You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காவிரி டெல்டா: வேளாண் பாதுகாப்பு மண்டலமாக மாறும் என்று அறிவிப்பு; சட்ட வடிவம் பெறுமா? - சந்தேகம் எழுப்பும் செயற்பாட்டாளர்கள்
- எழுதியவர், மு. நியாஸ் அகமது
- பதவி, பிபிசி தமிழ்
சர்ச்சை மிகுந்த திட்டமாக அறியப்பட்ட ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டம் காவிரி டெல்டா பகுதியில் செயல்படுத்தப்படமாட்டாது என்றும் டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும் என்றும் தமிழக முதல்வர் பழனிசாமி இன்று சேலத்தில் அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு சமூக ஊடகங்களில் கொண்டாடப்படுகிறது. அதுமட்டுமல்ல இந்த அறிவிப்புக்கு தாங்கள்தான் காரணம் எனப் பல அமைப்புகள் உரிமை கோரியும் உள்ளன. ஆனால், அதே நேரம் இந்த அறிவிப்பு குறித்து சந்தேகங்களையும் எழுப்புகின்றனர் செயற்பாட்டாளர்கள்.
இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய சூழலியல் செயற்பாட்டாளர் நித்தியானந்த் ஜெயராமன், "இந்த அறிவிப்புக்கு சட்ட வடிவம் கொடுக்கப்பட்டால் மகிழ்ச்சிதான். ஆனால், எங்களுக்கு சில சந்தேகங்களும் இருக்கிறது," என்கிறார்.
சந்தேகம் மற்றும் அச்சம்
அவர், " ஒரு பெட்ரோல் கெமிக்கல் நிறுவனம் தமிழக அரசுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறது. அதன்படி அவர்கள் 50 ஆயிரம் கோடி வரை இங்கு முதலீடு செய்யப்போவதாக அறிவித்திருக்கிறார்கள். இதன்படி அவர்கள் கடலூர் மாவட்டத்தில் ஒரு பெட்ரோல் கெமிக்கல் வளாகத்தை அமைக்கப் போகிறார்கள். இதுதான் எங்களுக்கு சந்தேகத்தையும், அச்சத்தையும் ஒரு சேர ஏற்படுத்துகிறது.கடலூர் மாவட்டம் வேளாண் மண்டலத்திற்குள் வராதா?," என்று கேள்வி எழுப்புகிறார்..
ஹைட்ரோகார்பன்
பூவுலகு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கோ. சுந்தராஜனின் கருத்தும் இது போலவே உள்ளது.
முதல்வரின் அறிவிப்பை வரவேற்பதாகக் கூறும் அவர், அமைச்சரவையைக் கூட்டி இதற்கான அவசர சட்டத்தை பிரகடனப்படுத்த வேண்டும் என்கிறார்,
அவர், "பெட்ரோல் தொடர்பான நடவடிக்கைகளை முழுவதுமாக காவிரி பகுதியில் நிறுத்துவார்கள் என நான் நம்பவில்லை. ஆனால், ஹைட்ரோகார்பன் தொடர்பான கொள்கைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவே தெரிகிறது. குறைந்தபட்சம் தேர்தலை மனதில் வைத்தாவது ஹைட்ரோகார்பன் நடவடிக்கைகளைக் காவிரி பகுதியில் மேற்கொள்ளமாட்டார்கள் என நம்புகிறோம்," என்கிறார்.
ஓ.என்.ஜி.சி
காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்துள்ளதை வரவேற்று அறிக்கை வெளியிட்டுள்ள விவசாய சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன், "ஓ.என்.ஜி.சி செயல்பாடுகளைக் காவிரி டெல்டா பகுதிகளில் தடுத்து நிறுத்த வேண்டும்," எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர், "திருவாரூர் மாவட்டத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் கச்சா எண்ணெய் எடுக்கிறோம் என்கிற பெயரில் ஆதிவிடங்கம், அடியக்கமங்கலம் கிராமங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு விவசாயிகளிடம் கட்டாய நில எடுப்பு பணிகளிலும், கனரக வாகனம் செல்ல வீடுகளை காலி செய்ய மிரட்டலிலும் ஈடுபடுகிறது. இதனை மறுக்கும் விவசாயிகள் மீது காவல்துறை மூலம் பொய் வழக்கு போட்டு அச்சுறுத்தி வருகிறது. இதனை தடுத்து நிறுத்திட வேண்டும். மேலும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்ட நான் உட்பட ஆயிரக்கணக்கான விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும்," என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை வலியுறுத்தி உள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: