You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழ்நாடு பட்ஜெட் 2020: முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?
தமிழக அரசின் 2020-2021ஆம் நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை இன்று (வெள்ளிக்கிழமை) நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் தமிழகத்தின் துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் நிதிநிலை அறிக்கையை வாசிக்க தொடங்கினார்.
அவர் இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் சில முக்கிய தகவல்கள்:
- கீழடியில் கிடைத்த பொருட்களை காட்சிப்படுத்தும் அருங்காட்சியம் அமைக்க 12.21 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.
- அதிகபட்சமாக பள்ளிக் கல்வித்துறைக்கு 34,181.73 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
- ஊரக வளர்ச்சித் துறை, சுகாதாரத்துறை, நெடுஞ்சாலைத்துறை, மின்சாரத்துறை கல்வித்துறை ஆகிய துறைகளுக்கு 10,000 கோடிக்கு மேலும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- 11 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க 1200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்துக்கு 966 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
- அம்மா உணவக திட்டத்திற்கு 100 கோடி ஒதுக்கப்படும். பள்ளிகளில் மதிய சத்துணவுத் திட்டத்திற்கு ரூ.1,863 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உணவு மானியத்துக்கு 6500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
- பெண்கள் பாதுகாப்புக்கான நிர்பயா திட்டத்துக்கு 71 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசுப் பேருந்துகளில் சிசிடிவி அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தமிழகத்தில் 13 பணிபுரியும் பெண்கள் விடுதி அமைக்கப்படும்; முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் திட்டத்திற்கு 956.21 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
- சிட்லபாக்கம் ஏரி மறுசீரமைப்பு பணிக்கு 25 கோடி ஒதுக்கீடு.
- 2020 -2021ஆம் நிதியாண்டில் தமிழகத்தின் கடன் 4,56,660 கோடி ரூபாயாக இருக்கும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது.
- இது நடப்பு தமிழக சட்டப்பேரவையின் கடைசி முழுமையான நிதிநிலை அறிக்கையாகும்.
அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், இந்த பட்ஜெட்டில் மக்களை கவரும் பல நலத்திட்டங்கள் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: