You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"திராவிடர் இயக்கம் போட்ட பிச்சை": ஆர்.எஸ். பாரதி பேச்சால் சர்ச்சை
"ஆதிதிராவிடர்களுக்கு நீதிமன்றப் பதவி கிடைத்தது திராவிட இயக்கம் போட்ட பிச்சை" என தி.மு.கவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ். பாரதி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. தன் பேச்சுக்கு வருத்தம் தெரிவித்திருக்கிறார் ஆர்.எஸ். பாரதி.
சமீபத்தில் கூட்டம் ஒன்றில் திராவிட இயக்கத்தின் சாதனைகள் குறித்துப் பேசிய தி.மு.கவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ். பாரதி, அந்த உரையில் குறிப்பிட்ட பல விஷயங்கள் பல தரப்பினரையும் மரியாதைக் குறைவாகக் குறிப்பிட்டதாக சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
சென்னை அன்பகத்தில் பிப்ரவரி 14ஆம் தேதியன்று நடந்த கலைஞர் வாசகர் வட்ட விழாவில் பேசிய ஆர்.எஸ். பாரதி, "தி.மு.க. ஒழிந்தால்தான் தமிழ்நாட்டுக்கு விமோசனம் என எச். ராஜா பேசுவதற்கு அந்த தைரியத்தைத் தந்தது யார்? நாமெல்லாம் கோழைகளாகிவிட்டோம். இந்தியாவிலேயே தமிழகம் தலைசிறந்த மாநிலமாக இருக்கிறதென்று சொன்னால் அதற்கு திராவிட இயக்கம்தான் காரணம். வட மாநிலத்துல இருக்குறவனுக்கு அறிவே கிடையாது. ஓப்பனா சொல்றேன். ஒரு ஹரிஜன்கூட மத்தியப் பிரதேசத்தில ஹைகோர்ட் ஜட்ஜ் கிடையாது. தமிழ்நாட்டில் கலைஞர் ஆட்சிக்கு வந்த பிறகு வரதராஜனை உட்கார வைத்தார். அதற்குப் பிறகு ஏழெட்டு ஆதிதிராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள் ஜட்ஜாக இருந்தார்கள் என்றால், அது திராவிட இயக்கம் போட்ட பிச்சை" என்று பேசினார்.
மேலும் எச். ராஜா குறித்தும் அவர் அவதூறாக பேசியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், தொலைக்காட்சியினர் குறித்தும் கடுமையாக விமர்சித்தார். "இந்த டிவிகாரனுக இருக்கானுக பாருங்க.. அவனுக மாதிரி அயோக்கியனுக உலகத்திலேயே எவனும் கிடையாது. பம்பாயில இருக்க ரெட் லைட் ஏரியா மாதிரி நடத்துறானுக கம்பனிய..காசு வருதுங்கிற காரணத்துக்காக எதை வேணா கிளப்பிவிடுறது" என்று குறிப்பிட்டார்.
ஆர்.எஸ். பாரதி பேசிய இந்தப் பேச்சின் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி கடும் கண்டனத்திற்குள்ளாகியிருக்கிறது.
ஊடகங்களைப் பற்றி அவர் பேசிய கருத்துக்களுக்காக சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனங்களைத் தெரிவித்திருக்கிறது. "தி.மு.கவின் அமைப்புச் செயலாளர் பொறுப்பு வகிக்கும் மூத்த அரசியல்வாதியான ஆர்.எஸ். பாரதி நிதானம் தவறி, தரம்தாழ்ந்து இப்படி கீழ்த்தரமாக பேசியிருப்பதை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது. ஆர்.எஸ் பாரதி அவர்கள் தனது தரக்குறைவான பேச்சுக்கு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்துவதுடன் , இது போன்ற செயல்களை திமுக தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் கண்டிக்க வேண்டும்" என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
"ஆர்.எஸ். பாரதியின் பேச்சு சமூக நீதி பார்வையே அவரிடம் இல்லை என்பதைத்தான் காட்டுகிறது. இப்படிப் பேசுவதன் மூலம் பெரியார், கலைஞரை கொச்சைப்படுத்துகிறார் அவர். நீதிக்கட்சி துவங்கி சமூக நீதிக்காக பாடுபட்ட அத்தனை தலைவர்களையும் தன் பேச்சின் மூலம் கொச்சைப் படுத்தியிருக்கிறார் ஆர்.எஸ். பாரதி.
இட ஒதுக்கீடு என்பதை பார்ப்பனர்கள்தான் ஏதோ சலுகை போல பேசுவார்கள். ஆர்.எஸ் பாரதியும் அப்படிப் பேசுவதைப் பார்த்தால், வர்ணாசிரம எண்ணம்தான் அவரிடம் ஊறிப்போயிருக்கிறது என்று தோன்றுகிறது. மூத்த வழக்கறிஞராகவும் மூத்த தலைவராகவும் இருப்பவரிடம் இப்படி ஒரு சிந்தனை இருப்பது, அவர் இன்னும் ஜாதிய உளவியலுக்குள் செயல்படுவதைத்தான் காட்டுகிறது. இதை ஏற்க முடியாது.
திராவிட இயக்கத்தை வீழ்த்துவதன் மூலம் தமிழ்நாட்டில் காலூன்ற சங்க பரிவார அமைப்புகள் முயற்சி செய்துவரும் சூழலில் இதுபோன்ற கருத்துகள் அவர்களுக்கு உதவிசெய்வதாகவே அமையும்" என்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு.
இந்த கண்டனங்களை அடுத்து தனது பேச்சிற்கு ஆர்.எஸ். பாரதி வருத்தம் தெரிவித்திருக்கிறார். தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து எழுதியிருக்கும் அவர், "பிப்ரவரி 14ம் தேதி சென்னை அன்பகத்தில், கலைஞர் வாசகர் வட்டம் சார்பாக நடந்த நிகழ்ச்சியில் நான் பேசிய சில வார்த்தைகள் தாழ்த்தப்பட்ட மக்கள் மனதை புண்படுத்தியதாக அறிகிறேன். அதற்காக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். என்னுடைய நோக்கம் தாழ்த்தப்பட்ட மக்கள் மனதை புண்படுத்துவது அல்ல. கலைஞர் அம்மக்களுக்காக செய்த நலத்திட்டங்களை எடுத்து கூறுவதே ஆகும்" என்று சொல்லியிருக்கிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: