You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி: "தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை குலைக்க எதிர்க்கட்சிகள் முயல்கின்றன"
குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரம் குறித்து மக்களை ஏமாற்றி, தவறான தகவல்களைப் பரப்பி, அமைதியாக உள்ள தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை கெடுக்க எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியிருக்கிறார்.
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் இன்று பேசிய தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் மனோ தங்கராஜ், குடியுரிமை திருத்தச் சட்டத்தால் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்படுவதாகத் தெரிவித்தார்.
மனோ தங்கராஜ் கூறிய கருத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்துப் பேசினார். "குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்பபெறும் அதிகாரம் மத்திய அரசிடம்தான் இருக்கிறது; மாநில அரசிடம் இல்லை. தி.மு.கவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய அரசிடம் வலியுறுத்துங்கள். மேலும், குடியுரிமை திருத்தச் சட்டத்தால் தமிழ் மண்ணில் பிறந்த எந்த சிறுபான்மையினருக்கும் பாதிப்பில்லை. இந்தச் திருத்தச் சட்டத்தால் யார் பாதிக்கபட்டார்கள் என்பதை திமுக விளக்க வேண்டும்" என்று கூறினார்.
இந்தச் சட்டத்தால் பாதிப்பு ஏற்படுவதால்தான் மற்ற மாநிலங்களில் இச்சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படுவதாக கூறப்பட்டதற்கு பதிலளித்த முதலமைச்சர், குடியுரிமைத் திருத்தச் சட்ட விவகாரத்தை வைத்து, மக்களிடம் தவறான தகவலை பரப்பி, தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை கெடுக்க எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: