You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சிவபெருமானுக்கு ரயிலில் இருக்கை ஒதுக்கப்பட்டது உண்மையா?
வாரனாசி - இந்தூர் வழித்தடத்தில் செல்லும் காசி மஹாகாள் எக்ஸ்பிரஸ் ரயிலில் சிவபெருமானுக்காக எந்த பிரத்யேக இருக்கையும் ஒதுக்கப்படவில்லை என இந்திய ரயில்வே துறை இன்று (திங்கட்கிழமை) தெரிவித்துள்ளது.
உத்தரப் பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசத்தில் உள்ள மூன்று ஜோதிலிங்க ஸ்தலங்களை இணைக்கும் காசி மஹாகாள் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று ஞாயிற்றுக் கிழமை இந்திய பிரதமர் நரேந்திர மோதியால் வீடியோ கான்ஃப்ரன்ஸிங் மூலம் தொடங்கி வைக்கப்பட்டது.
அதில் பி5 பெட்டியில், 64ஆவது எண் இருக்கை ஒரு சிறிய சிவன் கோயில் போல மாறியுள்ளது.
பி5 பெட்டியில் 64ஆம் எண் இருக்கை கடவுளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், ஆகவே அது காலியாக விடப்பட்டுள்ளது என்றும், வடக்கு ரயில்வே செய்திதொடர்பாளர் தீபக் குமார் தெரிவித்துள்ளார் என பிடிஐ செய்தி நிறுவனத்தில் செய்தி வெளியானது.
"சிவனுக்காக இருக்கை ஒன்று ஒதுக்கப்பட்டுள்ளது இதுவே முதல்முறை, அந்த இருக்கை கடவுளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவிக்க அங்கு கோயில் வரையப்பட்டுள்ளது," என்றும் தீபக் குமார் தெரிவித்தார்.
இந்த இருக்கையை சிவனுக்காக ஒதுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த இருக்கை ஒரு சிறிய கோயிலை போல் மாறியுள்ளது. என்று ஏஎன்ஐ செய்தி வெளியிட்டிருந்தது.
இதனை தொடர்ந்து சமூக வலைதலத்தில் பெரும் விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில் இன்று, "ரயிலில் புதிய திட்டத்திற்கு பூஜை செய்து ஆசி பெறவே தற்காலிகமாக சிவனின் புகைப்படம் வைக்கப்பட்டுள்ளது. இது முதல் பயணத்திற்காக மட்டுமே" என இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது என்கிறது ஏஎன்ஐ செய்தி முகமை.
"மேலும் 20ஆம் தேதியிலிருந்து தொடங்கப்படும் இந்த ரயில் போக்குவரத்தில் இம்மாதிரியாக எந்த இருக்கையும் இல்லை," எனவும் இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
புனித்தலங்களுக்கு செல்லும் ரயில் என்பதால் இதில் வெறும் சைவ உணவு மட்டுமே பரிமாறப்படும் என்றும், பக்தி பாடல்கள் ஒலிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: