீதிபதி
- "தமிழகத்தில் சட்டம் , ஒழுங்கை குலைக்க எதிர்க்கட்சிகள் முயல்கின்றன": முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
- மீண்டும் கை கோர்த்த மஹிந்த - மைத்திரி: சஜித் - ரணில் தரப்பு தொடர்ந்து இழுபறி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: